படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகேயுள்ள சூளகிரியில் பெட்ரோல் ஒதுக்கிடத்தில் (பங்க்) தணிக்கையின் போது முத்திரை வைப்பதற்கு 24 ஆயிரம் ரூபாய் கையூட்டு வாங்கிய கிருட்டிணகிரி மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளரை மாவட்ட கையூட்டு ஒழிப்புத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

ஒசூர் அருகே சூளகிரியில் உள்ள இந்தியன் எண்ணை நிறுவனமே ஏற்று நடத்தும் பெட்ரோல் ஒதுக்கிடத்தில் கிருட்டிணகிரி மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் ராமு என்பவர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பெட்ரோல் ஒதுக்கிடத்தில் உள்ள பம்புகளை ஆய்வு செய்தபோது அவற்றின் தன்மை குறித்து ஆராய்ந்து அவற்றிற்கு முத்திரை வைக்க வேண்டும்.

இவ்வாறு மூடி முத்திரை பதிக்க வேண்டுமானால் தனக்கு 24 ஆயிரம் ரூபாய் கையூட்டாக வழங்க வேண்டும் என இந்த பெட்ரோல் ஒதுக்கிடத்தில் பணியாற்றும் இந்திய எண்ணை நிறுவனத்தின் மேலாளர்களிடம்,  அவர்களும் அரசு சார்ந்த நிறூவன ஊழியர்கள் என்று தெரிந்தும், தொழிலாளர் துணை ஆய்வாளர் ராமு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெட்ரோல் ஒதுக்கிட மேலாளர்கள் இதுகுறித்து மாவட்ட கையூட்டு ஒழிப்பு காவலர்களிடம் தகவல் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து கையூட்டு ஒழிப்பு காவலர்கள் பெட்ரோல் ஒதுக்கிடத்தின் மேலாளர் சரவணன் என்பவர் மூலம் வேதியல் பொடி தடவிய 24 ஆயிரம் ரூபாய் பணத்தை தொழிலாளர்த்துறை துணை ஆய்வாளர் ராமுவிடம் கையூட்டாக கொடுத்துள்ளனர்.

அப்போது மறைந்திருந்த காவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.