படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர் பகுதிகளிலும் இறப்பு செய்தி கேட்டவுடன் பாதுகாப்பு கருதி கடைகாரர்கள் தாங்களாக முன்வந்து கடைகள் விற்பனை நிறுவனங்களை அடைத்தனர். அதேபோல அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் ஒட்டமும் படிப்படியாக நிறுத்தப்பட்டது. கருநாடகா மாநிலத்திலிருந்து ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசுபேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழக மற்றும் கருநாடகா மாநில எல்லைகளில் இருமாநில காவலர்கள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு குவிக்கப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் சரக்குந்துகள் உள்ளிட்ட அனைத்து வண்டிகளும் விரைவாக மாநில எல்லைக்கு பயணித்தது.

வண்டிகளின் நெருக்கத்தால் கருநாடகா மாநிலம் அத்திப்பள்ளி பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு மற்றும் அசம்பாவித நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கருநாடகா மாநிலத்திலிருந்து தமிழம் நோக்கி வந்த கர்நாடகா பதிவெண்களை கொண்ட அனைத்து வண்டிகளையும் அம்மாநில காவல்துறையினர் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தி மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்பினர்.

கருநாடகா மாநில எல்லைப்பகுதியில் இயங்கி வந்த தனியார் மதுபான கடைகள் அனைத்தும் மாலை முதல் அடைக்கப்பட்டது. இன்றும் மதுபான கடைகள் அடைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநில எல்லையில் தொடர்ந்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.