படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே உழவு நிலத்தில் மது அருந்தி கொண்டிருந்த குடிகாரர்களை கண்டித்த உழவரின் மண்டை உடைக்கப்பட்டது.

அவரை தாக்கிய 3 குடிமகன்களில் இருவரை காவலர்கள் கைது செய்தனர். தப்பியோடி மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.

ஒசூர் அடுத்த தேன்கனிகோட்டை அருகேயுள்ள லக்கச்சந்திரம் ஊரை சேர்ந்நதவர் உழவர் ராசேந்திரன்.

இவருக்கு சொந்தமான உழவு நிலம் தேன்கனிகோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ளது. இந்த நிலத்தில் அவர் நிலக்கடலை செடிகளை பயிரிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் இயங்கி வரும் அரசுமதுபானக்கடையில் மதுகுப்பிளை வாங்கிய 3 பேர் ராசேந்திரனின் நிலக்கடலை தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற ராசேந்திரன் பார்த்து அவர்களை கண்டித்துள்ளார்.

விளைநிலத்தில் மதுஅருந்தி பயிர்களை சேதப்படுத்தாதீர்கள் என குடிகாரர்களிடம் கூறியுள்ளார். இதனால் மதுஅருந்திய 3 பேரும் ராசேந்திரனிடம் வாய்த்தகறாறு செய்தனர்.

இதனையடுத்து 3 பேரும் அவரை கல்லாலும் மதுகுப்பிகளாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் ராசேந்திரனுக்கு மண்டை உடைந்து முகம், வாய், கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவத்திற்காக அனுப்பி வைத்தனர்.

 

அவர் அளித்த புகாரின் பேரில் தேன்கனிகோட்டை காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து உழவர் ராசேந்திரனை தாக்கிய அருண் குமார், சந்தோச் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பியோடிய 3 ஆம் நபரான நவீன் குமாரையும் காவலர்கள் தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதல் நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.