படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் உழவர்சந்தை முன்பு வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும், இதனால் தங்களது விற்பனை பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் உழவர்சந்தை உழவர்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒசூர் உழவர் சந்தையில் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி ஊர்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உழவர்கள் கடைகள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

உழவர்கள் தங்களது தோட்டங்களில் விளையும் தக்காளி, பீன்சு, கேரட், முருங்கை, முட்டைகோசு உள்ளிட்ட பலவகையான விளை பொருட்களை கொண்டு வந்து நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் உழவர் சந்தையில் கடைகள் வைத்துள்ள உழவர்கள் தங்களது விற்பனைக்கு போட்டியாக  உழவர் சந்தை முன்பு அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஒசூர் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஒசூர் உழவர் சந்தை முன்பு 500க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகளினால் உழவர்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் சந்தையின் வெளிப்புறத்தில் உள்ள சாலையோர கடைகளிலே அனைத்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். இதனால் உழவர் சந்தையினுள் கடைகள் வைத்துள்ள உழவர்களுக்கு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனையாகாத காய்கறிகள் அனைத்தையும் உழவர்கள் குப்பைகளில் கொட்டும் நிலை உள்ளது. மேலும் இந்த கடைகளால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

உழவர்சந்தையின் முன்பு 100 மீட்டர் தொலைவிற்கு தனிநபர்கள் யாரும் கடைகள் வைக்கக்கூடாது என சட்டம் உள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தும் இங்கு பின்பற்றப்படுவதில்லை, உழவர்சந்தை உழவர்களுக்கு இடையூராக உள்ள இந்த நடைபாதை கடைகளை அகற்றி தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

நேர்காணல் : திரு லோகேஷ், உழவர், உழவர்சந்தை, ஒசூர் மற்றும்  திரு சீனிவாசன்,  உழவர், உழவர்சந்தை, ஒசூர்