படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார். இருவரது உடல்களும் பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் சபான், மற்றும் தபேந்தர். இவர்கள் இருவரும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை பகுதிக்கு சென்றுள்ளனர் அங்கு இருவரும் மதகு அருகே தண்ணீர் வெளியேறும் பகுதில் தண்ணீருக்குள் சென்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு உள்ள பள்ளத்தில் இருவரும் தவறி விழுந்துள்ளனர்.

இதில் தபேந்தர் என்பவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சபான்  என்பவரை அருகில் நின்ற ஒசூர் தனியார்  கல்லூரி மாணவர் கேசவன் என்பவர் காப்பாற்ற சென்றுள்ளார்.  அப்போது கேசவன் அணை நீரில் மூழ்கி உள் இழுக்கப் பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . இதில் சப்பான் உயிர் தப்பினார்

இது குறித்து அறிந்த அணை பாதுகாவலர்கள் ஓசூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

மேலும் இது குறித்து தகவலறிந்த அட்கோ காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இருவரது உடலும் கண்டெடுக்கப்பட்டது.

வடமாநில வாலிபரை காப்பாற்ற சென்ற மாணவர் கேசவன் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் ஒசூர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு கெலவரபள்ளி அணைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது