படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது.

ஒசூர் அருகே பாகலூர், பேரிகை, உத்தனப்பள்ளி, தளி, தேன்கனிகோட்டை, இராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களில் தக்காளியை பயிரிட்டு அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

தக்காளி பழங்களின் விலை சில நேரங்களில் உச்சத்தை தொட்டு உழவர்களை மனம் குளிரச்செய்கிறது. சாகுபடி பகுதி கூடுதலாகி உற்பத்தியும் கூடும் நேரங்களில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்து உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்கிறது.

இந்த நிலையில் தற்போது ஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உழவர்களுக்கு செலவாகிறது.

தற்போது தக்காளி உற்பத்தி அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது.

சந்தைகளில் 25 கிலோ எடை கொண்ட தக்காளி பழங்கள் பெட்டி 50 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கும் விலை போகிறது.

கடந்த சில திங்களுக்கு முன் ஒரு 25 கிலோ தக்காளி பழங்கள் பெட்டி 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விலை போனது.

ஆனால் தற்போது உற்பத்தி செலவிற்கு தக்காளி பழங்கள் விலை போகாததால் உழவர்கள் தக்காளி பழங்களை பறிக்காமல் தோட்டங்களில் அப்படியே விட்டுள்ளனர்.

சிலர் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தக்காளி பழங்களை உணவாக அளித்து வருகின்றனர்.

நேர்காணல் : நஞ்சப்பா – உழவர், குருபட்டி – ஊர்