திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்

திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்

திருப்பதியில் பிடிபட்டார் முகிலன்

சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பல போராட்டங்களை மக்களிடம் முன்னெடுத்து வந்த முகிலன் கடந்த 5 திங்கள்களாக தலைமறைவு வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார்.

அவர் தொடர்வண்டி பயனத்தின் போது திடீர் என்று காணாமல் போனதால், தமிழக அரசு காவல் துறை மீது பிற சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இத்தகைய சூழலில், சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் ஆந்திர மாநிலம், திருப்பதியில் காரி கிழமை (னேற்று 06.07.2019) பிடிபட்டார்.

அவரை ஆந்திர மாநில காவலர்கள், தமிழக சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் ரெ.முகிலன் (52).

சூழலியல் செயல்பாட்டாளரான முகிலன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

தூத்துக்குடியில் ச்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காவலர்கள் நடத்தி துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை சென்னையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.

பின்னர் அவர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அதன் பின்னர் முகிலனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அதே வேளையில் முகிலன், மதுரையும் செல்லவில்லை. மேலும் அவரது செல்லிடப் பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

முகிலன் திடீரென காணாமல் போனது தமிழக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து எழும்பூர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான கென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகிலனை மீட்டுத் தருமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் முகிலனை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி வந்தனர். மேலும் சில அமைப்புகள், முகிலனை மீட்டுத் தருமாறு போராட்டத்திலும் ஈடுபட்டன.

சிபிசிஐடி விசாரணை:

இந்நிலையில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையிலும், முகிலனை மீட்கும் வகையிலும் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் முகிலனை கண்டறிவதிலும் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதேவேளையில் சென்னை உயர்நீதிமன்றம், முகிலனை விரைந்து கண்டுபிடித்து மீட்கும்படி சிபிசிஐடிக்கு அறிவுறுத்தி வந்தது.

திருப்பதியில் பிடிபட்ட முகிலன்:

இந்நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் முகிலன் பிடிபட்டதாக காரி கிழமை தகவல் பரவியது.

மேலும் முகிலனை திருப்பதி தொடர்வண்டி நிலையத்தில் ஆந்திர காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியும், ச்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் முகிலன் கூக்குரலிடும் காணொளி காட்சியும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதற்கிடையே, முகிலன் திருப்பதியில் சிக்கியிருப்பதை தமிழக காவல்துறை உயர் பொருப்பில் உள்ள அலுவலரகள் இரவு உறுதி செய்தனர்.

இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், முகிலனை அழைத்து வர திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தமிழக சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு:

அதற்குள் ஆந்திர மாநில காவல்துரையும், இருப்புப்பாதை பாதுகாப்புப் படையினரும் முகிலனை திருப்பதியில் இருந்து தொடர்வண்டி மூலம் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அழைத்து வந்தனர்.

அங்கு தமிழக காவல்துறையினரிடம் முறைப்படி முகிலனை ஒப்படைத்தனர்.

தமிழக போலீஸார், முகிலனிடம் உடனடியாக விசாரணை செய்தனர். நள்ளிரவுக்கு பின்னர் முகிலன் சிபிசிஐடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சிபிசிஐடி அலுவலர்கள் முகிலனை கமுக்கமான இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முகிலனை சென்னைக்கு ஞாயிற்றுக் கிழமை அழைத்து வந்து, நீதிமன்றத்தில் நேரில் நிறூத்த நடவடிக்கையில் சிபிசிஐடியினர் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன முகிலன் 5 திங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டிருப்பது காவல்துறையினரிடம் நிம்மதி அடையச் செய்திருக்கிறது.

5 திங்களாக முகிலன் எங்கு இருந்தார், என்ன செய்தார் என்ற கோணத்தில் அடுத்தக் கட்ட விசாரணையை, சிபிசிஐடி அலுவலர்கள் தொடங்க உள்ளனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: