பூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்

பூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்

அமேசான் நிகழ்நிலை தளத்தில் குழந்தைகளுக்கான புரத உணவு குறித்து தேடும் பொழுது, கண்ணில் பட்டது, சுவர்க்கோழி பூச்சி -யை அவித்து பொடியாக்கிய மாவு!!!

விலை, 1100 சுவர்க்கோழி பூச்சிகளால் ஆன ஒரு மாவு பொட்டலம் வெறும் ரூபாய் 2200 மட்டும்!!! அதுவும், தாய்லாந்தில் இருந்து உங்களுக்காக விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பு முழக்கம் என்னவென்றால், அமெரிக்க தரச் சான்று பெற்ற சுவர்க்கோழி பூச்சி மாவு என்று.

ஏன் சுவர்க்கோழி பூச்சி மாவு?

உலகம் முழுதும் பல பழங்குடி மக்கள், நம் ஊர் பழங்குடிகளையும் சேர்த்து, பூச்சிகளை உணவாக உண்ணும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.

பொதுவில், ஈசல், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை வறுத்து உண்பதை நாம் பார்த்திருக்கலாம் அல்ல அது குறித்து கேள்வி பட்டிருக்கலாம்.

பூச்சிகளில் புரத சத்து கூடுதல். மேலும் அவற்றில் பல கனிம உப்புகளின் அளவும், கூடுதல்.

விலையில்லாமல், அருகில் கிடைக்கும் புரதச்சத்து மற்றும் கனிம சத்து அடங்கிய உணவாக பூச்சிகள் இருப்பதால் அவற்றை பழங்குடிகள் உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது.

மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன் போன்ற நாடுகளுக்கு சென்று வருபவர்க்ளுக்கு இந்த பூச்சி உணவு உணவகங்களிலும் வழங்கப்படுகிறது என்பது தெரிந்திருக்கும்.

இதையே அமெரிக்க பொருள் உற்பத்தியாளர்கள், பூச்சி மாவு என்று ஒரு சந்தைபடுத்தப்படத்தக்க ஒரு பொருளை உருவாக்கி சந்தை படுத்துகின்றனர்.

இன்றைய சூழலில் மனித உணவு பழக்கம்

இன்றைய சூழலில், நாம் ஏற்கனவே, நமது மண்ணை நமது உணவு தேவைக்காக, குறிப்பாக நமது புரத தேவைக்காக வீனடித்து வைத்துள்ளோம்.

நாம் வாழுகின்ற இந்த கோளில் சுமார் 77 விழுக்காடு நிலப்பரப்பை, நாம் அடித்து உண்ண பயன்படும் விலங்குகள் உண்டு வாழ்வதற்கான உணவு உற்பத்திக்காக பயன்படுத்துகிறோம்.

நாம் உண்ணும் கறி உணவினால் நமக்கு வெறும் 17 விழுக்காடு கலோரி மட்டிமே கிடைக்கிறது.

இதில், இந்த விலங்குகளின் சானத்தினால் கோளுக்கு தீங்கு விளைவிக்கும் பைங்குடில் வளிமங்கள் 14.5 விழுக்காடு வெளிப்படுகிறது.

மேலும், கோழி, மாடு, பன்றி, ஆடு போன்ற உயிரிணங்களிடமிருந்து மனிதர்களை தாக்கும் பல நச்சுயிரிகள் தோன்றுகின்றன.

நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக கையாளும் இந்த உணவு விலங்குகளால் ஏற்படும் நோய் தொற்றுக்கள் மற்றும் அவற்றை வளர்ப்பதால் ஏற்படும் தீங்குகள் ஆகியவ்ற்றிலிருந்து விடுபட இன்னும் பழகவில்லை.

பண்ணை முறையில் பூச்சிகள்

நாம் இன்னும் பழையனவற்றில் இருந்து முழுமையாக கற்றுத்தேராத நிலையில், புதிய முயற்சியாக பண்ணை முறையில் பூச்சிகள் வளர்ப்பது குறித்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலில், பூச்சிகளால் ஏற்படும் நன்மைகளை கணக்கிடுவதை தவிர்த்து, அவற்றால் ஏற்படப்போகும் தீங்கை குறித்து சிறிது சிந்திப்போம்.

அவற்றின் எச்சங்களை நாம் என்ன செய்யப் போகிறோம்?

அவற்றிற்கு என்ன வகை நோய்கள் தாக்கும்? அத்தகைய நோய்கள் மனிதர்களை தாக்கினால், தடுப்பதற்கு நம்மிடம் வாய்புகள் இருக்கிறதா?

பண்ணை முறையில் பூச்சிகளை வளர்த்தால், அவற்றால் அருகில் வாழும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பூச்சிகளில் உள்ள கனிமம் மற்றும் புரத சத்துக்கள் குறித்து மட்டும் நாம் பார்க்கிறோம், அவற்றால் நமது மரபனுக்களில் எத்தகைய மாறுபாடுகள் ஏற்படும்?

பூச்சி உணவிற்கு ஊக்கம்

பூச்சி உணவு குறித்த தெளிவு இல்லை என்று ஒரு சாரார் கூறிவரும் நிலையில், மற்றொறு பிரிவினர், பூச்சிகளை பண்ணை முறையில் வளர்பதற்கு ஊக்கமாக பேசி வருகின்றனர்.

அவர்களின் கூற்று என்னவென்றால், மனிதர்களாகிய நாம், எந்த திட்டமிடலும் இல்லாமல், ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றை வளர்க்க துவங்கிவிட்டோம். அதனால் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

புதியவகை உணவாக கருதப்படும் பூச்சி மாவு உணவு, புதிய திட்டமிடலுடன் தொழிலாக துவங்கப்படட்டும்.

அப்பொழுது, பழையவற்றில் நாம் செய்த தவறுகளை புதிய உணவு உற்பத்தியில் செய்திட மாட்டோம்.

மேலும், அடித்தட்டு ஏழை எழிய மக்களுக்கு கனிமமும், புரதமும் கொண்ட உணவு அவர்கள் வாங்கும் விலையில் தரப்பட வேண்டுமானால், பூச்சி மாவே சிறந்த தேர்வு.

பூச்சி ரொட்டிகள்

வரும் தலைமுறை விரைவில் பூச்சி ரொட்டிகளை சுவைத்துக்கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: