தன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்

தன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்

தன்னாட்சி வண்டிகள் (ஓட்டுனர் இல்லா வண்டிகள்) உங்களுக்கு பொருட்களை வீட்டில் வந்து தரும்

நாள் தொறும், மழையோ, புயலோ, பட்டயக் கிளப்பும் வெயிலோ, எதுவாக இருந்தாலும் நமக்கு காலையில் படிக்க நாளிதளும், குடிக்க பாலும் (டீ / காப்பி) தேவை.

தற்பொழுது, வானமே வீழ்ந்தாலும் பேப்பர் பையன் மற்றும் பால் காரர் நம் வீட்டு வாயிலுக்கு வந்து, நமது காலை தேவைக்கான பொருளை தந்துவிட்டு செல்கிறார்.

இவ்வாறு மனிதர்கள் மனிதர்களுக்கு தொண்டு வழங்குவதெல்லாம் இன்னும் சில ஆண்டுகள் தான் நீடிக்கும்.

ஆம், தன்னாட்சி வண்டிகள் வந்துவிட்டால், நமக்கு தேவையான பொருட்களை அந்த வண்டிகள் வந்து தந்துவிடும். கிட்டத்தட்ட எந்திரன்கள் நமக்கு பணிவிடை செய்ய துவங்கும்.

உலகளவில் பெரிய நிகழ்நிலை விற்பனை தளமான அமேசான், அமெரிக்காவின் வாசிங்க்டனில், தனது பொருள் ஒப்படைப்பு வேலையை, தன்னாட்சி வண்டிகள் மூலம் ஆய்வு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கிறது.

துவக்கத்தில், தெளிவான வானிலை உள்ள நேரங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும், இத்தகைய தன்னாட்சி ஒப்படைப்பு தொண்டுகள் இருக்கும்.

இது வெற்றியடைந்தால், படிபடியாக மற்ற பெரு ஊர்களுக்கும் பின்பு மற்ற நாடுகளுக்கும் இது விரிவடையும்.

இவ்வாறு தன்னாட்சி வண்டிகள் மூலம் பொருள் ஒப்படைப்பு செய்வதால், மனித தவறுகள், நேர வீணடிப்புகள், கூடுதல் செலவினங்கள், பொருள் திருட்டுகள், தவறான நபர்களிடம் பொருள் வழங்கப்படுவது போன்ற பல இடையூறுகள் களையப்படும்.


அமேசான் இத்தகைய முயற்சியை நீண்ட நாட்களுக்கு பின் முயல்கிறது. ஏற்கனவே பல பொருள் ஒப்படைப்பு நிறுவனங்கள் இந்தகைய தன்னாட்சி வண்டிகளை தங்களது தொண்டுகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

தன்னாட்சி வண்டிகள் களைப்படையப் போவதில்லை என்பதால், பணி நேர அளவு கணக்கிடாமல் எவ்வளவு நேரத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்த ஒப்படைப்பு எந்திரங்களுக்கு சில தடைகள் உள்ளன. எடுத்துகாட்டாக, அவற்றால் கதவை திறந்து கட்டிடத்தினுள் உள்ள மனிதரை அழைக்க இயலாது. படிகளில் ஏறி, பொருட்களை ஒப்படைக்க முடியாது. நபர் வீட்டில் இல்லை என்றால், மனிதர்கள், அந்த நபரை தொலை பேசியில் அழைத்து, கட்டளைகளை பெற்று அதற்கு ஏற்ப அருகில் உள்ள யாரிடமாவது பொருளை ஒப்படைப்பர். ஆனால் எந்திரங்கள் அவ்வளவு அறிவுடையவை அல்ல.

மேலும், மனிதர்களின் உணர்வுகளையோ அல்லது வாய்வழி கட்டளைகளையோ புரிந்துகொள்ளாது.

பெரும் சிக்கல் என்னவென்றால், சிறுவர்கள் இந்த எந்திரங்களை பொம்மை என்று நினைத்து விளையாட முயற்சி செய்துவிட கூடாது.

பழைய கழிதல் இயற்கையின் திட்டம். புதியன புகுதலும் இயற்கையின் திட்டமே... இனி நாம் வரும் ஆண்டுகளில் எந்திரங்களுடன் பேசி பழகுவோம்...

Share this Post:

தொடர்பான பதிவுகள்: