தமிழகத்தில் முற்பட்டவருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் முற்பட்டவருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பிந்தங்கிய நிலையில் வாழும் முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் நடுவன் அரசின் முன்னெடுப்பை கலந்தாய தமிழகத்தில் நேற்று (08.07.2019) அனைத்துக் கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் மொத்தம் 21 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பங்கேற்றன.

காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் இட ஒதுக்கீட்டிற்கு தங்களது ஆதரவை பதிவு செய்த நிலையில் திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை நடுவன் அரசு முன்வைத்துள்ளது.

இதனை இப்போது நடைபெறவுள்ள எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்விலேயே கொண்டு வர தீர்மானித்துள்ளது.

இதற்கான திட்ட அறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய மருத்துவக் கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த திட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து கலந்தாலோசிக்க, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூட்டினார்.

இந்த கூட்டத்துக்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் பங்கெடுத்தனர்.

அரசு சார்பில் இந்த கூட்டம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில்  நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விசயபாஸ்கர், பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ச. வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இவர்கள் உட்பட முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அளிக்கப்படும் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. 5 கட்சிகள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்தன.

காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாசக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்தனர்.

திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், விசிக, மதிமுக, பாமக உள்ளிட்ட 16 கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.  

எனவே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து இறுதி உரையாற்றுகையில்:  

"பெரும்பான்மையான கட்சிகள் 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை நடுவன் அரசுக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, கூட்டத்தை நிறைவு செய்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 10 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: