யார் இந்த திருமுருகன் காந்தி? பின்புலத்தை அராய நீதிமன்றம் ஆணை

யார் இந்த திருமுருகன் காந்தி? பின்புலத்தை அராய நீதிமன்றம் ஆணை

மே 17 இயக்கத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான திருமுருகன் காந்தி அரசின் முடிவுகள் குறித்து பல கருத்துக்களை எடுத்துக்கூறி மக்களிடையே பரப்பி வருகிறார்.

கடந்த சில திங்கள்களுக்கு முன் இந்திய இறையான்மைக்கு எதிராக வேற்று மன்னில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது இந்திய இறையான்மைக்கு தீங்கு விளைவித்ததாக சுமார் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்யக் கோரி திருமுருகன்காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதி அரசர் என்.ஆனந்த் வெங்கடேச் முன்னிலையில் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வழக்காடிய மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், "மனுதாரர் எப்போதும் மாறுபட்ட கருத்துகளை பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்தக் கருத்துகளால் நடுவன் மற்றும் மாநில அரசுகள் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் மீது கூட பொதுமக்களுக்கு தவறான எண்ணங்கள் உருவாகின்றன.

எனவே, மனுதாரர் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கூடாது" எனக்கூறி வாதிட்டார்.

இதற்கு திருமுருகன் காந்தி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதி அரசர் தமது ஆணையில்

"மனுதாரர் முரண்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து பேசி வருவதாகத் தெரிகிறது.

அவர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றையும் குறித்து எதிர் கருத்துக்கள் கூறிவருகிறார்.

அரசியல் அமைப்புச் சட்டம் பேச்சுரிமையை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கியுள்ளது.

ஆனால், விரும்பத்தகாத கருத்துகளைத் தெரிவிக்க அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கும் உரிமை வழங்கவில்லை.

மனுதாரரின் பேச்சுகள் மற்றும் கருத்துகளை பார்க்கும்போது அவர் மீதான வழக்குப் பதிவுகளுக்கு போதுமான முகாந்திரம் உள்ளது.

எனவே அவருக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது" எனக்கூறி, திருமுருகன் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து ஆணையிட்டார்.

மேலும், கோபம் கொண்ட நீதி அரசர்

"திருமுருகன் காந்தியின் பின்புலம் குறித்தும், அவரை யாராவது பின்னால் இருந்து இயக்குகிறார்களா"  என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க காவல் துறைக்கு ஆணையிட்டார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: