மக்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்

மக்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்

இசுலாமிய ஆண்கள் மூன்று முறை தலாக் எனக் கூறி திருமணத்தை முறித்துக்கொள்ளும்  நடைமுறைக்கு தடை விதிக்கும் சட்டம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை (25.07.2019) நிறைவேற்றப்பட்டது.

சட்ட வரைவில் பல்வேறு திருத்தங்களை முன்வைத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மூன்று முறை தலாக் எனக் கூறி மனைவியை மனமுறிவு செய்யும் கணவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இது அவசரச் சட்டமாக ஏற்கெனவே 3 முறை பிறப்பிக்கப்பட்டது.

இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறவில்லை.
எனவே, மீண்டும் கடந்த திங்கள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வியாழக்கிழமை இந்த சட்டம் குறித்து கூறியதாவது:

இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு முன்பு பிணையில் வெளிவரும் வகையில் சட்ட வரைவில் வாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பிணையில் வெளிவர இயலாத குற்றம் என்றால், காவல் நிலையத்தில் பிணை வழங்க முடியாது. பிணையில் வெளிவரக் கூடிய வழக்கு என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் பிணை பெற நீதிமன்றத்தை அணுகலாம்.

கடந்த 2017ஆம் ஆண்டு சனவரி முதல் 574 முத்தலாக் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இசுலாமிய பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். நமது அரசமைப்புச் சட்டத்தில் பாலின பாகுபாடு காட்டப்படக் கூடாது; அனைவருக்கும் சமநீதி வழங்கப்பட வேண்டும் என்ற சிறப்பு இடம் பெற்றுள்ளது.

உச்சநீதிமன்றமும் முத்தலாக் நடைமுறை, சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான், மலேசியா உள்பட 20க்கும் மேற்பட்ட இசுலாமிய நாடுகள் முத்தலாக் நடைமுறையை தடை செய்துள்ளன என்றார் ரவிசங்கர் பிரசாத்.

அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் (ஏஐஎம்ஐஎம்) கட்சி எம்.பி.யான அசாதுதீன் ஒவைசி பேசுகையில்,

கணவர் சிறையில் அடைக்கப்பட்டால் மனைவி, குழந்தைகளுக்கு பண உதவி எப்படி கிடைக்கும்? திருமணம் என்ற அமைப்பை அழித்து பெண்களை தெருவிற்கு கொண்டு வரத் திட்டமிடுகிறீர்கள்.

மூன்று முறை தலாக் கூறி மன முறிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், அரசு ஏன் இசுலாமிய ஆண்களை சிறையில் அடைக்க நினைக்கிறது?

2013இல் முசாஃபர்பூர் கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இசுலாமிய பெண்களுக்கு நீதி கிடைக்கவும் நடுவன் அரசு முயற்சி செய்ய வேண்டும். பெண்களின் உரிமை குறித்து பாஜக அரசு சிந்தித்தால், அனைத்து பாஜக பெண் எம்.பி.க்களையும் சபரிமலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.

காங்கிரசுக்கு நடுவன் அமைச்சர் நக்வி கண்டனம்:

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் சட்ட வடிவிற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததற்கு நடுவன் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் அவர் பேசியதாவது:

கடந்த 1986ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, உச்சநீதிமன்றம் இசுலமிய பெண்களின் உரிமை குறித்து தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தது. இந்தத் தீர்ப்பு மிக மிக முக்கியமானதாகும். இந்தத் தீர்ப்பை பயனில்லாமல் செய்வதற்காக இதே நாடாளுமன்றத்தில் அதே ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.

அப்போதைய காங்கிரஸ் அரசு செய்த தவறால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் பாஜக தலைமையிலான தற்போதைய நடுவன் அரசு சட்ட வரைவு கொண்டு வந்துள்ளது.

இசுலாமிய பெண்களுக்கு உரிமைகளை அளிப்பதை இலக்காகக் கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எந்தவொரு அழுத்தமும் கொடுக்காமல் இச்சட்டத்தை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: