புவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்

புவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்

இந்த புவி மீது நடக்கிறோம், குதிக்கின்றோம், ஓடுகிறோம்... வாழ்கிறோம்... பல்கி பெருகுகிறோம்

நம்மை தாங்கும் இந்த புவி குறித்து எவ்வளவு தகவல்களை அறிந்து வைத்திருக்கிறோம்?

இதோ... உங்களுக்காக... புவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்!

1. புவி தட்டுக்கள் நம்மை வாழ வைக்கின்றன

ஒன்றை சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! புவி அதிர்வுகள் ஏற்படுவதில்லை என்றால், உயிரினங்களால் இந்த புவியில் வாழவே இயலாது!

புவியின் மேலோடு உடைந்த நிலையில், புவி தட்டுக்களாக தனித் தனியாக இருக்கிறது.

இந்த புவி தட்டுக்கள் பாறை குழம்பின் மீது மிதந்த வன்னம் இருக்கின்றன. இவை மிதப்பதால், இந்த தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன.

புவி தட்டுக்கள் Plate Tectonics

 தட்டுக்கள் Plate Tectonics தட்டு, மற்றொறு தட்டின் மீது எகிறுவதால், ஒன்று கீழ் தள்ளப்படுகிறது. இந்த நிகழ்வுகளால், புவி அதிர்வு ஏற்பட்டாலும், தட்டின் மேலே உள்ள பகுதி கீழ் சென்று பாறை குழம்பாக மாறுகிறது.

அதே வேளையில், புதிய மேலடுக்கு உருவாகிறது.

இத்தகைய சுழற்சி நம் புவிக்கு கட்டாயம் தேவை. இது பழையன கழிதலையும், புதிய மேல் அடுக்கு உருவாவதையும் ஊக்குவிப்பதால் மட்டும் அல்ல.

பழையன கழிதல் என்பது, நாம் வாழுகின்ற மேற்பரப்பில், மடியும் ஒவ்வொரு உயிரினமும் கரிம படிவத்தை விட்டுச் செல்கிறது. கடலுக்கு அடியில் இது இன்னும் ஏராளம்.

இந்த கரிம படிவங்கள் அப்படியே மேல் அடுக்கில் இருந்துவிட்டால் புவி நாம் வாழ தகுதியற்ற அளவிற்கு வெப்பமடையும்.

இந்த புவி தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால், இந்த மேல் அடுக்கு, கரிம குப்பைகளுடன் கீழே சென்று விடுகிறது. அங்கே இவை அவிக்கப்பட்டு கற்குழம்பாக மாறி விடுகிறது.

மேலே புதிய மேலடுக்கு கரிம குப்பைகள் இன்றி தொன்றுகிறது.

இந்த சுழற்சியால் தான், வெள்ளி கோள் பசுமை குடில் வளிமங்களின் கட்டுக்கடங்கா நிலை ஏற்பட்டு வெற்று பாறை கோளாக மாறியது போல மாறாமல் நம் புவி கோள் வாழ தகுதியுள்ள கோளாக இருக்கிறது.

2. புவி உருண்டையாக இருக்கிறதா?

நம்மில் பலரும் புவி உருண்டையாக இருக்கிறது என்றே நம்புகிறோம். உண்மையில், கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் அறிவியலாளர்களும் இத்தகைய சிந்தனையையே கொண்டிருந்தனர்.

தற்பொழுது மனிதர்கள் வானிற்கு சென்று ஆராய்வுகள் மேற்கொண்டதாலும், வானியல் ஆராய்வுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதாலும், புவி உருண்டை அல்ல, ஆனால், தட்டையாக்கப்பட்ட உருண்டை என கண்டறியப்பட்டுள்ளது.

புவி நீள்கோள வடிவில் உள்ளது.  அதாவது நிலநடுக்கோடு பகுதியில் உப்பிய நிலையிலும், துருவப்பகுதிகளில் தட்டையாகவும் உள்ளது.  மேலே உள்ள படத்தை பார்த்தால் விளக்கமாக புரியும்.

துருவங்களுக்கு ஊடே சுற்றாக புவியை அளந்தால், நிலநடுக்கோடுக்கு சுற்றாக அளப்பதை விட 43 கிலோ மீட்டர் அளவு குறைவாக இருக்கிறது.

தரையில் இருந்து அளப்பதாக இருப்பின் இமய மலை உலகின் உயரமான மலை என கணக்கிட்டாலும், புவியின் நடுப்பகுதியில் இருந்து உயரத்தை கணக்கிட்டால், நிலநடுக்கோடுக்கு அருகே இருக்கும் சிம்போராசா மலையே மிக உயரமான மலை.

3.  உயிரியம், இரும்பு மற்றும் மண்ணியம் (Silicon) - இவற்றையே புவி பெருமளவு கொண்டுள்ளது.

புவியில் உள்ள பொருட்களை தனித்தனியாக பிரித்து குவிக்க முடியுமானால், புவியில் 32.1 விழுக்காடு இரும்பும், 30.1 விழுக்காடு உயிரியமும், 15.1 விழுகாடு மண்ணியமும், 13.9 விழுக்காடு மெக்னீசியமும் அடங்கும்.

புவி அடுக்கு Earth layers புவி அடுக்கு Earth layers

இரும்பின் குவியல் புவியின் நடுப்பகுதியில் பெரும்பாலும் உள்ளது. சொல்லப்போனால், புவியின் நடுப்பகுதி 88 விழுக்காடு இரும்பினால் ஆனது.

புவியின் மேலடுக்கு 47 விழுக்காடு உயிரியத்தினால் ஆனது.

4. புவியின் மேலடுக்கு தரை பரப்பளவு வெறும் 30 விழுக்காடுதான்.

வானிலிருந்து நம் புவியை பார்த்தால், புவி நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.

இது ஏனெனில், புவியின் மேல்பரப்பு, 70 விழுக்காடு நீரினால் மூடப்பட்டுள்ளது. மீதம் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாக உள்ளது. அதை "கண்டல் மேலோடு (Continental Crust)" என்று அழைக்கிறோம்.

5. புவியின் தரையில் இருந்து 10,000 கிலோமீட்டர் வரை வளிமண்டலம் விரிந்துள்ளது.

புவியின் தரைப்பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் வரை மட்டும் வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது.

மேலே செல்லச் செல்ல, வளிமங்களின் அடர்த்தி குறைகிறது. 10,000 கிலோ மீட்டர் வரை இந்த வளிமண்டலம் விரிந்துள்ளது.

இதை 5 அடுக்குகளாக பிரிக்கலாம். அவை முறையே

  • அடிவளிமண்டலம் - என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமங்கள் சுமார் 90 விழுக்காடு இங்கே தான் அடர்ந்துள்ளது.
  • படைமண்டலம் - ஓசோன் படலம் காணப்படுகின்றது
  • இடை மண்டலம் - உயரம் கூடுவதால் வெப்பநிலை குறைகின்றது.
  • வெப்ப வளிமண்டலம் - 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் உயர்கிறது
  • புறவளி மண்டலம் - வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14 °C ஆகும்

காற்றின் அழுத்தமும் அதன் அடர்த்தியும் உயரம் செல்லச் செல்ல நேர்மறை விகிதாச்சாரத்தில் மாறும்.

6. புவியின் மையத்திலுள்ள உருகிய இரும்பு குழம்பே காந்த புலம் தருகிறது

புவி, ஒரு பெரிய காந்தம் போன்று செயல்படுகிறது. காந்த துருவங்கள் புவியின் துருவங்களில் உள்ளன.

புவி ஏற்படுத்தும் காந்த புலம் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலவு வரை சென்றடைகிறது. இந்த பகுதி "புவி காந்த மண்டலம்" என்று அழைக்கப்படுகிறது.

அறிவியலாளர்கள், புவியின் நடுவில் உள்ள இழகிய தகடு வெப்பமாக இருப்பதால், மின் கடத்தும் தன்மையுள்ள பொருட்களின் நகர்வு மின்னோட்டம் ஏற்படுத்தி காந்த புலம் வெளிப்படுவதாக கருதுகின்றனர்.

காந்த புலம் Earth Magnetic Field காந்த புலம் Earth Magnetic Field

காந்த புலம் புவியில் இல்லாவிட்டால், ஞாயிறு வெளிப்படுத்தும் ஞாயிறு புயலின் () தாக்கம், நேரடியாக புவியை வந்து தாக்கும்.

காந்த புலம் ஞாயிறு புயலின் தாக்கத்திலிருந்து உயிரினங்களை காத்து வருகிறது.

செவ்வாய் கோளில், மெல்லிய காந்த புலம் இருப்பதால் தான் அங்கே உயிரினங்கள் வாழ இயலாத நிலை உள்ளது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

7. தன்னைத் தானே சுற்றிக்கொள்ள புவி 24 மணி நேரம் எடுப்பதில்லை

புவி தன்னை தானே சுற்றிக்கொள்ள 23 மணி, 56 நிமிடம் மற்றும் 4 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது.

அப்படியானால், ஒரு நாள் பொழுது என்பது 24 மணி நேரம் கொண்டது இல்லையா? உடனடியாக அத்தகைய முடிவிற்கு வராதீர்கள். மேலும் படியுங்கள்.

ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும், ஞாயிறு, பிற தாரகைகளுடன் ஒப்பிடுகையில், 1 டிகிரி அளவிற்கு நகர்கிறது.

ஆக, இந்த 1 டிகிரி அளவையும் கணக்கிட்டால், மேலும் 4 நிமிடங்கள் கூட்டி, 24 மணி நேரம் ஆகிறது.  இதை தான் நாம் ஞாயிறு நாள் என்று கணக்கிடுகிறோம்.

மீன்வழி நாள் அல்லது வானக நாள் என்று கணக்கிட்டால், நாம் நாள் தோரும் பார்க்கும் தாரகைகளின் இருப்பிடம் நாம் கணக்கிடும் நேரத்திற்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

ஆதலால், ஞாயிறு நாளை கொண்டு ஒரு நாள் பொழுதை கணக்கிட்டால், நாம் தாரகைகளை நாம் கணக்கிடும் நேரத்திற்கு அதே இடங்களில் காணலாம்.

8. ஒரு ஆண்டு என்பது 365 நாட்களை கொண்டது அல்ல

ஒரு ஆண்டு என்பது உண்மையில் 365.2564 நாட்களை கொண்டது.

ஒவ்வொரு ஆண்டிற்கும் 0.2564 நாட்கள் கூடுதாலாக உள்ளது. அதனால் தான், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு என கணக்கிட்டு, பெப்ரவரி திங்களில் லீப் ஆண்டுகளில் மட்டும் ஒரு நாளை கூட்டிக்கொள்கிறோம்.

பொதுவாக பெப்ரவரி திங்களுக்கு 28 நாட்கள் என்றாலும், லீப் ஆண்டில் மட்டும் 29 நாட்கள் இருக்கும்.

அத்தகைய லீப் ஆண்டு கணக்கீடுகளில் சில தவிர்ப்புகளும் உள்ளது.

ஒரு ஆண்டு 100 -ஆல் வகுபடும் (எடுத்துக் காட்டாக 1700, 1900, 2100) என்றால், அத்தகைய ஆண்டுகள் லீப் ஆண்டாக கணக்கிடப்படுவதில்லை.

அதே வேளையில் 100 -ஆல் வகுபட்டாலும், 400 -ஆல் வகுபடும் என்றால் (எடுத்துக்காட்டாக 1600, 2000, 2400) அந்த ஆண்டுகள் லீப் ஆண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளபடும்.

9. புவிக்கு, நிலவு மற்றும் மேலும் இரு துணை கோள்கள்?

நம் புவிக்கு துணை கோள் நிலவு என்பதை யாவரும் அறிவோம். புவியுடன் சேர்ந்து, மேலும் இரு பெரிய பாறை அளவிலான இரண்டு கோள்கள் சுற்றுகிறது என்று சொன்னால், நம்மில் பலர் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த இரண்டின் பெயர், 3753 குருயித்னே (3753 Cruithne) மற்றும் 2002 AA29. இவற்றை துணை கோள் என்று அழைப்பதை விட, சிறு துணைக் கோள் அல்லது குறு துணைக் கோள் என்று அழைக்கலாம்.

3753 குருயித்னே என்ற குறு துணைக் கோள், 5 கிலோமீட்டர் அகலம் கொண்டது. அதை பலர் புவியின் இரண்டாம் நிலவு என்றும் அழைக்கின்றனர்.

உண்மையில் இது நிலவை போல புவியை சுற்றி வருவதில்லை. அதற்கென்று தனிப்பாதை வைத்து புவியுடன் சேர்ந்து ஞாயிறை சுற்றுகிறது.

2002 AA29 பொருத்தவரை அது வெரும் 60 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டது. அது புவியை குதிரை லாட வட்டத்தில் சுற்றுகிறது.

95 ஆண்டுகளுக்கு ஒருமுறை புவியின் மிக அருகில் வந்து செல்கிறது.

10. புவியில் மட்டுமே உயிரினம்

பிற கோள்களிலும், துணை கோள்களிலும் உயிர்கள் தோன்றுவதற்கு அல்லது வாழ்வதற்கு ஏற்புடையதாக இருப்பதாக அறிவியலாளர்கள் சொன்னாலும், புவியில் மட்டுமே உயிரினங்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: