கஞ்சா - மாற்று முறைகளில் உற்பத்தி செய்ய புதிய முயற்சி

கஞ்சா - மாற்று முறைகளில் உற்பத்தி செய்ய புதிய முயற்சி

கஞ்சா என்றாலே, ஏதோ ஒரு செடி வகையின் இலைகளை கொண்டு போதை ஏற்படுத்தும் பொருள் செய்வதாகத்தான் நம்மில் பலருக்கு தோன்றும்.

உண்மையும் அது தான். போதை ஏற்படுத்தக் கூடிய கஞ்சா செடி வகைகளின் இலைகளை காய வைத்து அதை பொடி செய்து நம் ஏழை உள்ளுர் போதைக்காரர்கள் புகைக்கிறார்கள்.

கொஞ்சம் காசு இருந்து போதைக்கு அடிமையானோர், அந்த செடி வகையில் இருந்து பெறப்படும் கொணர்வுகளான கன்னபிடியோல் (CBD) மற்றும் டெட்றா-ஐட்றோ-கன்னபிடியோல் (THC) ஆகிய கலவைகளை பயன்படுத்துகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலை கழகத்தின் வேதியல் பொறியாளர்கள், ஆய்வகத்தில் மாற்று முறையில் இந்த இரண்டு கஞ்சா கொணர்வு கலவைகளையும் வேதி பொருள் கலப்பின்றி உற்பத்தி செய்து காட்டியுள்ளனர்.

நுரைமம் (Yeast) பயன்பாடு

நுரைமம் நாம் அன்றாட உணவாக பயன்படுத்தும் பிசுகோத், பன், ரொட்டி, கேக் என பல அடுமனை (Bakery) பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு பூஞ்சான் வகை ஆகும்.

நுரைமம், ஒயின் மற்றும் எரிசாராயம் (ஆல்ககால்) உற்பத்தியின் அடிப்படையாக திகழ்கிறது. இந்த பூஞ்சான் தான் சர்கரையை எரிசாராயமாக மாற்றுகிறது.

ஆய்வகத்தில், நுரைமத்தின் மீது கஞ்சா செடியின் மரபணுக்களை ஏற்றி அதன் மூலம் இந்த நுரைமத்தை போதை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாக மாற்றி காட்டியுள்ளனர்.

இதனால், தேவையற்ற குப்பைகள் உற்பத்தி செய்யப்படாமல், போதைக்கு அடிப்படையான கன்னபிடியோல் (CBD) மற்றும் டெட்றா-ஐட்றோ-கன்னபிடியோல் (THC) ஆகிய கலவைகளை மட்டும் தனித்தனியாக உற்பத்தி செய்துள்ளனர்.

இதன் மூலம், கஞ்சா செடியில் இருந்து இந்த கலவைகள் வடித்து எடுக்கப்படாமல், நேரடியாக உற்பத்தி செய்ய இயலும்.

ஏன் இந்த புதிய முயற்சி?

கஞ்சா செடி வளர்ப்பது என்பது, நீண்ட நெடிய செயலாக உள்ளது. அவற்றிற்கு இடம் மட்டுமல்லாது, தண்ணீர் பயன்பாடும் பெரும் அளவில் உள்ளது.

கஞ்சா எற்றாலே ஏதோ போதைப் பொருள் என நாம் கருதினாலும், அவை மருத்துவத்திற்கு பெருமளவு உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, வலிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த செடியின் கலவைகள் தான் மருந்தாக பயன்படுகிறது.

மேலும், பல மனநிலை பாதிப்புகளுக்கும் இந்த செடியின் கலவைகளே தீர்வாக இருக்கிறது.

1960-ல் நடத்தப்பட்ட ஆய்வில், இது, புற்று நோய் குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, மருத்துவத்திற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு பெரும் உதவி புரியும்.

பிற முயற்சிகளுக்கு அடிப்படை

அறிவியலாளர்கள், இந்த புதிய முயற்சி மூலம், செடியின் குறிப்பிட்ட நாற்றத்தையும் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர்.

ஆகவே, வரும் நாட்களில், நாற்ற (வாசனை/Scent) பொருட்கள் உற்பத்தியில் இந்த புதிய கண்டுபிடிப்பு பெரும் பங்காற்றும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: