ஏழை மக்களுக்காகவே 10% இடஒதுக்கீடு

ஏழை மக்களுக்காகவே 10% இடஒதுக்கீடு

ஏழை மக்களின் வாழ்கை நிலையை உயர்த்துவதற்காகவே கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நடுவன் அரசு கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அரசியல்அமைப்பு அமர்வுக்கு அனுப்புவது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் 15 மற்றும் 16-ஆவது பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொண்டு, 103-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தை நடுவன் அரசு கடந்த சனவரி திங்களில் நிறைவேற்றியது.

இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தெசீன் பூனாவாலா மற்றும் பல பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதி அரசர்கள் எஸ்.ஏ. போப்டே, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அறிவன் கிழமை (னேற்று - 31.07.2019)  நடைபெற்றது.

அப்போது, 103-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் தொடர்பானவற்றி அரசியல்சாசன அமர்வுக்கு ஏன் அனுப்பக் கூடாது? என நடுவன் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலிடம் நீதி அரசர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பதிலளித்ததாவது:

இடஒதுக்கீடு 50 விழுக்காட்டை தாண்டக் கூடாது என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும்.

பெரும் முக்கியமான் சூழ்நிலைகளில் 50 விழுக்காட்டும் கூடுதலாக இடஒதுக்கீடு அளிக்கப்படலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எடுத்துக்காடாக, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 68 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதை உயர்நீதிமன்றமும் அனுமதித்துள்ளது.

உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்ற ஆணைக்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை.

ஏழை மக்களுக்காகவே இட ஒதுக்கீடு:

நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், ஏழ்மை நிலை குறைந்தபாடில்லை.

நாட்டில் சுமார் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என எந்த ஒரு தனி நபரும் கூறவில்லை.

எனவே தான், வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த நடுவன் அரசு அவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது.
 
இது அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகும். அரசமைப்புத் திருத்தச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் பெரும்பாலும் தடை விதித்ததில்லை.

ஆனால் தேசிய நீதி அரசர்கள்  பணியில் அமர்த்தல் ஆணையத்தை உருவாக்க வழிவகை செய்த 99-ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.  

ஏழை மக்களுக்கு கல்வி அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசின் உதவி ஏழை மக்களுக்கே தேவைப்படுகிறது. பணக்காரர்களுக்குத் தேவையில்லை.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது என்றார் கே.கே. வேணுகோபால்.
 
ஒத்திவைப்பு:

இதையடுத்து நீதி அரசர்கள் கூறுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு நடுவன் அரசு இடஒதுக்கீடு அளித்துள்ளதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அரசியல் அமைப்பு அமர்வுக்கு அனுப்புவது தொடர்பான தீர்ப்பை ஒத்திவைக்கிறோம். இதன் மீது முடிவெடுத்த பிறகு, நடுவன் அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்வோம் என்று ஆணையிட்டனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: