திருமணம் ஆன 20வது நாளில் கணவரை எரித்து கொன்ற மனைவி

திருமணம் ஆன 20வது நாளில் கணவரை எரித்து கொன்ற மனைவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகரை சேர்ந்தவர் சேதுபதி (வயது 24). இவர் புதுவையில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார்.

இவர் டி.வி. நகரை சேர்ந்த முருகவேணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் அங்குள்ள கூரை வீட்டில் வாழ்ந்து வந்தனர். சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று மாலை சேதுபதி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

உள்ளே தூங்கி கொண்டிருந்த சேதுபதி திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று பரவியது.

உடனடியாக திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தீயை அணைத்தனர்.

வீட்டினுள் சேதுபதி உடல் கருகிய நிலையில் உயிரற்று கிடந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை கண்கானிப்பாளர் (பொறுப்பு) அசய்தங்கம், காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று சேதுபதியின் உடலை மீட்டு உடல் ஆய்விற்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடு தீப்பிடித்து எரிந்த போது சேதுபதியின் மனைவி முருகவேணி வீட்டில் இல்லை. அவர் மீது காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக முருகவேணியை பிடித்து காவலர்கள் தங்களது பாணியில் விணவினர்.. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

சேதுபதி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவர் குடி பழக்கத்திற்கும் அடிமையாகி இருப்பதை முருகவேணி உணர்ந்துள்ளார்.  

இருவருக்கும் இடையே அதனால் முதல் நாள் முதல் தகராறு ஏற்பட்டது. எவ்வளவு எடுத்துக் கூறியும் சேதுபதி தனது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதாக இல்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேணி காதல் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

நேற்று பிற்பகல் வழக்கம் போல வேலைக்கு செல்லாமல் சேதுபதி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது முருகவேணி தனது கணவரின் உடலில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு வீட்டின் கதவை வெளிபுறமாக பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

கூரை வீடும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் உடல் கருகி சேதுபதி இறந்து விட்டார்.

கணவரை உயிருடன் எரித்து கொன்ற நிகழ்வு தொடர்பாக சேதுபதியின் மனைவி முருகவேணியை காவலர்கள் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக முருகவேணியின் தாய் குமுதாவிடமும் காவலர்கள் தொடர்ந்து விணவி வருகிறார்கள்.