வேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்

வேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தமிழக அரசின் கட்டளையை ஏற்று பால் விலையை உயர்த்த உள்ளது.

தமிழக அரசு ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோரும் 300 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் பாலை விட ஆவின் பால் தரமாக இருப்பதால் மக்களிடையே பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் பால் விலையை கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் செயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார்.

அதன் பின்னர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பால் விலையை 5 ஆண்டுகளாக உயர்த்தவில்லை.

பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளது. கால்நடை தீவனம் விலை கூடியுள்ளது.  மாடுகளை வைத்திருப்போர் அவற்றை மேம்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக “வைக்கோல்” விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2014-ல் 25 கிலோ வைக்கோல் ரூ.120 ஆக இருந்தது. அவற்றின் விலை தற்போது ரூ.250 ஆக உயர்ந்து இருப்பதாக தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் எம்.சி.ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

ரூ.40 ஆயிரத்திற்கு குறைவாக பசு மாடு கிடைப்பதில்லை எனவும் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு கடந்த 5 ஆண்டுகளில் 63 விழுக்காடு வரை உயர்ந்து இருப்பதாக அவர் சுட்டி காட்டி உள்ளார்.

அதனால் உடனடியாக ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே இத்தொழில் செய்யும் உழவர்கள் பிழைப்பு நடத்த முடியும். இல்லையெனில் இத்தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பால் கொள்முதல் கூட்டுறவு கூட்டமைப்பு அலுவலர்களை அழைத்து விலையை உயர்த்தவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

வேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தும் போது விற்பனை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் எந்த அளவிற்கு உயர்த்துவது என்பது குறித்து துறையின் அமைச்சர் கே.டி.ராசேந்திர பாலாசி மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராசேந்திரன் கூறியதாவது:

பால் உற்பத்தி செலவு தொடர்ந்து கூடி வருவதால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ27-ல் இருந்து ரூ.42 ஆக என 15 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை ரூ.29-ல் இருந்து ரூ.50 ஆக என 21 ரூபாய் உயர்த்தவும் வேண்டும் என்று கூறியுள்ளோம்.

அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்து பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக முதல்- அமைச்சர் கூறியுள்ளார். பால் விலை உயர்வு வேலூர் இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

இதனால் ஆவின் பால் விலை உயர்வு ரூ.10 முதல் ரூ.15 வரை இருக்க வாய்ப்பு உள்ளது. வேலூர் தேர்தல் நேரத்தில் பால் விலையை கூட்டினால் அதனால் வாக்கு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்பதால், தேர்தல் முடிந்த பின் பால் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பால் விலையை லிட்டருக்கு ரூ 20 வரை முதல் அறிவிப்பில் உயர்த்திவிட்டு, பின்னர், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில் விலையை ரூ 5 வரை குறைத்திட அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

கொள்முதல் விலையை உயர்த்தும் போது விற்பனை விலையை உயர்த்துவது வழக்கம். கடுமையான நிதி நெருக்கடியில் ஆவின் சென்று கொண்டிருக்கிறது என்று அரசு துரை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: