ஓசூரில் பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

ஓசூரில் பட்டாசு கடை அமைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தீபாவளியையொட்டி, ஒசூர் உள்பட கிருட்டிணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற இணையதளம் மூலம் ஆக. 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் 02.08.2019 நாளிட்டு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக். 27-ஆம் நாள் கொண்டாடப்பட உள்ள தீபாவளியையொட்டி, கிருட்டிணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் பெற விரும்புவோர், வெடிபொருள் சட்டம் மற்றும் விதியின்படி முறையாக கடைப்பிடித்து, இணையதளத்தின் மூலம் உரிய ஆவணங்களுடன் ஆக. 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்க

1. தொடர்புடைய ஊராட்சி வரி கட்டிய சீட்டு,
2. உரிமம் கோரும் இடத்தின் வரைப்படம் (6 நகல்கள்),
3. நடப்பு வரவாண்டின் கட்டட வரி சீட்டு,
4. வாடகைக் கட்டடமாக இருப்பின் சான்றுறுதி (நோட்டரி) வழக்குரைஞரின் கையொப்பத்துடன் கூடிய ஓராண்டுக்கு குறையாத நாள்களுக்கு செய்து கொண்ட வாடகை ஒப்பந்தப் ஆவணம் (அசல் மற்றும் 5 நகல்கள்),
5.  உரிமக் கட்டணம் ரூ.500-ஐ செலுத்தி, அதற்கான உண்மை சீட்டு இணைக்கப்பட வேண்டும்.
6.  இரண்டு மார்பளவு புகைப்படங்கள்,
7. ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், பட்டாசு கடை வைக்கும் கட்டடம் கல் மற்றும் தார்சு கட்டடமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கடைகளுக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும்.  மேலும் அருகில் குடியிருப்புகள் இருத்தல் கூடாது.  

உரிமம் பெற்ற இடத்தில் 2 தீயணைப்புக் கருவிகள், 2 தண்ணீர் வாளிகள், 2 மண் நிரப்பப்பட்ட வாளிகள் எப்போதும் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். தவறும் உரிமையாளரின் உரிமத்தை ரத்து செய்வதுடன், அவரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.