தேன்கனிக்கோட்டை மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம்

தேன்கனிக்கோட்டை மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம்

தேன்கனிக்கோட்டை வட்டம், திப்பசந்திரம் ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.  இப் பள்ளியில் 205 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.  

இந்த பள்ளியில் 02.08.2019 பிற்பகல் உணவாக கலவை சாதம் வழங்கப்பட்டது. அதில் கடைசியாக சில மாணவர்கள் சாப்பிட்ட போது உணவில் பல்லி கிடந்ததை மாணவர்கள் கண்டனர்.

இதைக் கண்ட மாணவ, மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து, உணவு சாப்பிட்ட 90 மாணவ, மாணவியருக்கு ஒன்றன்பின் ஒன்றாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.  

அவர்களை பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மீட்டு, தடிக்கல் அரசு துவக்க மருத்துவ நிலையத்தில் அனுமதித்தனர்.  பிறகு  மேல் மருத்துவத்திற்காக ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் ஏராளமான மாணவ,  மாணவியர் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்டதால்,  மருத்துவம் அளிக்க போதிய படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டது.  

இதற்கிடையே, மாணவ,  மாணவியர் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர் பதறியபடி பள்ளிக்கு வந்தனர்.  மேலும் அரசு மருத்துவமனைகளின் முன் திரண்டனர்.

தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவலர்கள் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தகவல் அறிந்த ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் பாலசுந்தரம், மாவட்டக் கல்வி அலுவலர் நரசிம்மன் மற்றும் உயர் அலுவலர்கள் நிகழ்விற்கு தொடர்புடைய பள்ளிக்குச் சென்று, அங்கு பணிபுரிந்து வரும் சமையலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை, ஒசூர் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் மாணவ, மாணவியருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அங்கிருந்த பெற்றோரை அலுவலர்கள் அமைதிப்படுத்தினர்.

குறிப்பு:  பல்லி விழுந்த உணவினால் எந்த பாதிப்பும் மனிதருக்கு ஏற்படாது.  பல்லியை சமைத்து உண்ணும் மனிதர்களும் இருக்கிறார்கள். உடும்பும் ஒரு பல்லி இனமே!!!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: