கைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்?

கைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்?

போதிய ஒக்கிடுதல் இல்லாததால் 108 மருத்துவ தொண்டு வண்டிகளால், விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் அவர சேவை கொண்ட பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் அழைத்துச் சென்று காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

நடுவன் அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய ஊரக மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் விலையில்லா 108  மருத்துவ தொண்டு வண்டிகள் கடந்த 2008 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிர, கர்நாடகம், கேரளம் உள்பட 22 மாநிலங்களில் இந்தச் தொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஊர் புறங்களைச் சேர்ந்த மக்களுக்கும்  மருத்துவ தொண்டு வண்டிகள் கிடைக்கும் நோக்கத்தில் விலையில்லா தொண்டை நடுவன் அரசு கொண்டுவந்தது.

இத்திட்டம் அரசு நிதி உதவியுடன் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணியாளர்களை பணி அமர்த்துதல், சம்பளம் வழங்குதல் உள்பட பணிகளை அனைத்தும் தனியார் நிறுவனமே மேற்கொள்கிறது.

இந்த வண்டிகளில் மருத்துவ அவசர நேர உதவிக்குத் தேவையான உயிரி காற்று உருளைகள், வென்டிலேட்டர், இ.சி.ஜி., மல்டி பாரா மீட்டர் கண்காணிப்பி உள்பட அடிப்படை மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தவிர 50க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவ தொழில்நுட்ப அலுவலர், வண்டி ஓட்டுநர் (பைலட்) ஆகியோர் பணியில் இருப்பர்.

கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், மருத்துவத் தொழில்நுட்ப அலுவலர்கள், ஓட்டுநர்கள் என மாநிலம் முழுவதிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.

மலைப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் ஜீப் மருத்துவ தொண்டு வண்டிகள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு மருத்துவ தொண்டு வண்டிகளில் இன்குபேட்டர் வசதிகளும் உள்ளன. நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இருசக்கர மருத்துவ தொண்டு வண்டிகளும் உள்ளன.

10 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான வண்டிகள் உரிய ஒக்கிடுதல் இல்லாமல் காணப்படுவதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக மருத்துவ தொண்டு வண்டி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

108 மருத்துவ தொண்டு வண்டிகளை மேலான்மை செய்து வரும் தனியார் நிறுவனமும் வண்டிகளை ஒக்கிடுவதில் அக்கறை கொள்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பெரும்பாலான வண்டிகள் 3 முதல் 4 லட்சம் கி.மீ.க்கு மேல் இயக்கப்பட்டுள்ளன. மேலும் சில வண்டிகள் இயக்குவதற்குத் தகுதியற்ற நிலையில் உள்ளன.

மேலும், வண்டிகளின் நிலை குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாகப் பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றுகின்றனர்.

இதற்கு நடுவன் மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: