நோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்

நோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்

பாகம் 1 / பாடம் 2

முக் குற்றங்களின் இலக்கணம்

இவ் ய்டல் பிருதிவி என்னும் பூதத்தால் உருவாகி, ஆகாயம் என்னும் பூதத்தினிடமாக ஒடுங்கி, அப்பு, தேயு, காற்று என்னும் மூன்று பூதங்களால் இயக்கப்பட்டு வருகின்றது.

மேற்கூறப்பட்ட அப்பு, தேயு, காற்று என்பதே கப, பித்த, வாதமென்ற முக் குற்றங்களெனவும், இவைகளின் இயக்கத்தின் விகற்பமே நோய்க்குக் காரணமெனவுங் கூறப்படும்.

இக் கருத்தினைக் கொண்டே தமிழகத்துத் தனிப்பெரும் புலவராகிய திருவள்ளுவரும்,


" மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளி முதலா வெண்ணிய மூன்று" எனக் கூறியுள்ளார்.

ஆகவே நோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல் மிகவும் அவசியமாகும்.

வாதம்

இது கடினம், இலேசத்துவம், குளிர்ச்சி, வரட்சி, அசைதல், அணுத்துவம் என்னும் குணங்களை யுடையது.

இது தொப்புளுக்குக் கீழ் இடுப்பு தொடை எலும்பு, தோல் முதலியவிடங்களில் பரவி மலம் நீர் விந்து வியர்வை இவைகளைக் கழியச் செய்தல் முதலிய தொழில்களைச் செய்விக்கின்றது.

இது பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூரமன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்து வகைப்படும்.

உயிர் மூச்சு மூலாதாரத்திலுதித்து மேல் நோக்கிச் சிரசை இருப்பிடமாகக் கொண்டு மூச்சுவிடுவதற்கு அடிப்படையாகிறது.

அபானன் மூலாதாரத்தினின்று கீழ்நோக்கி குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையே நின்று மல மூத்திராதிகளைக் கழிக்கும்.

வியானன் இருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு உடல் முற்றும் வியாபித்து நீட்டல் மடக்கல் ஸ்பரிசம் அன்ன சாரத்தை நிரப்பல் முதலிய தொழில்களைப் புரியும்.

உதானன் மார்பினிடமாக நின்று உதராக்கினியை எழுப்பி அன்னத்தைச் சீரணிக்கச் செய்து நாடிகளில் செலுத்தும்.

சமானன் நாபிஸ்தானத்தை இருப்பிடமாகக் கொண்டு உணவாதிகளினால் ஏற்பட்ட குற்றங்களை மீறவொட்டாமல் தடுத்து சமப்படுத்தும்.

நாகன் கலைகளை உணரல், பார்த்தல் முதலிய தொழில்களுக்குக் காரணமாயுள்ளது.

கூர்மன் மனதிடமாக நின்று கொட்டாவி, சிரித்தல், கண்ணிமைத்தல் முதலிய தொழில்களைப் புரியும்.

கிரிதரன் நாநாசி இவைகளினின்று இருமல், தும்மல் முதலிய தொழில்களை உண்டாக்கும்.

தேவதத்தன் கோபம், சோம்பல், கொட்டாவி முதலியவற்றை உண்டாக்கும்.

தனஞ்செயன் வீங்கச் செய்தல் முதலியத் தொழில்களை உண்டாக்கும்.

பித்தம்

இது வெப்பம், குரூரம், பளபளப்பு, சலரூபம், புளிப்பு, விரேசனம் முதலிய குணங்களுடையது.

இது உந்திஸ்தானத்தை இருப்பிடமாகக் கொண்டு உஷ்ணம், சீரணம், பசி, தாகம், சுவை, பார்வை, காந்தி முதலிய தொழில்களுக்குக் காரணமாக இருக்கின்றது.

இது அனலம், இரஞ்சகம், சாதகம், ஆலோசகம், பிராசகம், என ஐந்து வகைப்படும்.

அனல பித்தமானது ஆமாசயத்திற்கும் பக்குவாசயத்திற்கும் நடுவில் நின்று, தனது இயற்கைத் தன்மையாகிய உஷ்ணத்தினால் உணவைச் சீரணிக்கச் செய்கின்றது.

இரஞ்சக பித்தமானது ஆமாசயத்தில் நின்று இரச தாதுவைப் போஷிக்கும்.

சாதக பித்தமானது இருதயஸ்தானத்தில் நின்று, அறிவு புத்தி முதலியவற்றிற்குக் காரணமாகி எக்காரியத்தையுஞ் சாதிக்குந் தன்மை வாய்ந்தது.

ஆலோசகப் பித்தமானது கண்களில் நின்று பார்வைக்கு யேதுவாயுளது.

பிராசக பித்தமானது சருமத்தினிடமாக நின்று அதற்குக் காந்தியை யுண்டாக்கும்.