வீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு

வீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு

கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அறிவன் (புதன்) கிழமை குறைத்தது.

இப்போது தொடர்ந்து 4-ஆவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறையும்.

அதே நேரத்தில் பொதுமக்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை உள்ளிட்ட வைப்புகளுக்கான வட்டியும் குறையும்.

ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.35 விழுக்காடு குறைக்கப்பட்டு 5.40 விழுக்காடாக அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு 5.15 விழுக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளில் குறைவான வட்டி: மும்பையில் அறிவன் கிழமை நடைபெற்ற ஆர்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வட்டி விகிதக் குறைப்புக்கு ஆறில் நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மற்ற இரு உறுப்பினர்கள் 0.25 விழுக்காடு அளவுக்கு மட்டுமே வட்டியைக் குறைக்கலாம் என்று கூறியிருந்தனர்.

இப்போது முடிவுசெய்யப்பட்டுள்ள 5.40 விழுக்காடு வட்டி விகிதம் என்பது கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் இருந்ததைவிடக் குறைவாகும். இதன் மூலம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், 2018௧9 நிதியாண்டின் இறுதி காலாண்டில் பொருளாதார வளர்ச்சி ஐந்தாண்டுகள் காணாத அளவுக்கு சரிவடைந்தது.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

வட்டிக் குறைப்பு வளர்ச்சிக்கு உதவும்:

வட்டி விகிதக் குறைப்பு முடிவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்பிஐ ஆளுனர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ""வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு குறைப்பது போதுமானதாக இருக்காது. எனவேதான் 0.35 சதவீதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2006 முதல் 0.25 முதல் 0.50 விழுக்காடு என்ற அளவிலேயே வட்டிக் குறைப்பு அல்லது வட்டி அதிகரிப்பு நிகழ்ந்து வந்துள்ளது.

பொருள்களுக்கான தேவை மற்றும் முதலீடு குறைந்துள்ளது வளர்ச்சியை பாதிக்கும். எனினும், பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் என்பது வழக்கமான நிகழ்வுதான். நமது நாட்டில் இப்போது மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நேரத்தில் நாம் சில சவால்களையும் எதிர்கொள்கிறோம். பார் அளவில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், உள்நாட்டிலும் அதன் தாக்கம் பெருகியுள்ளது. பார் அளவில் வர்த்தகம் தொடர்பான சிக்கல், அனைத்து நாடுகளையுமே பாதித்து வருகிறது. இந்த  நேரத்தில் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த தனியார் முதலீட்டை பெருக்குவது மிகவும் தேவையாகும்.

எனவே, வட்டிக் குறைப்பு நடவடிக்கை இதற்குப் பெரிதும் உதவும். ஏற்கெனவே எடுக்கப்பட்ட வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் இப்போதுதான் மெதுவாகப் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. சனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 விழுக்காடாக இருந்துள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம் வரும் செப்டம்பரில் 3.1 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய இருகாலாண்டுகளில் இது 3.5 விழுக்காடு முதல் 3.7 விழுக்காடு வரை இருந்தது' என்றார்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: