மின்னனு தோல்: நீர் உட்புகவிடாத தானே சரி செய்துகொள்ளும்

மின்னனு தோல்: நீர் உட்புகவிடாத தானே சரி செய்துகொள்ளும்
நீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்!!!

சொறி மீனின் (Jellyfish) தன்மையால் உந்தப்பட்டு, ஆராய்சியாளர்கள் நீர் உட்புகாத தன்னை தானே சரி செய்து கொள்ளும் இயல்புடைய மின்னனு தோலை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மின்னனு தோலானது, ஒளியூடுருவு தன்மை கொண்டதாகவும், தொடு உணர்வு கொண்டதாகவும், மேலும் தன்னை தானே ஒக்கிட்டுக்கொள்ளும் தன்மை உடையதாகவும் இருக்கிறது.

இந்த புதிய தோலை கொண்டு எந்திரன்களுக்கு தொடு உணர்வுடன் கூடிய மென்மையான தோலை வடிவமைக்க இயலும்.

மேலும் இது பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு உதவும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

சிங்கப்பூர் நாட்டு பல்கலை கழகத்தை சார்ந்த அறிவியலாளர் குழு சொறி மீனின் தோல் தன்மையை போன்ற ஒரு தோலை மின்னனு தோலாக வடிவமைத்துள்ளனர்.

சொறி மீனின் தோல் போன்றே இந்த மின்னனு தோலும் ஒளி புகுவதாகவும், நீண்டு கொடுக்கும் தன்மை உடையதாகவும். தொடு உணர்வு கொண்டதாகவும், மேலும், நீர் சுழல்களில் தன்னை தானே ஒக்கிட்டுக்கொள்ளும் வல்லமை படைத்ததாகவும் இருக்கிறது.

இந்த தோலை கொண்டு நீருக்கு அடியில் வேலை செய்யத்தக்க எந்திரனை வடிவமைக்கலாம்.

சிங்கப்பூர் பல்கலை கழகத்தின் ஆராய்சியாளர்கள் கலிபோர்னியா பல்கலை கழகத்தின் பொறியாளர்களுடன் இணைந்து இந்த புதிய மின் தோலை வடிவமைத்துள்ளனர்.

இந்த ஆராய்சியாளர்கள் குழுவின் பேராசிரியர் பெஞ்சமின் டீ, தங்களது புதிய கண்டுபிடிப்பு குறித்து விளக்கும் போது "பொதுவாக தன்னை தானே சரி செய்துகொள்ளும் பொருட்கள், இன்றளவில் ஒளி ஊடுருவா தன்மை கொண்டவையாக இருக்கின்றன. மேலும், நீரில் நனைக்கப்பட்டால் அதன் செயல் திறன் மங்கி விடும். மேலும் தொடு திரைகள் நீரின் மூழ்கினால் அதன் தொடு திறன் முற்றிலும் நின்றுவிடும்."மேலும் அவர் கூறுகையில் "இந்த குறையை போக்கி ஒரு புதிய பொருளை கண்டுபிடிக்கும் விதமாக, எங்களின் அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய குழு, சொறி மீன் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது."

"சொறி மீன் ஒளி ஊடுருவும் விதமாகவும், தொடு உணர்வு கொண்டதாகவும், தண்ணீரில், அதன் தோல் பாதிப்பிற்கு உட்பட்டால் தன்னை சரி செய்து கொள்ளும் விதமாகவும் படைக்கப்பட்டுள்ளது

அதன் தன்மையை போன்ற ஒரு தோலை நம்மால் செயற்கையாக வடிவைக்க இயலும் என்ற நம்பிக்கையில் எங்கள் ஆராய்வை மேற்கொண்டோம்" என்று விளக்கினார்.

பல்லுறுப்பி நீர்ம கூழ்மங்கள் (Polymer Hydro gel), நீர் பட்டால் விரிவடைவதும், நீர் வடிந்தால் அவை வடிவில் சுருங்கி விடும் தன்மை கொண்டுள்ளன.

இதற்கு மாற்றாக, இந்த அறிவியலாளர் குழு நீர் பட்டாலும், படதா நிலையிலும் தன் வடிவத்தை மாற்றாத பொருளை வடிவமைத்துள்ளது.

இது கடல் நீர், அமிலம் மற்றும் காரத்தன்மை கொண்ட எந்த நீர்ம நிலையிலும் நிலைத்து செயல்படும் தன்மை உடையதாக இருக்கிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் நெகிழும் தன்மை கொண்ட எந்திரன் மற்றும் மென்மை தன்மை கொண்ட மின்னனு பொருட்கள் உருவாக்கப்படும்.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: