நோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி

நோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி

பாகம் 1 / பாடம் 4

நோயாளியின் இலக்கணம்

நோயாளியானவன் உண்மையை பேசுபவனாகவும், வைத்தியரைக் குருவாக யெண்ணி, அவர் மீது அவர் கொடுக்கும் மருந்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்டு அதை அவர் சொன்னபடி அருந்திய பத்தியத்தைக் காக்கக் கூடிய வனாகவும்,நல்லொழுக்கமுடையவனாகவும் இருத்தல் வேண்டும். இன்றேல் பிணி தீராது என்பதாம்.

நோயில் சாத்தியக் குறிப்புகள்:

உடல் லேசாகயிருத்தல், முகம் விகாரமற்றிருத்தல், கைகால்கள், நீட்ட மடக்க
இயலுதல், நா சுத்தமாயிருதல், நாசியின் வழியாக சுவாசித்தல், கண்டத்தில் சுபமின்மை, பஞ்சேத்திரியங்களும், தன் உணர்வுடன் தொழில் புரிதல் எனும் குணங்களுடைய நோயாளி எல்லா விதத்திலும் எளிதில் குணமடைந்து உயிர் வாழ்வான்.

நோயில் அசாத்தியக் குறிப்புகள்:

உடல் கணத்தல், முகம் விகாரமுற்றிருத்தல், வாயின் வழியாக மூச்சு விடுதல், தூக்கம் இல்லாமை, பஞ்சேத்திரங்களின் தொழில் கெடல், உணர்ச்சியற்றுருத்தல், முதலிய குணங்கள் இருப்பின் அந்நோயாளியின் பிணி தீர்வதற்கான வாய்புகள் குறைவு.

நோயாளியின் இலக்கணம் - மரணக் குறிப்புகள்:

வாதமானது பித்தஸ்தானத்திலும், பித்தமானது, கபஸ்த்தானத்திலும், கபமானது கண்டஸ்த்திலும் இருக்குமாகில் மரணஞ் சம்பவிக்கும்.

மேலும் இரவில்அதி தாகமும், பகலில் சீதளமும், கண்டத்தில் கோழை கட்டுவதும், மிகுபேதியும், சிறமத்துடம் மூச்சு விடுதல், அதனுடன் கூடி இருமல், சூலை, விக்கல் முதலியனவும் இருப்பின் நோயாளி உயிர் வாழ்வது கடினம்.

மார்பு கை கால் முதலியன சீதளமாயும்,சிரசு மட்டும் மிக உஷ்ண மாயிருத்தல், உடல், பலவிதசாயலாயும், மேல் மூச்சு அல்லது சிறமத்துடம் மூச்சு விடுதல், வாந்தி, விக்கல் முதலியவைகளும், உடலில் தீய நாற்றமும் இருத்தல், தும்மலுடன் மல மூத்திரம் இந்திரியம் முதலியன நளுகல், நா உதடு இவைகள் கறுப்பு நிறமாதல், எப்போதும் இடது நாசியிலேயே சுவாசம் விடுதல், பார்வை குன்றல், காதில் ஒரு வித ஒலி எப்போதும் இருத்தல், கண்டபடி பிதற்றுதல் முதலிய குணங்களும்,மரணக் குறிகளென்றறியயும்.மற்றும் சிவன் ஏம தூதர்கள், கந்தர்வர், சர்ப கீடங்கள் முதலியவற்றைக் கனவில் பார்த்தல், பல்லக்கு, படகு, முதலியவற்றில் செல்லுதல், சந்தனம், பூ, மாமிசம், முதலியவற்றைப் பெருதல், இன்னும் இது போன்ற பயங்கரக் கனவுகள் முதலியவைகளைக் கண்டல் முதலியனவும் மரணக் குறிகளெனப்படும்.

ஞாயிறு தோன்றும் வேளையில் ஆந்தை அல்லது காகம் கூக்குரலிட்டுத்தன் எதிரில் வந்து தலையின் மீது குத்தினால் சந்தேகமின்றி அவன் அன்றைய மாலைக்குள் மரணமடைவான்.

எந்த ரோகியின் ஏழாவது வீட்டில் ஞாயிறு இருக்கின்றானோ அப்போதாவது பிறப்பு லக்கனத்தில் நிலவு இருக்கும் போதாவது அவன் நச்சு தன்மை கொண்ட உயிர்களால் தீண்டப்பெரின் உடனே மரணமடைவான்.

நோயில் விண்மீன்களின் ஆதிக்கம்:

விருச்சிகம், மேஷம் ஆகிய இவ்வோரைகளில் நந்தாதி தியிலும், மிதுனம், கன்னி வோரை பத்திரா திதியிலும், கடக ஒரையில் ஐயாதி தியிலும், கும்ப, சிம்ம ஓரையில் ரிக்த திதியிலும், தனுசு ஓரையில் பத்திரா திதியிலும், மிதுன ஓரையில் ஐயதி தியிலும்,மகம் ஓரையில் பூரண திதியிலும், நோய்கள் உண்டாகின் நோயாளி மரணமடைவான்.

மேலும் செவ்வாய்க் கிழமை, கிருத்திகை விண்மீன் நந்தா திதி கூடிய நேரத்திலும், அறிவன் கிழமை ஆயில்ய விண்மீன், பத்திரா திதி கூடிய நேரத்திலும், வியாழக் கிழமை மக விண்மீன் ஐயா திதி கூடிய நேரத்திலும் வெள்ளிக் கிழமை தனிஷ்டை விண்மீன் ரிக்த திதி கூடிய நேரத்திலும், காரி கிழமை பரணி விண்மீன் பூரண திதி கூடிய நேரத்திலும், நோய்கள் உண்டாகில் அசாத்தியமாம்.

சுவாதி, ஆயில்யம், திருவாதிரை, பூசம், கேட்டை முதலிய விண்மீன்களில்,நோய் கண்டால் அசாத்தியமாம்.

ரேவதி அனுராதை முதலிய விண்மீன்களில், நோய் கண்டால் மிகவும் துன்பத்தை கொடுத்து மரணத்தையுண்டாக்கும்.

உத்திரட்டாதி மிருகசிருடம் முதலிய விண்மீன்களில் நோய் கண்டால் ஒரு திங்கள் வரையில் நோய் விடாது.

மக விண்மீனில் நோய் கண்டால் இருபத்தோறு நாட்களில் நோய் தீரும்.

அஸ்தம், அனுசம், விசாகம், முதலிய விண்மீன்களில் நோய் துவங்கினால் பதினைந்து நாள்வரையில் இருந்து பிறகு குணமாகும்.

மூலம், அசுவினி, கிருத்திகை முதலிய விண்மீன்களில், நோய் பிறந்தால் ஒன்பது நாட்களில் குணமாகும்.

புரட்டாசி, தை திங்களில் உத்திர விண்மீனுலும் பங்குனி திங்களில் ரோகினி புனவசு விண்மீனுலும் நோய்கள் உண்டாகில் ஒரு கிழமையில் குணமாகும்.

சகுனம்

மருத்துவன் நோயாளியிடம் போகும் போது பேரிகை, சங்கு, வீணை சுபஷ்திரீ கன்றுடன் கூடிய பசு, மங்கள ஓசை, அரசன், மூட்டையுடன் வண்ணான், குடை, இரட்டைப் பிராமணர்கள், தயிர், சந்தனம், கள், மாமிசம், தேன், குதிரை முதலிய சுக சகுனங்களை தனக்கு எதிராவது அல்லது வலது புறமாக காண்பானாகில் அது நல்ல சகுனம் என்றறியவும்.

விறகு, நெருப்பு, பாம்பு, உப்பு, வெல்லம், எண்ணெய், மருந்து விகார ரூபீகள், அமங்கல ஒலி, எண்ணெய் தேய்த்துக் கொண்டவன்,முதலியவைகள் எதிர்பட்டால் அது கெட்ட சகுனமென்றறிந்து சர்வ ஜாக்கிறதையுடன் சிகிச்சை செய்தல் வேண்டும்.

மருத்துவனை அழைக்கச் செல்லும் தூதுவன் தன்னுடன் இனிப்புப் பொருட்கள், மாமிசம், தொல், கோல், நாய், எருமை, முதலியவற்றைத் தன்னுடன் எடுத்துச் செல்லுதல், மருத்துவனுக்குப் பின் புறமாகவும், வலது புறமாகவும், மேல் புறமாகவும் நின்று பேசுதல், ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, பரணி முதலிய விண்மீன்களில் அழைத்துவரச் செல்லுதல் முதலியவைகளும் கெட்டச் சகுனங்களாம்.

வெண்மை ஆடை உடுத்தியவர், சுபஸ்திரீகள், நல்ல சொற்களைப் பேசுபவர், நல்ல நேரங்களில் அழைத்துவரச் செல்லுதல் முதலியன நல்ல சகுனங்களாம்.

கபம்

இது சீதளம், கனத்துவம், மந்தம், வழுவழுப்பு, மினுமினுப்பு, ஸ்திரம் முதலிய குணங்களையுடையது. இது மார்பை இருப்பிடமாகக் கொண்டு, மார்பு தலை நா கண்டம் ஆமம் கீல்கள், உரோமம் இரசதாது மேதோதாது முதலியவற்றில் சஞ்சரித்து,

அசையாமை, மழுமழுப்பு, கீல்களுக்கு உறுதி முதலிய தொழில்களுக்குக் காரணமாயுள்ளது. இது அவலம்பகம், கிலேதகம், போதகம், தருப்பகம், சந்திகம் என ஐந்து வகைப்படும்.

அவலம்பகமானது இருதயஸ் தானத்தினிடமாக நின்று மற்ற நான்கு வகை கபங்களுக்கும் ஆகாரமாயிருக்கும்.

கிலேதகமானது ஆமாசயத்தினிடமாக நின்று அன்னபானாதிகளை மிருதுவாக்குந் தொழிலைப் புரியும்.

போதகமானது, நாவில் நின்று சுவைகளை அறியச் செய்யும்.

தருப்பகமானது, சிரசில் நின்று கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

சந்திகமானது, கீல்களின் இயக்கத்திற்குக் காரணமாகி நிற்கும்.

வாதத்திற்கு பாதம் முதல் நாபி வரையில் இடமென்றும், பித்தத்திற்கு நாபி முதல் கண்டம் வரையில் இடமென்றும், சிலேத்துமத்திற்கு கண்டம் முதல் சிரசு வரையில் இடமென்றும் கூறப்படும்.

மற்றும் மலத்தைப் பற்றியது வாதமென்றும், மூத்திரத்தைப் பற்றியது பித்த மென்றும், விந்துவைப் பற்றியது கப மென்றும், வாதத்திற்கு நிறம் கருப் பென்றும், பித்தத்திற்கு நிறம் மஞ்சளென்றும், கபத்திற்கு நிறம் வெண்மை யென்றும் கூறப்படும்.

நோய்களில் காணுங் குறி குணங்களைக் கொண்டு அந்நோயில் விகற்ப முற்ற தோஷங்களை எளிதில் கண்டறிய மேற் கூறப்பட்ட முக்குற்ற இலக்கணம் பெரிதும் உதவி புரியு மென்றுணர்க.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: