தரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க

தரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க
தரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க குவையம் இயங்கியல் (Quantum Mechanics) கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொலை தொடர்பு அமைப்பு!!!

இணையத்தில் நாம் தகவல்களை, தரவுகளை அனுப்பும் பொழுதும் பெறும் பொழுதும், அந்த தகவல்களை இடையில் இருப்பவர்களால் என்ன தகவல் பரிமாறப்படுகிறது என்பதை அறிய முடியும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் கணிணி அல்லது திறன் பேசியில் இருந்து ஒரு தகவலை அனுப்புகிறீர்கள் அல்லது பெறுகிறீர்கள் என்றால், உங்களின் இணைய தொண்டு வழங்குனரால் (ISP) அந்த தகவலை அவரின் வழங்கியில் சேமித்து தகவல் என்ன என்பதை காண முடியும்.

இந்த நிலையை போக்க தரவுகள் மறையாக்கம் (Encrypt) செய்யப்படுகின்றன. அதாவது, அனுப்பும் அல்லது பெறும் தகவல், குறிப்பிட்ட குறியீடுகளை கொண்டு மறைக்கப்பட்டுகிறது. தகவல், குறிப்பிட்ட நபரை அடைந்தால் மட்டுமே மறையாக்கம் நீக்கப்பட்டு தகவல் வெளிவரும்.

ஆக, மறையாக்கம் செய்து தகவல்களை அனுப்புவது பெறுவது மூலம், இடையில் யாராவது தகவலை எடுத்தால், அவர்களால் அதன் பொருள் அறிய இயலாது.

ஆனாலும், மறையாக்கம் செய்யப்பட்ட தரவு அவர்களிடம் இருப்பதால், அவர்கள் அந்த மறையாக்கத்தை ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

அதாவது, தகவல் ஊடுருவிய ஊடுருவலாளர் சில நாட்கள், கிழமைகள், திங்கள்கள் அல்லது ஆண்டுகள் முயன்றால் அந்த தகவலின் மறையாக்கம் நீக்க முடியும்.

மீத்திறன் மிக்க கணிணிகள் உருவாக்கப்படும் நிலையில், இந்த மறையாக்கம் தகர்க்கப்பட்டு தரவில் உள்ள தகவல் திருடப்படலாம்.

குறிப்பாக, வங்கித்துறை மற்றும் மருத்துவ துறை, இவை இரண்டும் இந்த தகவல் திருட வரும் ஊடுருவலாளர்களை கண்டு என்றும் அச்சம் கொள்ளும் நிலை இருந்து வருகிறது.

இந்த தகவல்கள் பரிமாற்றம் எல்லாம் குறிப்பிட்ட மின்னனு கருவிகள் மூலம் நடத்தப்படுவதால், ஊடுருவலாளர் மின்னனு கருவியை தொடாமல், மாற்றி அமைக்காமலேயே, அதன் மூலம் என்ன தகவல் பரிமாறப்படுகிறது என்பதை அதில் பயனிக்கும் மின்னனு துகள்களை திறன் மிக்க கருவிகள் மூலம் அளவீடு செய்து கண்டறிந்துகொள்ள முடியும்.
இதற்கு மாற்று:
யார்க் பல்கலை கழகத்தை சார்ந்த ஆராய்வாளர்கள், இந்த தகவல் திருட்டை தடுக்கும் விதமாக, குவையம் அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்பை ஏற்படுத்தி முயன்றுள்ளனர்.

குவையம் இயங்கியல் (Quantum Mechanics) கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொலை தொடர்பு அமைப்பு இயங்குமேயானால், அதற்கு பயன்படும் மின்னனு கருவிகள் ஒரே மாதிரியான செயல் முறைகளை மட்டும் பின்பற்றாமல் இருப்பதால், ஊடுருவலாளரால் அந்த தொலை தொடர்பு மின்னனு கருவியில் பரிமாற்றப்படும் தரவுகளை திருட இயலாது.

இந்த புதிய முறையானது, ஏற்கனவே உள்ள இணைய தொலை தொடர்பு கட்டமைப்பில் பொருந்திக்கொள்ளும் விதமாக உள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் துவக்க நிலையில் இருப்பதால் இன்னும் இது தொட்ரபான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: