எச்சரிக்கை... !!! அழியப்போகிறது ஓசூர்...

எச்சரிக்கை... !!! அழியப்போகிறது ஓசூர்...

தமிழகத்தின் பெருமை மிகு தொழில் நகரமாக கருதப்படும் ஓசூர் இன்னும் 3 ஆண்டுகளில் அழிந்து விடும் என்று சொன்னால், பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.  ஆனால், உண்மை நிலவரம் அதுவே!!!

ஓசூர் - அதன் வளர்ச்சி:

பொதுவாக தமிழகத்தின் எல்லா தொழில் நகரங்களும் மக்களால் உருவாக்கப்பட்டது.  ஓசூர் மட்டும் அதற்கு விதி விலக்காக, தமிழக அரசின் முயற்சியால் தொழில் நகரமாக உருப்பெற்றது.

எடுத்துக்காட்டாக, கிருட்டினகிரி மாவட்டத்தின் காரிமங்கலமாக இருந்தாலும் சரி, விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசியாக இருந்தாலும் சரி, அந்த ஊர்களெல்லாம் தொழில் நகரமாக மாறியது என்றால், அது முழுக்க முழுக்க உள்ளூர் மக்கள் தம் ஆர்வத்தால் தொழில் வளம் பெருக வைத்தனர் என சொல்லலாம்.

ஆனால், ஓசூர், அதற்கு முற்றிலும் விலக்காக, தமிழக அரசின் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பால் உருவானது.  தொழில் வளம் இங்கே வளர்ந்து வந்த நேரத்தில், பள்ளி கல்விக்கான வாய்ப்புகளுக்காக புனித வளனார் (செயின்ட் சோசப்) மற்றும் மகரிசி போன்ற பள்ளிகள் அரசு நில ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டன.

3,000 ற்கும் குறைவான மக்கள் தொகையை 1970 களில் பெற்றிருந்த ஓசூர் இன்று சுமார் 300,000 மக்கள் தொகை கொண்ட பெரு நகரமாக வளர்ந்து நிற்கிறது.

தருமபுரி, கிருட்டினகிரி ஆகிய பேரூர்களின் வளர்ச்சி விகிதத்தை தாண்டி இன்று பெருமை மிகு மாநகராட்சி என்ற அடையாளத்துடன் ஓசூர் திகழ்கிறது.

ஓசூர் தொழில் வளம்:

ஓசூர் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இங்கு இயங்கும் பெரும் ஆட்டோமோபைல் தொழிற்சாலைகள் தான்.  இன்றளவும், பெரும்பாலான குறுந்தொழில் வளர்சிக்கு பங்காற்றி வருகின்றன.  இவை சார்ந்தே பெரும்பாலான பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஓசூரின் வேலை வாய்ப்புக்கள் இந்த தொழிற் சாலைகளை சார்ந்தே இருக்கிறது. ஓசூர் மக்களின் பொருளாதார நிலையும் ஆட்டோமோபை தொழிலும் எலும்பும் சதையும் போல ஒட்டி உரவாடுகின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமேயானால், இவை ஓசூரின் உயிர் நாடி எனலாம்.

ஓசூரின் 95 விழுக்காடு நிறுவனக்கள் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வண்டி உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளில் தொடர்புடையவை.  ஆங்கிலத்தில் "ஆட்டோமொபைல் இன்டஸ்டிரீஸ்" என சொல்வார்கள்.

நாட்டின் பொருளாதாரமும் ஓசூரும்:

ஆசியாவின் டெட்ராயிடு என்று குறிப்பிடப்படுவது சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அதன் தொடர்ச்சி பகுதியான ஓசூர்.

அந்த அளவிற்கு இந்த பகுதிகளில் வண்டி உற்பத்தி மற்றும் அதற்கு தேவையான சார்பு தொழிற்சாலைகள் நிறைந்து செயல்பட்டுக்கொண்டிருகின்றன.

உலக பொருளாதாரத்தில் ஒரு சுனக்கம் என்றால் இங்கு தொழில் செய்பவர்களும் வாழ்பவர்களும் சுனக்கத்தின் தாக்கத்தை உணரும் அளவிற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இந்த பகுதிகள் இணைந்து இருக்கின்றன.

தமிழகத்தின் விற்பனை வரி பங்களிப்பில் ஓசூர் பெரும் பங்காற்றுகிறது.  வருமானவரி கட்டுவோரின் எண்ணிக்கை வேலூர், கிருட்டிணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளை ஒப்பிட்டால் ஓசூரில் தான் கூடுதல்.

பெட்ரோலிய தொழில்:

2055 ஆம் ஆண்டுடன் பெட்ரோல் உற்பத்தி என்று ஒன்று உலக அளவில் இல்லாமல் போக போகிறது.  பெட்ரோலிய பொருட்கள் இயற்கை வளம்.  அவை இன்றைய அளவிலேயே தொடர்ந்து புவிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டால், 2055 ஆம் ஆண்டு புவிக்கு அடியில் அவை இல்லாமல் போகும்.

மேலும், வண்டிகள் பெட்ரோலிய பொருட்களில் இயங்குவதால், மாசு கட்டுக்கடங்காமல் சென்று, புவி வெப்பமயமாகுதல், காடுகள் அழிவு போன்ற இயற்கை பேரிடர்கள் தோன்றுகின்றன.

இதை உணர்ந்த உலக நாடுகள், பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக பிற எரி பொருட்களை, குறிப்பாக, மின் சார்ந்து இயங்கும் வண்டி உற்பத்தியில் தங்களது கவனத்தை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செலுத்த துவங்கிவிட்டன.

இந்திய அரசும் பெட்ரோலிய கொள்கையும்:

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நடுவன் அரசு பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வண்டிகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து தடுக்கும் விதமாக கொள்கை முடிவு எடுத்து அதற்கு ஏற்ப டீசல் மானியம் முதலியவற்றை நிறுத்தத்துவங்கியது.

மேலும், புவி மாசு அடைவதை தடுக்கும் விதமாக பி ஸ் 4, பி ஸ் 6 என பல தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பிஸ் 4 என்கிற தரக்கட்டுப்பாடு 2017 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.  பிஸ் 6 என்கிற கட்டுப்பாடு 2020 -ல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால், ஓசூர் தொழில் முனைவோர் பெரும் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர்.

நசுக்கப்படுகிறது ஓசூர் தொழில் கூடங்கள்:

திமுக-வின் ஆட்சியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு 2010 ஆம் ஆண்டு வாக்கில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 2012 அதிமுக ஆட்சி வந்தது.  அன்றைய சூழலில் அறிவிக்கப்பட்ட 20 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது.  மின் கொடுக்கப்பட்ட 4 மணி நேரத்திலும், தொழில் செய்ய பயன்படுத்த இயலாத குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரமாக இருந்தது.

இதனால், ஓசூர் தொழில் முனைவோர் தொழிலை விட்டு விட்டு ஓடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அத்தகைய இக்கட்டான சூழலை சமாளிக்க, மின் ஆக்கிகளுக்காக ஓசூர் தொழில் முனைவோர் பெரும் முதலீடுகளை செய்தனர்.

அதை தொடர்ந்து பொருளாதார மந்த நிலை நாட்டில் நிலவியது.  இதனால் உற்பத்தி குறைந்து தொழில் முனைவோரை மேலும் பாதிப்படையச் செய்தது.

இதற்கு அடுத்தபடியாக திட்டமே இல்லாமல் ஜிஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தது.  இதனால், தொழில் முனைவோரிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஜிஸ்டி வரி விதிப்பும் ஓசூரும்:

ஜிஸ்டி வரி விதிப்பு என்பது பல வகைகளில் தொழில் முனைவோருக்கு நன்மை செய்வதே!.  ஆனால், ஓசூர் குறுந்தொழில் செய்வோருக்கு அது ஒரு பழிப்பாக அமைகிறது என்பதே உண்மை.

குறுந்தொழில் செய்வோர், பெரும் தொழில் நிறுவங்களுக்கு 120 நாட்கள் கடன் என்ற வகையில் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.

ஜிஸ்டி வரி விதிப்பின் படி வண்டி உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 28 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது.  அதாவது 100,000 ரூபாய்க்கு பொருளை உற்பத்தி செய்து விற்றால் ரூபாய் 28,000 வரியாக கட்ட வேண்டும்.

தாங்கள் வாங்கிய மூல பொருட்களுக்கு கட்டிய வரியை கழித்தாலும் 10 விழுக்காடு வரியை செலுத்த வேண்டும்.

120 நாட்கள் கழித்து பணம் கிடைக்கிறது என்றால், ரூபாய் 1 கோடிக்கு விற்பனை நடந்தால் அதற்கு ரூபாய் 10 லட்சம் திங்கள் தோறும் தனியாக முதலீடு செய்ய வேண்டிய நிலை வருகிறது.

4 திங்களுக்கு முதலீடு செய்யவேண்டு உள்ளதால், ரூபாய் 40 லட்சம் கூடுதல் முதலீடு தேவை ஏற்படுகிறது.

குறுந்தொழில் முனைவோர் வங்கிகளில் இந்த 40 லட்சம் முதலீட்டை வட்டிக்கு கடனாக பெற்று சமாளிக்கின்றனர்.

வட்டி 12 விழுக்காடு என்றால், ஆண்டு வருவாயில் சுமார் 5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

மூலப்பொருள் கொள்முதல் என்று எதுவும் இல்லாமல், கூலிக்கு என்று மட்டும் வேலை செய்து கொடுப்பவர்கள் 18 விழுக்காடு வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

அரசுக்கு வரி செலுத்த ஒரு தொழில் முனைபவர் அரசு சார்ந்த வங்கியில் வட்டிக்கு பணம் பெற்று வரி செலுத்துகிறார் என்றால், இந்த கொடுமையை எங்கு சொல்வது!

நடுவன் அரசின் நல்ல திட்டம் ஓசூருக்கு தீமையை விளைவிக்கிறது:

நடுவன் அரசு, குறுந்தொழில் வளர்சியையும் எண்ணிக்கையையும் வளர்க்கும் விதமாக, புதிதாக தொழில் முனைய வருபவர்களுக்கு ரூபாய் 2 கோடி அளவிற்கு கடன் வழங்கி வருகிறது.

அதிலும், இந்த கடன் வழங்குவதில் மாவட்டங்களுக்கு இலக்கு கொடுக்கப்பட்டு, வந்து கேட்பவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்கப்படுகிறது.

இத்தகைய கடன் பெறுவதற்கு சிறப்பு தகுதியே, குடும்பங்களில் உள்ளவர்கள் யாரும் தொழில் முனைபவராக இருக்கக் கூடாது என்பது தான்.

அதாவது, தொழில் நிறுவனம் அமைத்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள், குறிப்பாக “இப்படி தொழில் செய்யக் கூடாது” என்று அறியாத நபர்களுக்குத்தான் அந்த சிறப்பு கடன் வசதி கொடுக்கப்படுகிறது.

அரசின் திட்டமும் எண்ணமும் நல்லதே என்றாலும் அதனால், ஓசூர் எவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகிறது என்று பார்க்கலாம்!

ஒரு குறுந்தொழில் நிறுவனம், இரு சக்கர வண்டி உற்பத்திக்கான உதிரி பாகம் செய்து தருகிறது என எடுத்துக்கொள்வோம்.  வண்டியில் பயன்படுத்தும் வண்டி நடு நிறுத்தி (சென்டர் ஸ்டாண்டு) இரும்புக்குழாயால் செய்யப்பட்டிருக்கும்.

பெயிண்ட் அடிப்பதற்கு முன், அதன் மீது படிந்திருக்கும் துரு, எண்ணை பிசுக்கு மற்றும் பிற கழிவுகளை நீக்க, அவற்றை அமிலங்களில் அலசி எடுப்பர்.

அவ்வாறு அலசி எடுக்கும் பொழுது அமிலம் இடை வெளிகளில் புகுந்து குழாயில் தங்கி விடும். அமிலம் தங்கிவிட்டால் குழாயை அரித்து கெடுத்துவிடும். இதற்காக, அந்த குழாயில் சிறு துவாரத்தை அமைக்கின்றனர்.  அந்த துவாரம் வழியாக அமிலம் வடித்தெடுக்கப்படுகிறது.

இந்த துவாரம் அமைப்பதற்கு ஒரு துவார துளை இட 7 காசுகள் கொடுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

பல நாட்களாக அதை ஒரு தொழிலாக செய்பவர், தனக்கு அந்த 7 காசு கட்டனம் கட்டுப்படியாகவில்லை என முடிவெடுத்து பெரும் நிறுவனத்திடம் கட்டன உயர்வு வேண்டி முறையிடுகிறார்.

பெரும் நிறுவனம், இவரது கோரிக்கையை ஆய்வதாக சொல்லி விட்டு, தம் துணை நிறுவங்களில் பணிபுரிகின்ற ஒரு தொழிலாளியை மூளை சலவை செய்து, தாம் அவருக்கு இந்த தொழில் வாய்ப்பை தருவதாக சொல்லி, புதிய தொழில் துவங்க ஊக்குவிக்கிறது.

தான் பணி செய்த நிறுவனமே தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதால், தனது பெண்டாட்டி, தாய் என அனைவரது தாலி முதற்கொண்டு பெற்று, அந்த 2 கோடி கடன் திட்டத்தில் கடனையும் பெற்று தொழில் துவங்குகிறார்.

முன்னவருக்கு 7 காசு என்றால், புதியவருக்கு 6 காசுகள் என்று விலை பேரம் முடிகிறது.

இந்த புதிய தொழில் முனைபவர், தாம் நொடிப்பிற்கு தொழில் செய்து வருவதை அடிப்படை அறிவு என்று ஒன்று இருந்தால் இரண்டாண்டுகளில் கண்டறிந்து, தனக்கு அந்த விலை கட்டுப்படியாகவில்லை, அது நொடிப்பை ஏற்படுத்துகிறது என்று எடுத்துரைப்பார்.

அதற்குள், புதிய தொழில் முனைபவர் அதே 6 காசுக்கு தொழிலை துவங்க ஆயத்தமாகி இருப்பார்.

வாழ்வதற்கான வாய்ப்பை தேடும் ஓசூர் சிறு குறு தொழில் முனைவோர் பெரும் முதலாளிகளால் அறியாமையை பயன்படுத்தி சுரண்டப்படுகிறார்கள் என்பது விளங்குகிறது.

ஓசூர் தொழில் முனைபவரும், தொழில் அறிவும்:

ஓசூரில் தொழில் முனைபவராக, குறுந்தொழில் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் அனுபவம் இல்லாதவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இதனால், தாம் என்ன வட்டிக்கு கடன் பெறுகிறோம், என்ன வருவாய் கிடைக்கிறது, வரி விதிப்பு நடைமுறைகள் என்ன? தனக்கான உற்பத்தி திறனுக்கு ஏற்ப ஓசூர் தவிர்த்த பிற பகுதிகளில் யாரை எல்லாம் வாடிக்கையாளராக மாற்ற முடியும் போன்ற எந்த அடிப்படை அறிவும் இல்லாத நிலையில், அடிமை கூலிகள் போல பெரும் நிறுவங்களை சார்ந்து, கொடுக்கின்ற கூலியை ஏற்று தொழில் செய்து வருகின்றனர்.

வங்கிகளின் மேலாளர்களை கடவுளர்களுக்கு இணையாக பாவித்து அடியார்களாக தம் தொழிலை செய்து வருகின்றனர்.

கடன் பெறுபவர்களில் 90 விழுக்காட்டினர் கடன் தமக்கு கிடைத்தால் போதும் என்கிற மனநிலை கொண்டே கடன் பெறுகின்றனர்.  கடனுக்கான வட்டியை பேரம் பேசி குறைத்து பெற முடியும் என்பதே அறியாத அறிவிலிகளாக இருக்கின்றனர் என்பதே உண்மை.

வருவாய் இல்லாமை, தொடர் முதலீடு தேவை போன்ற சிக்கல்களில் தவிக்கும் ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழில் முனைபவர்கள், மன அழுத்தத்தால் சிந்தனை அற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.  கடும் மன அழுத்தத்தில் அல்லலுரும் இவர்கள் புதிய மாற்று முயற்சியோ அல்லது இருக்கும் தொழிலை கைவிட்டு விட்டு செல்வதையோ அவர்கள் கணவிலும் நினைத்து பார்ப்பதில்லை.

வருகிறது 2023:

வரும் 2023 ஆம் ஆண்டிற்கு பின் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வண்டி உற்பத்தி முழுமையாக நிருத்தப்படும்.

மின்கலங்களில் இயங்கும் வண்டிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும்.

நாம் ஏற்கனவே சொன்னது போல, ஓசூரின் 90 விழுக்காடு நிறுவங்கள் பெட்ரோலியம் சார்ந்த வண்டிகளுக்கான உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் வேலைகளை சார்ந்தே இயங்குகின்றன.

மின்கலன் வண்டிகளில், பெட்ரோலிய வண்டிகளில் தேவைப்படும் 90 விழுக்காடு உதிரிப்பாகங்கள் இருக்காது.  சொல்லப்போனால், மின் மின்கலன் வண்டிகளுக்கு, ஒரு மின்கலனும், ஒரு மின் மோட்டாரும், சக்கரங்களும், அது தொடர்பானவை இருந்தாலே போதுமானது.

அப்படியானால், நம் ஓசூரில் இயங்கும் தொழிற்சாலைகளின் நிலை?

வேலை வாய்ப்பு என்பதே உதிரிப்பாக உற்பத்தியில் தான் பெருமளவு இருக்கிறது.  அப்படியானால், வேலை வாய்ப்பு நிலை?

இன்று இயங்கும் தொழிற் கூடங்களில் பயன்படும் இயந்திரங்களில் பெரும்பாலானவை புதிய மின் தொழில் நுட்பம் சார்ந்த வண்டிகள் உற்பத்திக்கு பயனற்றதாக மாறிவிடும்.

இதனால், ஓசூர் தொழில் முனைவோர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி, ஓசூர் பொருளாதாரம் முற்றிலும் இல்லாமல் போகும்.

மாற்று வழி என்ன?

ஓசூரின் வீழ்ச்சியை தடுக்க ஒரே மாற்று வழி, ஓசூரின் குறுந்தொழில் முனைவோரை அரசு முன் வந்து காப்பதேயாகும்.

தமிழக அரசை பொருத்தவரை, துறை சார்ந்த அமைச்சர் பெருமக்கள், ஓசூரின் இக்கட்டான நிலையை உணர்வதாக தெரியவில்லை.  எத்துனை முறை நிலைமையை எடுத்துகூறி வேண்டிக்கேட்டாலும் அதற்கான எந்த வித நடவடிக்கையும் இல்லை.

நடுவன் அரசை பொருத்தவரை, பொருளாதார வல்லுனர் நிதி அமைச்சராக இல்லாத நிலையில் அவர்களிடம் எடுத்துக்கூறினாலும் எந்த பலனும் இல்லாத நிலை நீடிக்கிறது.

ஓசூரின் கோரிக்கை:

ஓசூரை பொருத்தமட்டில் பல்லாயிரம் கோடி ரூபாயும் லட்சக்கனக்கான தொழிலாளர்களின் வாழ்கையும் கன ரக தொழிற்சாலை சார்ந்தே இருக்கிறன.

இந்த முதலீடுகளையும் தொழிலாளர்களின் தொழில் திறன்களையும் வரும் ஓர் ஆண்டில் மாற்றி அமைக்க முயன்றால் அது இயலாதது.

இதற்கு மாற்று, நடுவன் அரசின், தொடர்வண்டி துறை, பாரத் எர்த் மூவர்ஸ், இரானுவம், விமான மற்றும் கப்பல் கட்டுமான துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி என அவற்றிற்கான பங்களிப்பை ஓசூர் தொழிற்சாலைகளுக்கு வழங்கினால் மட்டுமே ஓசூர் நகரை காக்க இயலும்.

அரசு இன்றைக்கேனும் விழித்துக்கொள்ளாவிட்டால், ஓசூர் என்ற பேரூர் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்தே போகும், இதுவே உண்மை நிலை!

இப்படிக்கு

அ சூசை பிரகாஷ்,
ஓசூர்ஆன்லைன்.com / https://hosuronline.com/

Share this Post:

தொடர்பான பதிவுகள்: