சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது

சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது

வருகிற செப்டம்பர் 7 ஆம் நாள் நிலாவில் தன் கால் பதிக்கும் என எதிர்பார்க்கப்படும் விண்கலம் "சந்திராயன் 2" இதுவரை திட்டமிட்டபடி துல்லியமாக தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

2008 ஆம் ஆண்டு, இந்தியாவின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன் என்ற விண்கலத்தை அனுப்பியது.

அந்த விண்கலம் சுமார் 312 நாட்கள் நிலவை சுற்றி வந்து தனது ஆய்வை மேற்கொண்டது.

அப்போது நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

சந்திராயன் திட்டத்தின்படி நிலவில் நேரடியாக இறங்காமல் நிலவை சுற்றியபடியே ஆய்வு நடந்தது.

சந்திராயன் 2, தற்பொழுது, நிலவில் இறங்கி தனது ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

இந்த திட்டத்திற்காக இந்தியா சுமார் 604 கோடி ரூபாய் முதலீட்டில் சந்திராயன் 2 விண்கலத்தை  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் வடிவமைத்துள்ளது.

சென்னை அருகே, ஆந்திர மாநிலத்தில் உள்ள ச்றீ-அரிக்கோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்௩ ராக்கெட் மூலம் சந்திரயான்௨ விண்கலம் இந்தாண்டு சூலை 22 -ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான்௨ விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது.

ஐந்து மாற்றங்கள்

முதலில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.

பின்னர் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான் 2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்று ஆகஸ்ட் 14-ம் நாள் 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையை சந்திரயான் 2 விண்கலம் இன்று (20.08.2019) சென்றடைந்தது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில் தற்பொழுது சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலம், வரும் செப்டம்பர் 7 ஆம் நாள் நிலவில் தரையிறங்கும்.

திட்டமிட்டபடி சந்திரயான் 2 சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: