ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது

கருநாடகா மாநிலத்தில் நந்தி மலை தொடரில் துவங்கும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்பொழுது அணையில் 41.49 அடி நீர் உள்ளது. கடந்த நாள் முதல் அணைக்கு வினாடிக்கு 568 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்தநிலையில், நேற்று நீர்வரத்து மேலும் பெருகி காணப்பட்டது. அதன்படி அணைக்கு வினாடிக்கு 808 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக 808 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரகாரம், மோரனபள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட ஊர்களின் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், கருநாடக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் பெருகும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு நீர்வரத்து பெருகினால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: