ஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்

ஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்


ஓசூர் கடுமையான பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.  ஓசூரில் வேலை இழப்பு பெருகுகிறது. ஓசூரில் குற்ற நிகழ்வுகள் பெருக துவங்குகின்றன... இப்படி என்ன செய்தி வந்தா நமக்கு என்ன?  நாம மக்களுக்கு தொண்டு செய்வதாக சொல்லி... அதில் பணம் செய்வோம்.

இப்படி மக்களுக்கு சென்றடைய வேண்டிய, ஓசூர் என்னும் ஊரை காக்க பயன்பட வேண்டிய பணத்தை தங்களுக்கு வருவாயாக ஈட்டிக்கொள்வது ஓசூரின் கோடீச்வரர்கள் தானாம்!!!

செலவு செய்யும் இடத்தில் தான் வருவாய்:

என்றுமே செலவு செய்யும் இடத்தில் நடுவில் இருந்து பணத்தை எடுத்தால் அது செலவு செய்பவருக்கோ அல்லது பயனருக்கோ அவ்வளவு எளிதில் உணர முடியாது.

பொது தொண்டு என்று வந்துவிட்டால், உண்மையில் தொண்டு செய்ய நினைப்பவர் தன் பணத்தை அல்லது செல்வத்தின் ஒரு பகுதியை தொண்டு செய்வதற்கு ஒதுக்குவார்.  அதை முன்னெடுத்து செய்ய என்று யாராவது வந்தால் அந்த பணம் அவர்களிடம் கொடுக்கப்படும்.  அவர்கள் எப்படியெல்லாம் அந்த பணத்தை செலவு செய்தார்கள், பயனர்கள் பயன்பட்டார்களா என்றெல்லாம் உன்னிப்பாக கவனிக்கப்படப்போவதில்லை.

இத்தகைய மன நிலையை தான் ஓசூரின் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்றால் மிகை இல்லை.

மொள்ளமாரி தனத்திற்கு வெளிநாட்டு பயிற்சி:

தொண்டு செய்வதில் பணம் பண்ணுதல் என்பதை ஓசூர் கோடீச்வரர்களுக்கு கற்று தந்தது உலகளாவிய அளவில் செயல்படும் சில தொண்டு அமைப்புகள் தான் என்றால் பலருக்கு புதிதாக தோன்றலாம்.

உலக அளவில் இயங்கும் தொண்டு கூட்டமைப்புகளில் உள்ள பலர் தம் பெயருக்கு முன்னால் அந்த இயக்கங்களின் பெயர்களை சூட்டி கொள்வர்.  அப்படி நம்மில் பலரும் வைத்திருக்கலாம்.

அத்தகைய தொண்டு அமைப்பில் ஈடுபடும் சிலர் தம் பெயருக்கு பின்னால் சில எழுத்துக்களை பெருமை பட சூட்டி மகிழ்வார்கள்.  அதை ஒரு பட்டம் என்று சொல்லலாம்.  அதாவது, தொண்டாற்ற கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப அந்த பட்டத்தை கொடுப்பார்கள்.

இங்கு தான் முறைகேடு கற்றுத்தரப்படுகிறது.  ஒரு பட்டம் இவ்வளவு விலை என்றால், அந்த பணத்தை கொடுத்துத்தானே அந்த பட்டத்தை வாங்க முடியும்.  ஆனால், தலைமை பதவியில் இருப்பவர் அடுத்தவர் பணத்தை கூட தமக்கு வேண்டியவர் பெயரில் செலுத்தி அந்த பட்டத்தை அவருக்கு கொடுக்கலாம்.  
அப்படி குறுக்கு வழியில் பட்டம் பெற்றவர், தமக்கு அதை பெற்றுத் தந்தவருக்கு நன்றியாக அவர் உயர் பதவி அடைய வாக்கு செலுத்துவார்.

உலகம் முழுவதும் அவன் அவன் தன் சொத்தை அழித்து தொண்டாற்றி வர, நம் ஓசூர் கோடீச்வரர்கள் சிலர் வாக்கு செலுத்த பட்டம் என்கிற பணம் வாங்கி மகிழ்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஓசூரின் மாசுபடுதலும் துட்டு பார்த்தலும்:

முன்னதை நாம் இங்கே குறிப்பிட்டது எதனால் என்றால், எத்தகையவர்கள் தொண்டாற்றும் மன நிலையில் நம்முடன் ஓசூரில் தொண்டாற்ற புறப்பட்டுள்ளனர் என்பதை விளக்கத்தான்.

ஓசூரின் தலையான இடர்பாடுகளில் ஒன்று நீர் மாசு படுதல்.  பல ஏரிகளில் தேங்கி நிற்கும் நீராகட்டும், தென்பெண்ணையில் ஓடுகிற நீராகட்டும், நிலத்தடி நீராகட்டும், அனைத்தும் வேதி பொருட்கள் கலப்பால் மாசடைந்துள்ளது.

மேலும், நீர் வழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள்.

மாசு பட்ட நீர் நிலைகளை தூய்மை ஆக்குகிறோம் என்பது வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாக இன்று ஓசூரில் உள்ள சில தொண்டு நிறுவனங்களின் சில உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நடுவண் அரசின் திட்டம்:

நீர் நிலைகளை தூய்மையாக்க வேண்டும் என நடுவண் அரசு திட்டம் வகுத்து அதை வேகமாக செயல்படுத்தி வருகிறது.  அதற்கான பணத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கு பதில், பெரு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய "பெரு நிறுவன பொது தொண்டு கடமை" என்கிற சி எஸ் ஆர் ஒதுக்கீடு பணத்தை பயன்படுத்த தூண்டப்படுகிறார்கள்.

அரசின் இந்த உயரிய நல்ல நோக்கத்தை சில ஓசூர் தொண்டு அமைப்புகளின் செயல்படும் உறுப்பினர்கள் சிலர் மட்டும் தமக்கு வருவாய் ஈட்டும் தொழிலாக பார்க்கின்றனர்.

இது கிட்டத்தட்ட நோகாத வேலை.  எவரோ பணம் ஒதுக்குகிறார்.  எவரோ அதற்கு வேலை செய்கிறார்.  நடுவில் நாம் இருந்தால் நமக்கு பணம்....  ஒரு திட்டத்தில் மூன்று நான்கு பேர் சேர்ந்து அடித்தாலும் தலைக்கு ரூபாய் 200,000 மேல் கிடைக்கும்,  என்ன ஒரு அருமையான தொழில் வாய்ப்பு?

மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள்:

ஓசூரில் இயங்கும் பல நிறுவனங்கள் தமக்கு தெரிந்தோ தெரியாமலோ பல நீர் நிலைகளில் மாசு ஏற்படுத்தி விட்டன அல்லது ஏற்படுத்தி வருகின்றன.

மாசு கட்டுப்பட்டு வாரியம் உடனடியாக அத்தகைய நிறுவனங்களை எச்சரிக்கும்.  அப்படி எச்சரிக்கை செய்யப்படும் நிறுவனங்களை நமது தொண்டு அமைப்புகள் தொடர்பு கொண்டு பேரம் பேசுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு மாசடைந்த ஏரியின் நீரை அப்படியே வெளியில் விட்டால், அது அடுத்தடுத்த ஏரிகளை மாசுபடுத்தும்.  அதனால், முதலில், மாசடைந்த அந்த ஏரியின் நீரை மாசகற்ற வேண்டும்.

இப்படி மாசடைந்த நீரை தூய்மை ஆக்க வேண்டுமானால், கோடி ரூபாய் செலவாகும்.  அதற்கு நம் ஓசூரில் தொழில்நுட்ப வல்லுனர்களும் இல்லை.  ஈரோடு அல்லது சென்னை போன்ற பகுதிகளில் தான் இதற்கான வல்லுனர்கள் உள்ளனர்.

இத்தகைய வல்லுனர்களை அழைத்து வந்து மாசு ஏற்படுத்திய நிறுவனத்திடம் பேச சொன்னால், அவர்கள் கேட்கும் தொகையை கேட்டதும் நிறுவனம் திகைத்து நிற்கும்.

இங்கே செயல்பட துவங்குகிறார்கள், பணம் ஈட்ட துடிக்கும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிலர்.

கிணறு வெட்டியாச்சு, அலுவலர் பார்த்தாச்சி, மாசு போயே போச்சு:

பல கோடி செலவு செய்தால் தான் ஒரு ஏரி நீரில் உள்ள மாசு நீங்கும் என்றால், இன்றைய பொருளாதார சூழலில் தயங்கி நிற்கும் நிறுவனத்திடம் பேரம் துவங்குகிறது.

அதாவது, தொண்டு நிறுவனம் அந்த ஏரியை தூய்மை செய்யும்.  அதற்கு அந்த நிறுவனம் "பெரு நிறுவன பொது தொண்டு கடமை" என்கிற சி எஸ் ஆர் ஒதுக்கீடு பணத்தை செலவிற்கு ஒதுக்கும்.

ஏரி நீர் தூய்மையாக்கப்பட்டதாக கணக்கில் எழுதப்படும்.

இங்கே கடமை ஆற்ற வேண்டிய அரசு ஊழியர்கள், மாசு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம், தொண்டு அமைப்பின் காசு பார்த்த உறுப்பினர்கள் என எல்லோருக்கும் மகிழ்ச்சி.

உண்மையில் நடப்பது வேதனை:

நம் ஓசூர் ஏரிகளில் உள்ள மாசு என்பது வெறும் கழிவு நீர் மாசு அல்ல.  இந்த நீர் நிலைகளை ஆய்வு செய்த ஈரோட்டை சேர்ந்த நிறுவனம், இந்த நீர் நிலைகளில் அடர்த்தி கூடிய உலோகங்கள் - மெர்க்குரி, லெட், மாங்கனீச், காட்மியம், ஆர்சனிக் போன்ற மனித உயிர்களுக்கு பெரும் தீங்கிழைக்கின்ற வேதி பொருட்கள் கலந்திருப்பதாக சொன்னது.

இத்தகைய மாசு அடைந்த நீர் நிலத்தடியில் புகுந்தால் அதை எடுத்து குடிக்கும் அல்லது பயன்படுத்தும் மக்கள் புற்று நோய் உள்ளிட்ட பல இடர்பாடுகளை, நோய் தொற்றுக்களை சந்திக்க நேரிடும்.

அந்த நீரை அப்படியே வெளியேற்றி கால்வாயில் விட்டால், அது மாவட்டத்தின் பிற பகுதி நிலத்தடி நீரை பாதிக்கும்.

இந்த நீரைக்கொண்டு உழவு செய்தால், அது மீன், காய், கனிகளில் தொற்றி யாரெல்லாம் அதை உணவாக உட்கொள்கிறார்களோ அவர்களை எல்லாம் கொடிய நோய் கொண்டு தாக்கும். மேலும் பிறக்கப்போகும் குழந்தைகளை தாயின் வயிற்றிலேயே பாதிப்பை உண்டாக்கும்.

ஆக மாசடைந்த  நீரை தூய்மையாக்கித்தான் மாசடைந்த ஏரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கட்டாய சூழலில், பொது தொண்டு என்கிற அடையாளத்தை தம் முக மூடியாக அணிந்து வருபவர்கள் துணையுடன் அந்த நீர் அப்படியே ஏரியை விட்டு வெளியேற்றப்படுகிறது.

அது அடுத்த ஏரியை பாதிக்கும்.  அடுத்த ஏரி பாதித்தால், அதன் அருகில் இருக்கும் நிறுவனம் குற்றச்சாட்டிற்கு ஆளாகும்.  அதனால் புது தொழில் வாய்ப்பு கிட்டும் என்பது நம் ஒரு சில பொது தொண்டாளர்களின் மன நிலை.

தேங்கி நின்ற நீர் மாசு என்றால், அதில் ஊறி நின்ற மண் எத்தகையதாக இருக்கும்?  அதை எந்த அப்பாவியின் உழவு நிலத்திலாவது உரம் என்ற பெயரில் கொட்டி அதிலும் காசு பார்க்கலாம்!!!

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு என்ற உண்மை நிலையில், பேரத்தை கால் பகுதியாக படித்து பேசி, ரூபாய் 2,500,000 முடித்தார்கள் ஓசூரின் ஒரு தொண்டு நிறுவனத்தின் சில உறுப்பினர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இவர்களிடம் நீரில் உள்ள மாசை அகற்றுவதற்கு எந்த தொழில் நுட்ப அறிவும் கிடையாது.  நீரை வெளியில் மாசுடன் அப்படியே விட்டதற்கு எந்த செலவும் வராது.  ஆனால் நீரை தூய்மையாக்கியதாக ஒரு செலவு எழுதிக்கொள்ளலாம்.

ஏரிகளில் தூர் வாரப்படும் மண் உழவர்களுக்கும், மண்பாண்டம் செய்பவர்களுக்கும் விலையில்லாமல் கொடுக்க வேண்டும் என்பது விதி.

காசு பார்த்தல் என்று வந்துவிட்டால் விதியின் விதி என்ன ஆகும்!!!

அதுவும் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த மண்ணை எந்த அப்பாவி உழவன் காசு போட்டு வாங்கினானோ?
அடுத்து மண் அகற்றியதாக ஒரு திங்கள் பொழுதிற்கு ஜே சி.பி இயந்திரங்கள் மற்றும் சரக்குந்து வாடகை என கணக்கில் எழுதிக்கொள்ளலாம்.

வெட்கக்கேடாக, மாசடைந்த ஏரிக்கு பாதுகாப்பு பணி மேற்கொண்டதாக ஒரு தொகையை கூட கணக்கில் எழுத்திக்கொள்ளலாம்.

ஏரி தூய்மையாக்குதல் என்ற அடிப்படை தொழில் நுட்ப அறிவே இல்லாத நிலையில் அறிவுரை சொன்னதற்கு ஒரு கட்டணம், வந்ததற்கு ஒரு கட்டணம், போனதற்கு ஒரு கட்டணம்,  டீ, காப்பி குடிக்க கட்டணம், சோறு வாங்கி தின்ன ஒரு கட்டணம் என பல வகை செலவு கணக்கு எழுதி ரூபாய் 2,500,000 முடித்து விடலாம்.
செலவு செய்தது ரூபாய் 500,000 என்று வைத்தாலும் மீதம் ரூபாய் 2,000,000???

இதில் யாராவது வரவு செலவு குறித்து கணக்கு கேட்டால் அடி உதையாம்!!!

அரசை பொறுத்தவரை, ஓசூரின் தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் ஏரியை தூய்மையாக்கியுள்ளனர்.  ஆகவே அது சிறந்த பணியாகத்தான் இருக்க முடியும்.

ஏரியின் அருகில் பாதிப்புடன் வாழும் மக்களை பொறுத்தவரை, ஏரி தொண்டு நிறுவனத்தால் தூய்மையானதாக நம்பி வாழ்வர்.

நிறுவனத்தை பொறுத்தவரை ரூபாய் ஒரு கோடிக்கு வந்த செலவு ரூபாய் 2,500,000 முடிந்தது.
நம் ஓசூர் தொண்டு நிறுவனத்தின் சிலருக்கு, தொண்டு செய்ததாக சொல்லிக்கொண்டால் துட்டு கிடைக்கும் என்கிற புது தொழில் வாய்ப்பு!!!

அரசிற்கு வேண்டுகோள்: 

வளர்க்க பொது தொண்டாற்றுபவர்களின் வங்கி கணக்கு என இதை விட்டுவிட இயலாது.  பதிப்படைவது ஓசூரில் வாழ்கின்ற நாம்!

மாசு அகற்றுதல் என்கிற தொழில் நுட்ப அறிவற்றர்கள் மூலம், ஏரிகளை தூய்மை ஆக்கியதாக மக்களுக்கு பயனற்ற கணக்கு எழுதுவதற்கு பதில், தூய்மை செய்ய முன்வரும் நிறுவனங்களையே தாமாக அந்த பணிகளை செய்ய வைத்து அதற்கு காசு பணம் என்று தம் பெயரில் வாங்கிக்கொள்ளாத உண்மையான தொண்டாற்றும் மனம் உள்ளவர்களை ஆலோசகர்களாக அமர்த்தலாமே?

நிறுவனங்களும், செய்கின்ற தொண்டை மனதார, மக்களுக்கு பயன்படும் விதத்தில் மேற்கொள்ளலாமே?  தம் ஒருவரால் முழுமையான பணத்தை செலவு செய்ய இயலாது என்றால், மாவட்ட மேலாண்மையுடன் கலந்து பேசி, பிற நிறுவனங்களையும் உடன் இணைத்து பணிபுரியலாமே?

ஓசூர் மக்களும், இந்த மண், நாம் வாழ்வதற்கான மண், இது மாசடைந்தால் நம் சந்ததி பாதிப்படையும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் வாழலாமே?

மாசு அடைந்ததில் எவரோ காசு ஈட்டினார் என்று இந்த கட்டுரையை அணுகாமல், நாம் பாதிப்படைகிறோம் என்பதை உணர்ந்தால் சரி.

குறிப்பு:  இந்த கட்டுரை மூலம் யாரையும் அசிங்கப்படுத்துவதோ, குற்றம்சாட்டுவதோ அல்லது கோபம் கொள்ள வைப்பதோ நோக்கம் அல்ல.

சூசை பிரகாஷ் அ


Share this Post:

தொடர்பான பதிவுகள்: