தமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன?

தமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன?

பாகம் 1 / பாடம் 7


தமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன? என்பது குறித்து, கீழே தனித் தனியாக அவற்றிற்கு விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது.

சாறு: இது ஈரப் பசையுள்ள மூலிகைப் பொருட்களை இடித்தோ வதக்கியோ, அல்லது பிற பொருள்களைச் சேர்த்தோ அதினின்று நீர் போன்ற சத்தை எடுப்பாதம்.

சுரசம்: இது முற்கூறப்பட்டபடி எடுத்த சாற்றை சிறிது சுட வைத்து எடுத்துக் கொள்வதாகும்.

குடிநீர்: இது சில பொருட்களை சதைத்து அத்துடன் நீர் சேர்த்து முறைப்படி காய்ச்சி வடித்துக் கொள்வதாம்.


கற்கம்


இது சில பொருட்களை நீர் விட்டு கெட்டி பதமாக அரைத்தெடுத்த விழுதாகும்.

உக்களி: இது அரிசி மாவு முதலியவற்றுடன் சில மூலிகைச் சாற்றைக் கூட்டி சர்க்கரை முதலியவைகளையும் சேர்த்து களிபோல் கிண்டுவதாம்.

அடை: இது அரிசிமாவுடன் சில மூலிகைகளைச் சேர்த்து அரைத்து அடைபோல் தட்டி சுட்டு எடுப்பதாம்.

சூரணம்: பொருட்களை இடித்து தூள் செய்து பக்குவமாக்கி (வஸ்திரகாயம்) செய்து எடுத்த தூளுக்கே சூரணம் என்று பெயர்.

பிட்டு: இது கார் அரிசி முதலியவற்றுடன் சில மூலிகைகளையும் சேர்த்து இடித்து பிட்டவியலாகச் செய்தல்.

வடகம்: சூரணத்துடன் வெல்லம் சேர்த்து பிட்டவியலாகச் செய்து சூட்டிலேயே இடித்து உருண்டைகளாகச் செய்வதே வடகமாம்.

வெண்ணெய்: எண்ணெய் அல்லது நெய்யுடன் சில சரக்குகளைச் சேர்த்து உருக்கி நீரிலிட்டு கடைந்து வெண்ணெய் போல் செய்தல்.

மணப்பாகு: இது சில பொருட்களை கியாழம் வைத்து அல்லது இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து தேன்பதத்திற்கு காய்ச்சி எடுப்பதாம்.


நெய்


நெய்யுடன் சில சர்க்குகளின் தூளையோ, சாற்றையோ சேர்த்து நெய் பதத்திற்கு காய்ச்சி வடிப்பது.

வேதி: இது சூரணத்துடன் நெய், தேன் முதலியவைகளைக் கூட்டி பிசரி வைத்துக் கொள்வது. இதை வட மொழியில் இரசாயணம் என்பர்.

இளகம்: சர்க்கரையை பாகு எடுத்து அத்துடன் சூரணங்களைச் சேர்த்து நெய், தேன் விட்டுப் பிசைந்து எடுப்பதாம். வட மொழியில் இதனை இலேகியம் எனவுங் கூறுவர்.

எண்ணெய்: எண்ணெயுடன் பொருட்களின் தூளையோ சாறு கற்கம் முதலியவைகளையோ சேர்த்து, நீரெல்லாம் சுண்டி எண்ணெய் பதத்தில் காய்ச்சி வடிப்பதாம். வடமொழியில் இது தைலம் என அழைக்கப்படுகிறது.

மாத்திரை: சரக்குகளை தூள்செய்து கல்வத்திலிட்டு ஏதேனும் நீர் பொருட்களை விட்டு அரைத்து மெழுகு பதத்தில் சிறு அளவு உருண்டைகளாகத் திரட்டி எடுப்பதே மாத்திரையாம்.

கடுகு: இது சில தமிழ் மருந்து பொருட்களின் சூரணத்துடன் எண்ணாஈ பொருள்களைச் சேர்த்து காய்ச்சி கடுகு போல் திரண்டு வரும் சேறு பதத்தில் எடுப்பதாகும்.

பக்குவம்: கடுக்காய் போன்ற சில சரக்குகளை பழச்சாறு போன்ற சில நீர்மங்களில் போட்டு வைத்து பக்குவப் படுத்துதல்.


தேனூரல்


இஞ்சி போன்ற சில பொருட்களை தேனில் ஊற வைத்தல்.

தீநீர்: இது சில பொருட்களை வாலையிலிட்டு எரித்து நீர்மம் போல் கிடைக்கும் நீரைச் சேகரிப்பதாம்.

மெழுகு: பொருட்களை தூள் செய்து தேன் முதலியன விட்டு அரைத்து மெழுகு பதத்தில் எடுப்பதே மெழுகாம்.

குழம்பு: பொருட்களை அரைத்தோ, எரித்தோ குழம்பு பதத்தில் எடுப்பது.

பதங்கம்: சில பொருட்களை ஓர் சட்டியிலிட்டு மேல் சட்டி மூடி சீலை செய்து எரித்து ஆறின பின்பு மேற் சட்டியில் ஒட்டியுள்ள தூளை சுரண்டி எடுத்துக் கொள்வதே பதங்கமாம்.


செந்தூரம்


இது சில பொருட்களை அரைத்தோ, எரித்தோ, புடமிட்டோ சிவப்புநிறத் தூளாகச் செய்வதாம்.

நீறு: இது சில பொருட்களை அரைத்தோ, எரித்தோ, புடமிட்டோ வெண்மை நிறத் தூளாகச் செய்வதாம். இதனை வட மொழியில் பற்ப மென கூறுவர்.

கட்டு: இது சில பொருட்களை ஓட்டிலிட்டு அடுப்பிலேற்றி சில நீர்மங்களைக் கொண்டு சுருக்கு கொடுத்து கெட்டிப்படுத்துவதாகும்.

உருக்கு: இது சில பொருட்களை மூசையிலிட்டு ஊதி உருக்கி சாய்ப்பதாகும்.

களங்கு: இது உலோகங்களுடன் பாஷாணாதி பொருட்களை சேர்த்து முன்போல் உருக்கி எடுப்பதாகும்.

சுண்ணம்: இது சில பொருட்களை காரமுடைய தீநீர் முதலியவைகளால் அரைத்து புடமிட்டு அல்லது ஊதி சுண்ணாம்பு போல காரமுடைய மருந்தாகச் செய்தல்.

கற்பம்: இது சில மூலிகைப் பொருட்களையாவது அல்லது முப்பு போன்ற சில முடிவு பெற்ற பெரும் மருந்துகளையாவது பத்திய விதிப்படி முறையே உண்டு வருதலாம். இதனை காய கற்பம் எனவுங் கூறுவர். இது உடலை நெடு நாள் அழியாமல் இருக்க செய்யும்.

சத்து: இது மூலிகைப் பொருள்கள், உலோகம், உபாசம் முதலியவற்றினின்று முறைப்படி அவற்றின் சத்தை எடுப்பதாம்.


குரு குளிகை:


இது இரசத்தை மூலிகைகள் கொண்டு அரைத்தோ, வெற்றிநீர்கள் கொண்டு சுருக்கிட்டோ, முப்பு முதலியவைகளைச் சேர்த்தோ கட்டி மணியாக்கி, முறைப்படி சாரணைகளைச் செய்து நெருப்புக்கு ஓடாதபடி செய்தலாம். இது வாதம் முதல் பல சித்துகளுக்குப் பயன்படும்.

தமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன என்பது குறித்தும் அவற்றின் பெயருக்கான உட் பொருள் என்ன என்பது குறித்து அறிந்தோம்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: