சுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்!!!

சுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்!!!

சாலையை பயன்படுத்தும் பலரும் நொந்து கொள்வது, அதிரடி வசூலாக சுங்கச்சாவடிகள் மூலம் நடத்தப்படும் சுங்க கட்டணமே!

இன்றைய நிலையில், தமிழகத்தின் சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க 6 வழி சாலை என்றால் ரூ 2 ம் 4 வழி என்றால் ரூ 1.50 என்ற அளவில் வசூலிக்கிறார்கள்.

இந்த கட்டணம் எல்லாம் சாலையை பயன்படுத்த மட்டும் தானா என்றால், அது தான் இல்லை.  மேலும், நாம் கட்டும் இந்த கட்டணத்திற்கு அதை வசூலிப்பவர்கள் நமக்கு செய்து கொடுக்க வேண்டிய பல தொண்டுகள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

சுங்கம் கட்டுவதற்கு முன், நமக்கான பயன்கள் என்ன என்று பார்க்கலாம்.

நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் கொடுக்கும் பணம் சாலையை பயன்படுத்தியதற்காக மட்டும் அல்ல.  

உங்கள் பயணம் எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க 24 மணி நேர காவல் துறையின் ரோந்து பாதுகாப்பு.

சாலையில் பயணிக்கும் போது இடர் நேர்ந்தால், அவற்றை சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்.  கிட்டத்தட்ட அது ஒரு காப்பீடு போன்றது.

சுங்கம் செலுத்தியத்தற்கான சீட்டு உங்களிடம் கொடுக்கப்படுகிறது அல்லவா.  அதை ஒரு முறை பின் பக்கம் திருப்பி படித்து பாருங்கள்.

அதில் பல உதவி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.  அவை என்னவென்று பார்க்கலாம்:

1. மருத்துவ உதவி எண்ணிற்கு அழைத்தால் மருத்துவ ஊர்தி பத்து நிமிடத்திற்குள் உங்களுக்கு உதவ வரவேண்டும் என்பது சட்ட விதி.

 2. வண்டி  டயர் பழுதாகி நின்றால் அதற்கான எண்ணை அழைத்தால், எந்த கட்டணமும் இல்லாமல் வந்து  பஞ்சர் போட்டு கொடுக்க வேண்டும் என்பதும் சட்ட விதி.

3.  வண்டி பழுதாகி நின்றால் அதையும் சரி செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சட்ட விதி. இது அவர்களது கடமையாகும்.  நீங்கள் உதிரி பாகங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

4. எரிபொருள் இல்லாமல் வண்டி நின்று விட்டால், அதற்கான எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் சொன்னால் உங்களுக்கு ஐந்து அல்லது பத்து லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்து தருவார்கள். அதற்குண்டான பணத்தை மட்டும் கொடுக்க வேண்டும்.

5.  நாம் கட்டும் சுங்கத்திற்கு தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்பதும் அவர்களது கடமை.

6.  விபத்திற்கு உட்பட்ட வண்டிகளை எந்த கட்டணமும் இன்றி பாரம் தூக்கி மூலம் அப்புறப்படுத்தி தரவேண்டும் என்பதும் விதி.

நீங்கள் கட்டணம் கட்டிய சீட்டை தவறவிட்டால் அல்லது ஃபாஸ்ட்டாக் போன்ற மின்னனு முறையை பயன்படுத்துவதாக இருப்பின், 1033 என்ற எண்ணை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.  இந்த எண் 24 x 7 இயங்கும்.

இந்த எண்ணில் சாலையில் ஏற்படும் தடைகள் (மரம் விழுதல், பாறை விழுதல், சாலை மறியல் ஆர்ப்பாட்டம், பழுதடைந்த சாலை) குறித்து புகாரும் அளிக்கலாம்.

இந்த எண் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கான தொண்டு வழங்கும் எண்.

மேலும், சுங்கம் கட்டிய சாலையை பயன்படுத்தும் போது விபத்து என்றால், எந்த முன் பணமும் இன்றி மருத்துவ உதவி பெறவும் இந்த எண் மூலம் உதவி நாடலாம்.

கட்டுரை ஆசிரியர்:  சூசை பிரகாஷ் அ
தொ பே: 9788971111
மின்னஞ்சல்: info@hosuronline.com

Share this Post:

தொடர்பான பதிவுகள்: