இலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு

இலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு

பாகம் 1 / பாடம் 9


இலேகியம் செய்யும் முறை?


தமிழ் மருந்திற்காக இலேகியம், கியாழம், சூரணம், மணப்பாகு ஆகியவற்றை எந்த பக்குவத்தில் எவ்வாறு செய்வது என்பன குறித்து இங்கே தெளிவு பெறலாம்.


கியாழம் செய்யும் முறை:


வழக்கமாக கியாழம் போட வேண்டிய சரக்குகளை பஞ்சு போல் இடித்து ஓர் பாண்டத்தி லிட்டு சரக்குகளுக்குத் தக்கபடி நீர் சேர்த்து எட்டிலொன்றாய்க் காய்ச்சி வடிப்பதே கியாழ முறையாம்.

எளிதில் சத்து இறங்கக் கூடிய சரக்குகளாயின் கொஞ்சமாக நீர் சேர்த்து எரிப்பதும், கடினமான சரக்குகளாயின் கூடுதலான நீர் சேர்த்து சில மணி நேரம் ஊறவைத்து காய்ச்சுவதும், வெந்நீரில் சரக்கின் சுரணத்தைப் போட்டு சில மணி நேரம் சென்ற பின்பு ஊறல் கியாழமாக எடுத்துக் கொள்வதும்,

காய்ச்சப்பட்ட கியாழத்தில் தேவையான அளவு எடுத்துக் கொண்டு அதில் நீரைவிட்டு அடுப்பிலேயே வைத்துருந்து அடை கியாழமாகவும் பல முறைகள் செய்வதுண்டு.

எத்தகைய கியாழம் செய்யினும் மருந்தின் ஆவி போகாதபடி மூடி எரிப்பதுடன் காய்ச்சும் முறைகட்கெல்லாம் மண் பாண்டத்தையே பயன்படுஇத்த வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைக்கவும்.

கியாழத்துடன் சர்க்கரை அல்லது தேன் கூட்ட வேண்டுமாயின் வாததேகிக்கு நாலில் ஒரு பாகமும், பித்த தேகிக்கு எட்டிலொருபாகமும், கபதேகிக்கு பதினாறில் ஒரு பாகமும் சேர்ந்து வழங்கலாம்.


சூரணம் செய்யும் முறை


சூரணம் செய்ய வேண்டிய சரக்குகளை ஒவ்வொன்றையும் தனித் தனியே தூய்மை செய்து, இடித்து எடைபோல நிறுத்தெடுத்து பிறகு ஒன்று சேர்த்து ஒருமிக்கக் கலந்து வஸ்திர காயம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லா சரக்குகளையும் ஒன்றாக சேர்த்து இடித்தல் கூடாது.

பொதுவாக எல்லா சூரணங்களையும் பாலில் பிட்டவியலாக வேகவைத்து எடுத்தல் நன்று.

சூரணத்துடன் சர்க்கரை சேர்ப்பதாயின் சமன் எடை அல்லது இரண்டெடை சேர்க்கலாம்.

ஆனால் வேண்டிய போது அவ்வபோது சர்க்கரை சேர்த்தருந்தல் சிறந்தது. சூரண முறைகளில், மிளகு, திப்பிலி, சீரகம் போன்ற சரக்குகளை பொன்வறுவலாக வருத்தும், பெருங்காயம், வெண்காரம், போன்ற சரக்குகளைப் பொரித்தும், இஞ்சி முதலிய சரக்குகளை நெய்யில் வருத்தும், மயிலிறகு, கம்பளி, பட்டு முதலியவைகளை கருக்கியும் சேர்க்கவேண்டும்.


இலேகியம் செய்யும் முறை


சூரணத்தின் எடைக்கு இரண்டு பங்கு சர்க்கரையும், சர்க்கரையின் எடையில் அரைபாகம் நெய்யும், அதில் அரைபாகம் தேனும் சேர்த்து லேகியம் செய்வது முறை.

சர்க்கரையுடன் நான்கு பங்கு நீர்சேர்த்து காய்ச்ச வேண்டும்.

சில முறைகளில் நீருக்குப்பதிலாக பால் அல்லது குடிநீர்கள் சேர்ப்பதுமுண்டு.

முதலில் சர்க்கரையுடன் நீர் அல்லது பாலை நான்கு மடங்கு சேர்த்து அடுப்பிலிட்டு சிறு தீயாக காய்ச்ச பாகுபதம் வரும்.

அதாவது ஓர் துளி நீரில் விட அத்துளி ஜலத்தில் கரையாமல் அப்படியே நிற்க வேண்டும்.

அல்லது கை விரல்களில் தொட்டு எடுக்க நூல்போல் எழும்.

இதுவே சரியான இலேகியம் செய்யும் முறை பாகுபதமென அறிந்து கீழிறக்கி அதில் சரக்குகளின் சூரணத்தைத் தூவி நெய் சேர்த்துக் கிண்டி ஆறினபின்பு தேன் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இலேகிய முறைகளில் பருப்பு வகைகளைச் சேர்ப்பதாயின் அவைகளை நீர்விட்டு அரைத்து பால் பிழிந்து சர்க்கரையுடன் சேர்த்து காய்ச்சுவதும், கஸ்தூரி, குங்குமப்பூ முதலிய வாசனைத் திரவியங்களைச் சேர்ப்பதாயின் லேகியம் சூடாறிவருஞ் சமயத்தில் சேர்ப்பதும் முறைமையாம்.


மாத்திரை செய்யும் முறை


மாத்திரை செய்யும் போது அதில் சேரும் ஒவ்வொரு சரக்கையும் தனித்தனியே பொடித்து பிறகு முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாய் சேர்த்து கலக்க நன்கு அரைத்து மெழுகு பதத்தில் திரட்டி எடுத்து அளவின்படி மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்த வேண்டும்.

சரக்கானது கல்வத்திலும் குழவியிலும் ஒட்டாமல் திரண்டுவரும்.

இதுவே சரியான மெழுகு பதம் அல்லது மாத்திரை திரட்டும் பதமென அறிக.

ஏதேனும் ஓர் முறையில் இரசம் சேர்வதாக இருப்பின் முதலில் அதைக் கல்வத்திலிட்டு அத்துடன் அதை மடிக்கக்கூடிய கந்தி, முதலிய சரக்குகளை சேர்த்து அரைத்து மடித்துக்கொண்டு பிறகு மற்ற சரக்குகளைச் சேர்க்கவேண்டும்.

மற்றும் கடினமான சரக்குகளை முதலில் சேர்க்கவேண்டும். வாளம் சேர்ப்பதாயின் கடைசியில் சேர்த்து அறைக்கவும். மற்றும் கஸ்தூரி, அம்பர், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைச் சரக்குகளையும் மாத்திரை பதம் வருவதற்குச் ச்ற்று முன்பாக சேர்த்தல் முறை.


மணப்பாகு செய்யும் முறை அல்லது சர்பத் செய்யும் முறை


மணப்பாகு என்பதை சர்பத் எனவுங் கூறுவர்.

இது வளக்கமான பழச்சாறுகள், மூலிகைப் பொருட்களின் சாறு அல்லது குடிநீர் முதலியவற்றுடன் சரி அளவு சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஒருவித நல்லமணத்துடன், தேன் போன்ற இளகிய பாகு பதத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

மிக புளிப்பு, அல்லது கைப்பு பொருள்கள் சேர்வதாயின் சர்க்கரையை இரண்டு பங்காகச் சேர்த்து செய்யலாம்.


கிருதம் செய்யும் முறை:


சரக்கின் எடைக்கு இரண்டு பங்கு பசு நெய் சேர்த்து காய்ச்சி நெய்யிலுள்ள ஈரப்பசைகள் நீங்கி, நுரைகள் அடங்கி, நல்ல மணம் வீசும் பதத்தில் வேறு பாண்டத்தில் வடித்துக் கொள்ள வேண்டும்.


எண்ணை செய்யும் முறை


மருந்திற்கான எண்ணெய் என்பது சில சரக்குகளின் சூரணம், கற்கம், குடிநீர், மூலிகைச்சாறு முதலியவற்றுடன் பாகத்திற்கு தக்கப்படி நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு நெய் சேர்த்து சிறு தீயில் காய்ச்சி, வண்டல் மெழுகு பதம் வருதல்,

அல்லது எண்ணெயில் ஈரப்பசையின்றி சிடுசிடுப்பு இல்லாமல் இருக்கும் பதத்தில் வடித்துக்கொள்வதாம்.

மூலிகைச்சாறுகள், மென்மையான சரக்குகளின் குடிநீர் இவைகளுடன் சமன் அளவு எண்ணெயையும், கடினமான சரக்குகளின் குடிநீர்கள், பால் முதலியவைகளுடன் அரைபாக்ம் எண்ணெயையும்,

சில சமயம் சில தனிச்சரக்குகளின் தூளுடன் நான்கு அல்லது எட்டு பங்கு எண்ணெயையும் சேர்த்து காய்ச்சுவது வழக்கம்.

இவ்வாறு எண்ணை காய்ச்சும் போது வண்டலானது அற்ப நீருடன் சேறு போல் இருப்பின் அதை மிருது பதமென்றும், வண்டல் மெழுகுபோல் திரண்டு,

ஆனால் கையில் ஒட்டினால் அதை சிக்கு பதமென்றும், வண்டலானது மணலைப்போல் இருப்பின் கரகரப்பு பதமென்றும், இவை முறையே வாத பித்த கப ரோகிகட்கு சிறந்ததென்றும் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அம்பர், கசுதூரி, குங்குமப் பூ முதலிய வாசனைப் பொருட்கள் எண்ணையில் சேர்க்க வேண்டுமாயின், சூடாறி வடிகடத்தில் வடிக்கும் போது சேர்க்க வேண்டும்.

ஒரு முறை காய்ச்சி எடுக்கப்பட்ட எண்ணையுடம் மீண்டும் சரக்குகளை மட்டும் சேர்த்து காய்ச்சுவது மடக்குத் தைலமெனப்படும்.

இவை மிகவும் வீரியமுள்ளதாகும். சில சிறந்த எண்ணைகளை சில குறிப்பிட்ட விறகுகளைக் கொண்டு எரிப்பதுடன் காய்ச்சப்பட்ட எண்ணையை சில நாட்கள் நெற்குவியலில் வைத்தெடுத்து வழங்கப்படும்.

மற்றும் வெய்யிலில் வைத்தல், உருக்குதல், கொளுத்தல், புடமிடுதல் முதலியவற்றாலும் சில எண்ணை மருந்துகள் செய்யப் படுவதுண்டு.

ஆகவே எண்ணையானது பிறப்பினால் சூரியபுட எண்ணை, உருக்கு எண்ணை, சுடர் எண்ணை, கொதி எண்ணை, குழி எண்ணை, மண் எண்ணை, நீர் எண்ணை, மர எண்ணை, பொறி எண்ணை, தீநீர் எண்ணை, சிலை எண்ணை, ஆவி எண்ணை என 12 வகைப்படும்.

ஆனால் இத்தகைய எண்ணைகள் யாவையும் பயனை வைத்து ஐந்து வகையாகப் பிரித்துள்ளனர்.


தலைக்கு இடுவதை முடி எண்ணை என்றும்,

உள்ளுக்கு அருந்துவதை குடி எண்ணை என்றும்,

மேலுக்கு உடலில் தேய்த்துப் பிடிப்பதை பிடி எண்ணை என்றும்,

மனித உடலின் ஒன்பது துவாரங்களில் செலுத்துவதை துளை எண்ணை என்றும்,

புண்களுக்குப் பயன்படுத்துவதை சிலை எண்ணை என்றும் கூறப்படும்.

இதன்றி சில பொருட்களைப் பொடித்து எண்ணெயுடன் கலந்து வைத்துக் கொள்வதையும் மருந்தெண்ணை என வழக்கில் கூறப்படுகின்றது.


பற்ப செந்தூரம் செய்யும் முறை


பற்ப செந்தூரங்கள் நல்லபடி முடிய வேண்டுமானால், நன்கு அரைத்தல், வில்லைகளை ஈறமின்றியுலர்த்தல் வேண்டும்.

பொருத்தமான அகலி லடக்கல், கவசம் செய்தல் அல்லது மண்சீலை செய்தல் முதலியவைகளை வலுவாக செய்தல் வேண்டும்.

மருந்துக்கு தக்கப்படி சரியான அளவு விறட்டிகளைக்கொண்டு புலமிடல், எரித்தல், வறுத்தல் முதலிய காரியங்களில் மிக்க கவனத்தைச் செலுத்தி செய்தல் வேண்டும்.

அயம், காந்தம், மண்டூரம், அப்பிரகம் முதலியவைகளை பற்ப செந்தூரங்கள் செய்யும்போது நல்ல அரைப்பு கொடுப்பதுடன் கூடுதலான விறட்டிகளைக் கொண்டு புடமிடவேண்டும்.

இவைகள் நல்ல பக்குவமடைய குறைந்து 10-புடங்களாவது போட வேண்டும்.

முடிவு பெற்ற மருந்தில் சிறிதெடுத்து நீரில் போட்டுப் பார்க்க அது நீரில் அழுந்தாமல் மிதக்கவாவது கரையவாவது வேண்டும்.

அத்தகைய மருந்துதான் நல்ல குணத்தை தரும்.

மேலும் இத்தகைய மருந்துகள் எத்தனைக் கெத்தனை புடம் போடப்படுகின்றதோ அத்தனைக் கத்தனை நல்ல பலனைத் தரும்.

தங்கம், வெள்ளி, தாம்பரம், முதலியவைகளை பற்ப செந்தூரம் செய்யும் போது நல்ல அரைப்பு கொடுப்பதுடன் மருந்தில் பளபளப்பும், கடினத்துவமும் நீங்கி நல்ல, நிறமாகவும்,மிருதுவாகவும் ஆகும் வரையில் பல புடமிடவேண்டும்.

இன்றேல் மருந்தின் குணம் கெடும்.

நாகம், வங்கம் முதலியவைகளை பற்ப செந்தூரங்கள் செய்த பின் அதில் சிறிதெடுத்து ஓர் கரண்டியிட்டு சிறிது எண்ணெய் சேர்த்து எரிக்க வேண்டும்

எண்ணெய் பற்றி எரிந்தபின் கரண்டியில் பார்க்க உலோகச்சத்து இருப்பின் மணிமணியாக உருகியிருக்கும்.

அப்படியிருந்தால் இன்னும் மடியவில்லை யென்றுணர்ந்து மீண்டும் சில புடமிட்டெடுக்க வேண்டும்.

சரிவர முடியாத லோகச் சத்துள்ள மருந்துகளை உள்ளுக்கு கொடுக்க பக்க விளைவுகள் விளைவிக்கும்,

ஆகையால் சத்தின்றி நன்கு மடியும் வருத்தோ புடமிட்டோ பதமாக்க வேண்டும்.

சிலாசத்து, கல்நார், மான்கொம்பு, ஆமையோடு முதலியவைகளை பற்பங்களாக செய்யும்போது முதலிலே சற்று பெரிய புடமாக போடுதல் நல்லது.

இல்லாவிடில் கருத்து விட்டால் நல்ல வெண்மை நிறம் வருவது கடினம். அப்படி கருத்தால் மீண்டும் அரைத்து புடமிட நிறம் மாறி வரும்.

இரச, கெந்தி, பாஷாண துனை ரசங்களைப் புட மிடுவதாயிருந்தாலும், எரிப்பதாயிருந்தாலும் கவசம் செய்வதையும், சீலைமண் செய்வதையும் மிக வலுவாகச் செய்வதுடன், சிறுபுடம் அல்லது சிறு தீயாக முதலில் கொடுத்தல் நன்று.

இன்றேல் மருந்துகள் புகைந்து போய்விடும்.

கார சார லவண வகைகளை பற்ப சுண்ண செந்தூரங்கள் செய்வதற்கு உருகாமலும், ஊட்டங் குறையாமலும் இருக்கும் பொருட்டு சிறு புடங்களாகப் போட்டு எடுக்க வேண்டும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: