தண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்

தண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்

மும்பை தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள், வெற்றிகரமாக, மூலக்கூறு எடை கூடிய மாழைகளான (Heavy Metals) ஆர்சனிக், குரோமியம், காட்மியம் மற்றும் பாதரசம் இவற்றை கழிவு நீரிலிருந்து மிகத் திறம்பட பிரித்தெடுக்கும் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் சுமார் 90 விழுக்காடு வரையிலான இந்த மூலக்கூறு எடை கூடிய மாழைகளை பிரித்தெடுக்க இயலும்.

இதற்கு அவர்கள் கரிமத்தியிலான ஒரு நானோ கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.  இந்த நானோ கட்டமைப்பானது புவியீர்ப்பு விசை கொண்டு இயங்குவதால், எவ்வித மின் பயன்பாடும் தேவையில்லை.

இந்த நானோ கட்டமைப்பானது மறுசுழற்சி செய்யத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்முறை பயன்பாட்டில் தொண்ணூறு விழுக்காடு அளவிற்கு தேவையற்ற மாழைகளை அகற்றும் இதன் தன்மை அடுத்த சுழற்சியின் போது 80 விழுக்காடு வரை க்ழிவை அகற்றுகிறது. அதன்பின் பலமுறை அதை மறுசுழற்சி செய்தாலும் அதன் கழிவை அகற்றும் திறன் எவ்விதத்திலும் குறைவதில்லை.

சாமந்திப்பூ வடிவிலான இந்த நானோ கட்டமைப்பு வடிகட்டியை மும்பை தொழில்நுட்பக் கல்லூரி வேதியல் பிரிவின் முனைவர் சந்திரமௌலி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது.

இதற்காக மரக்கிளை உருவ நானோ சிலிக்கா வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதை ஒரே அச்சு கொண்டு வார்த்து எடுக்கின்றனர்.

சாமந்திப்பூ வடிவமைப்பு கொண்டிருப்பதால், இது சிறிய இடத்தில் பெரிதளவு மேற்பரப்பை கொண்டுள்ளது.  இந்த வடிகட்டி 2 நானோ மீட்டருக்கும் குறைவான துவாரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வடிகட்டியானது வழக்கமான நீர் வடிகட்டி போன்று அல்லாது, மூலக்கூறு எடை கூடிய மாழைகள் இவற்றுடன் வினைபுரிந்து அந்த சிறு துவாரங்களுக்கு இடையே ஒட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் இவை நீருடன் கலந்து அல்லது கரைந்து வெளியேற வாய்ப்பு இல்லாது போகிறது.

இந்த வடிகட்டியை, ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை (pH 5-10) வடிகட்டி ஆய்வு மேற்கொண்டு இது வெற்றிகரமாக செயல்படுகிறது என உறுதி செய்துள்ளனர்.

நன்றி மும்பை தொழில்நுட்ப கல்லூரி - IIT Mumbai

Share this Post:

தொடர்பான பதிவுகள்: