இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்மை

இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்மை

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 2017 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019 இல் வேலைவாய்ப்பு இன்மை என்பது இரண்டு மடங்கு பெருகியுள்ளது என தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு என்பது இரு வகையாக பிரித்து பார்க்கப்படுகிறது. ஒன்று,
ஒரு நபர் தான் செய்த வேலைக்கான ஊதியத்துடன் கூடிய வேலை மற்றொன்று வீட்டில் இருக்கும் நபர் எந்தவித ஊதியமும் இன்றி தன் வீட்டின் வருவாய்க்காக உடன் சேர்ந்து துனை வேலை செய்வது.

இந்த இருவகை வேலைவாய்ப்புகளும் இந்தியாவில் ஆண்டுகள் கடந்து செல்ல, இல்லாத ஒரு நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளது

ஊர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு இன்மை என்பது 6.8 விழுக்காடு அளவிலும் அதேவேளையில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு இன்மை 9 விழுக்காடு அளவு நிலவுகிறது.

இந்த கணக்கெடுப்பில் வேலை செய்ய தகுதியுள்ள வயதினர் அனைவரும் வயது வேறுபாடு இன்றி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதால், வேலைவாய்ப்பு இன்மை குறித்த தகவல்களை துல்லியமாக கணக்கிடுவது சற்று சிக்கலான ஒன்று.

ஏனெனில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் தனக்கு எந்த வேலை கிடைத்தாலும், எத்தகைய வேலை கிடைத்தாலும் அதை ஒரு வேலையாக கருதி எடுத்துக்கொள்வார்.

இந்த கணக்கெடுப்பில் பெரும்பாலான 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தன் தகுதிக்கு தகுதியற்ற வேலைகளை தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வயது மற்றும் கல்வித்தகுதியை அடிப்படையாக வைத்து கணக்கிட்டால் நன்கு கல்வி பயின்ற 20 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்ட இளைய தலைமுறையினரிடம் வேலைவாய்ப்பு இன்மை என்பது சுமார் 37 விழுக்காடு அளவிற்கு உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது சுமார் 2.5 மடங்கு பெருகியுள்ளது.

அதேவேளையில் 25 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் உட்பட்டவர்களிடம் வேலைவாய்ப்பு இன்மை என்பது 11 விழுக்காடு அளவாக உள்ளது.

பெரிய நகர்புறங்களை கணக்கிட்டால் வேலைவாய்ப்பு இன்மை என்பது 44 விழுக்காட்டை தாண்டி உள்ளது.

இந்தச் சூழல் ஊர்ப்புறங்களில் இருந்து வேலை வாய்ப்பிற்காக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது என்பது பயனற்ற ஒன்று என்பதை விளக்குவதாக உள்ளது.

உயர் தொழில்நுட்ப கல்வி பயின்றோரிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வேலைவாய்ப்பு இன்மை என்பது அவர்களுக்கு சுமார் 63 விழுக்காடு அளவிற்கு உள்ளது.

முதுநிலை பட்டதாரிகளுக்கு 23 விழுக்காடு அளவு வேலைவாய்ப்பு இன்மை நிலவுகிறது.

பல்கலை பட்டம் பயின்ற 20 முதல் 29 வயது வரை உள்ள பட்டதாடிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், வேலைவாய்ப்பு இன்மை 42.8 விழுக்காடு அளவாக உள்ளது.

ஆகமொத்தம் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு இன்மை என்பது 7.5 விழுக்காடு நிலவுகிறது.

அனைத்து கல்வி மற்றும் வயது தரப்பினரை பொதுவில் எடுத்துக் காட்டுவதை விட 20 முதல் 29 வயதினர் அதிலும் உயர்கல்வி பயின்றவர்கள் வேலைவாய்ப்பு இன்றி இருப்பது பெரும் கவலைக்குரிய செய்தியாக கருதப்படவேண்டும்.

ஆளும் அரசானது அரசியல் தவிர்த்து, பொருளாதார வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதிலும் தன் கவனத்தை திசை திருப்ப வேண்டிய இக்கட்டான நேரமிது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: