மோடிக்கு அமித்ஷா ஒரு சுமையாக மாறி விட்டாரா?

மோடிக்கு அமித்ஷா ஒரு சுமையாக மாறி விட்டாரா?

எவ்வளவு கடினமான தேர்தல் களமாக இருப்பினும், அதை சற்றும் சளைக்காமல், தொய்வு ஏற்படாமல், போர் வீரணை போல எதிர்கொண்டு போரிடுவது, முன்னின்று செயல்பட்டு, வெற்றியை எடுத்து மோடியிடம் கொடுப்பது அமித்ஷா ஒரு கலையாக, தன் கடமையாக செய்துவந்தார்.

தேர்தல் களத்தில் வெற்றி வீரராக செயல்பட்டாலும் உள்துறை அமைச்சராக அமித்ஷா அவர்கள் மேற்கொண்டுவரும் அதிரடி நடவடிக்கைகள், மோடியைப் பொருத்தளவில், அவரது இந்திய நாட்டின் ஒப்பற்ற பெருந்தலைவர் - உலக நாட்டுத் தலைவர்கள் இடையே வணக்கத்திற்கு உரியவர் என்கிற ஒரு நிலையை அசைத்து சாய்த்து போடுவதாக அமைந்து வருகிறது.

தேர்தல் வெற்றிகளை கூர்ந்து கவனிப்போம்:

பாரதிய ஜனதா கட்சி பெற்றுவரும் வெற்றிகள் முழுமையானது அல்ல என கருதுகின்றனர். ஏனெனில் கர்நாடக மாநிலம் ஆகட்டும் அரியானா மாநிலம் ஆகட்டும் இரண்டிலும் இல்லாத ஒன்றை குறுக்கு வழியில் வடிவமைத்து தனதாக அமைத்துக் கொண்டதாகும்.

மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா தன் ஆட்சியை இழந்து உள்ளது.

இந்த இழப்புகளுக்கு எல்லாம் அமித்ஷா அவர்களின் அதிரடி போக்கும் விட்டுக் கொடுக்க இயலாத மனநிலையையும் அந்தக் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை அமித்ஷா, சிவசேனா குறித்து பேசிய பேச்சு


"நாங்கள் எலியில் இருந்து புலியை படைத்தோம். இப்பொழுது புலி எம்மை அச்சுறுத்த முயல்கிறது. எலிகளுக்கு நாங்கள் யாரென்று காட்ட வேண்டிய நேரமிது" .

இந்தப் பேச்சானது ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மக்களிடையே ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் மகாராஷ்டிர மாநிலத்தவர்கள் தம் பெருமை மிகு அடையாளமாக கருதும் மன்னர் சிவாஜி அவர்களை பார்த்து இசுலாமிய மன்னர் அவுரங்கசீப் "மலை எலி" என்ற வார்த்தையை குறிப்பிட்டு கிண்டலாக கூறியிருந்தார்.

அமித்ஷா பேச்சானது, அவுரங்கசீப் மனநிலையும் பாரதிய ஜனதாவின் மனநிலையும் ஒத்துப்போவதாக மகாராஷ்டிராவினர் எண்ணத் துவங்கினர்.

இதன் விளைவாக வெவ்வேறு அரசியல் நிலைபாட்டை கொண்ட காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவும் ஒன்று படுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒரே மொழி

கடந்த செப்டம்பர் திங்களில் அமித்ஷா அதிரடியாக ஒரே நாடு ஒரே மொழி, அது இந்தி என பேசிய பேச்சு  தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதன் வெளிப்பாடாக, அமெரிக்காவில் நடைபெற்ற "கெளடி மோடி" என்கிற நிகழ்வில், மோடி அவர்கள் தமிழில் சற்று நேரம் உரையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காஷ்மீர்

காஷ்மீரில் மேற்கொண்ட அரசியலமைப்பு மாற்ற நடவடிக்கையால் 10 காஷ்மீரிகளுக்கு ஒரு பாதுகாப்பு வீரர் என்ற அளவில் இந்திய அரசு, இந்த பொருளாதார சிக்கல் நிறைந்த நேரத்தல் தனது செலவினங்களை பெருகி வைத்திருக்கிறது.

அந்த மாநிலம் முற்றாக முடங்கிப் போகும் வகையில் அங்கு செயல்படுகின்ற அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், பொது தொண்டாளர்கள், தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு என அனைத்தும் முடக்கப்பட்டு இந்தியாவிற்கு மேற்கொண்டு பொருளாதார செலவினங்களை ஏற்படுத்தி வருகிறது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் முதன்மை அமைச்சர் இம்ரான் கான், அமித்ஷாவின் அதிரடி நடவடிக்கைகளை, பாகிஸ்தான் நாட்டிற்கும் தனக்கும் ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொண்டு வருகிறார்.

எடுத்துக்காட்டாக இந்தியாவுடன் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதிகாக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகளிலேயே, மோடி தலைமையிலான மோடியின் அரசு ஒரு மத அடிப்படை சித்தாந்தம் கொண்ட அரசு என்பது போன்ற ஒரு பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கானவர் அல்ல என்பது போன்றும், அவர் மத அடிப்படைவாதி என்கிற பொருளிலும் தனது பரப்புரைகளை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த பரப்புரைகளின் தாக்கத்தை தற்போது மோடி அவர்கள் உணரத் துவங்கி உள்ளார். தான் 5 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சிக்கான பெரும் தலைவராக அடையாளப்படுத்தி வந்த ஒரு நிலை தற்பொழுது தகர்க்கப்பட்டு, தான் ஒரு மத அடிப்படை சித்தாந்தவாதியாக உலகு பார்க்கிறது என்பதை புரிந்துகொள்ள துவங்கியுள்ளார்.

முத்தலாக்

முத்தலாக் ஒழிப்பு நடவடிக்கையால் இஸ்லாமிய பெண்களிடையே பெரும் மதிப்பைப் பெற்ற மோடி அதே பெண்கள் இன்று தெருவில் நின்று அவருக்கு எதிராக போராடும் ஒரு நிலையை அமித்ஷா அவர்களின் அதிரடி நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன.

ஜே பி நட்டா

கடந்த நாளில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக அமித்ஷா வெளியேறப்பட்டு புதிய தலைவராக ஜே பி நட்டா அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது, மோடி மாற்றத்தை நோக்கி நகர்கிறார் என்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மோடியுடன் தோன்றும் அமித்ஷாவின் புகைப்படம் நீக்கப்பட்டு மோடியுடன் ஜே பி நட்டா அவர்களின் புகைப்படம் மட்டுமே சுவரொட்டிகளிலும், தேர்தல் பரப்புரைகளிலும் பயன்படுமேயானால், மோடி, அமித் ஷாவின் செயல்பாடுகளை முற்றிலுமாக ஒதுக்கி நிறுத்தி வைக்க முயல்கிறார் என்பதையே எடுத்துரைப்பதாக இருக்கும்.

சற்று பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன தான் இந்த அரசியல் சித்து விளையாடில் நடந்தேறுகிறது என்று!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: