ஓசூருக்கு ஏன் இன்னும் விமான நிலையம் வரவில்லை?

ஓசூருக்கு ஏன் இன்னும் விமான நிலையம் வரவில்லை?

மோடி அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான உதான் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டாலும் இன்றளவும் ஓசூரில் இருந்து எந்த விமானமும் அந்த திட்டத்தின் கீழ் மேலெழும்பி சென்றதாக தகவல்கள் இல்லை.

சில ஊர்களில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் விமானங்கள் மேலெழும்பி இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இன்று கீழ் இறக்கப்பட்ட நிலையில் உள்ளது.

முதன்மை அமைச்சர் மோடி அவர்களின் திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் பெருநகரங்கள் ஒன்றுடனொன்று இணைக்கப்படுவது அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் விமான 688 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டன. உலகளாவிய அளவில் இந்த திட்டம் அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தது.

அறிவிப்பது மிக மிக எளிது.  அதை ஒரு காகிதத்தில் எழுதி பலருக்கு காட்டுவது அதனினும் எளிது.  சிக்கல்கள் எல்லாம் நடைமுறைப்படுத்தப் படும் பொழுது தான் எங்கிருந்தாவது கிளம்பி வரும்.  இது உதான் திட்டத்திற்கும் முழுமையாகப் பொருந்தும்.

உதான் திட்டத்தின் குறைபாடு திட்டத்தில் இல்லை என்றும், விமான நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிலவை மூடப்படுவதுமே இந்த திட்டம் முடங்கி கிடைப்பதற்கான அடிப்படை என வல்லுநர்கள் எடுத்துரைக்கின்றன.

உதான் திட்டத்தின் கீழ் ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர், ட்ருஜெட், டெக்கான் சார்டர்ஸ் மற்றும் ஏர் ஒடிசா ஆகியவற்றிற்கு 128 வழித்தடங்கள் முதன் முதலில் ஒதுக்கப்பட்டன.

அவற்றில் 54 வழித்தடங்களில் மட்டுமே இன்று செயல்பாட்டில் உள்ளன. பெரும்பாலான வழித்தடங்களை டெக்கான் சார்டர்ஸ் மற்றும் ஏர்  ஒடிசா ஆகியவை கைப்பற்றி இருந்தாலும் அவற்றால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

டெக்கான் சார்டர்ஸ் -சை பொருத்தவரை, அந்த நிறுவனம் உதான் திட்டத்தில் இயக்கும் விமானங்கள் மட்டுமே வருவாய் ஈட்டுவதாகவும், மற்றவை நொடிப்பை ஏற்படுத்துவதாகவும் இருப்பதால், அந்த நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

உதான் திட்டத்தில், பெரும்பாலான வழித்தடங்களில் விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை இயக்கி முயன்றாலும், பயணிகள் இல்லாத நிலையிலும் ஏற்கனவே உள்ள பொருளாதார நெருக்கடியாலும் அவைகளால் விமானங்களை இந்த திட்டத்தின் கீழ் முழுமையாக இயக்க இயலவில்லை.

தென்னகத்து நகரங்கள் ஒன்றுடன் ஒன்று ஓரளவுக்கேனும் விமானம் மூலம் இணைக்கப்பட்டு இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்கள் இன்னும் இத்தகைய வாய்ப்புகளைப் பெறவில்லை. அதன்பொருட்டு, வட கிழக்கு மாநிலங்களின் தலைநகர்கள் அனைத்தும் விமானம் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் படவேண்டும் என்ற நோக்கத்துடன் பல வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.  ஆனால் இன்றளவும் அந்த வழித்தடங்களில் விமானங்கள் எதுவும் பயணிக்கவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை சேலம், ஓசூர், புதுச்சேரி ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் இன்றும் இந்த நகரங்கள் விமான போக்குவரத்து வரைபடத்தில் தம்மை இடம்பெறச் செய்ய இயலாத நிலையிலேயே உள்ளன.

உதான் திட்டத்தின் தாய் திட்டம் மன்மோகன்சிங் வகுத்தது:

1994 ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான அரசில் பொருளாதார அமைச்சராக இருந்த மன்மோகன்சிங் அவர்கள், இந்திய நகரங்கள் விமானம் மூலம் ஒன்றுடனொன்று இணைக்கப்பட வேண்டும் என்ற ஒரு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்தார்.

அந்தத் திட்டத்தின்படி இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து தடங்களை பெற்றிருக்கும் விமான நிறுவனங்கள், குறைந்தது 10 விழுக்காடு அளவிற்காவது சிறு நகரங்களை இணைக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற சட்டம் வகுத்தார்.

2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு குழு இந்த சட்ட நடைமுறை விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பெருமளவு நொடிப்பில் ஆழ்த்தி வருவதாக கருத்துரைத்தது.

இதை ஏற்க மறுத்த மன்மோகன்சிங் அரசு, 2013 ஆம் ஆண்டு இந்திய சிறு நகரங்களை ஒன்றுடனொன்று விமானம் மூலம் இணைக்கும் வழிமுறையை ஆய்வுசெய்ய தனியார் நிறுவனமொன்றின் கருத்தை கேட்டது.

அந்த நிறுவனம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே மன்மோகன்சிங் ஆட்சி இழந்தார்.

அவரைத் தொடர்ந்து பதவியேற்ற மோடி அரசு 2016ஆம் ஆண்டு வாக்கில் அந்த தனியாரின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விதமாக உதான் திட்டம் என்ற ஒரு திட்டத்தை வரைவு செய்தது.

உதான் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விமான நிலையங்களை அமைத்துக் கொள்ளலாம். கட்டணங்கள் ரூபாய் 1420 முதல் 3,500 வரை இருக்கலாம்.

நடுவண் அரசு இதற்காக பலவகை வரிச் சலுகைகளை அறிவித்திருந்தது.  விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாதி அளவு இருக்கைகள் அரசு முடிவு செய்த கட்டணத்திலும், மீதமுள்ளவை சந்தை விலையில் விற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு சலுகை காட்டியது.

அரசு இத்தனை சலுகைகளை கொடுத்திருந்தாலும் நடைமுறையில் இருக்கைகள் பாதி அளவிற்கு மட்டுமே விற்க முடிந்தது.  இதனால் விமான நிறுவனங்களுக்கு பெருமளவு நொடிப்பு ஏற்பட்டது.

உதான் திட்டத்தில் மாற்றங்கள்:


தற்பொழுது நடைமுறையிலுள்ள உதான் திட்டத்தில் விமான வழித்தடங்கள் இருவேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெற்றிட முடியும்.  இதனால் கட்டணத்தில் ஒன்றுக்கொன்று போட்டி ஏற்படுவதாலும் இருக்கைகள் விற்கப்பட்டாத நிலை ஏற்படுவதாலும் நொடிப்பு ஏற்படுகிறது.  

இதை சரி செய்யும் விதமாக, இனி ஒரு தடம் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்படும்.  மற்றொரு நிறுவனம் அதே தடம் வேண்டும் என்று கேட்டால் முதலில் பெற்ற நிறுவனம் அனுமதி சான்று கொடுத்தால் புதிய நிறுவனம் அந்த வழித்தடத்தில் தனது விமானத்தை இயக்கி கொள்ளலாம்.

உதான் திட்டத்தின் கீழ் ஓசூர் போன்ற நகரங்களில் விமான போக்குவரத்து செயல்பாட்டில் வர வேண்டுமானால் முதலில் ஏற்கனவே இயக்கத்தில் உள்ள வழித்தடங்களில் விமான நிறுவனங்கள் தங்களது வருவாயை ஈட்டி, இது ஒரு வருவாய் ஈட்டும் தொழில் என்பதை உணர வேண்டும்.

அத்தகைய சூழல் வருவதற்கு இன்னும் பல திட்ட மற்றும் சட்ட மாற்றங்களும் நிலைமைக்கு ஏற்ப மாற்றி அமைத்து முயல வேண்டும்.  

இன்றைய சூழலில் ஓசூருக்கு விமானப் போக்குவரத்து நடைமுறைக்கு வருவது என்பது அடுத்த 5 ஆண்டுகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும் என்பதே உண்மை நிலை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: