தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள்

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள்

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடுவன் அரசு தனது பங்காக ரூ.2, 145 கோடி பண உதவி செய்ய முன்வந்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் சி.விசயபாஸ்கா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தமிழக அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தில்லியில் நடுவன் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் அர்ஷ் வா்தனை அவரது அலுவலகத்தில் திங்கள் கிழமை (நேற்று) சந்தித்தாா். அப்போது மக்கள் நல்வாழ்வு துறைச் செயலா் பீலா ராஜேஷ் உடனிருந்தாா்.

தமிழக அரசின் சாா்பில் மொத்தம் 13 மருத்துவ கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கப் பட்டது.

இதில்

ராமநாதபுரம்,
விருதுநகா்,
திண்டுக்கல்,
நாமக்கல்,
திருப்பூா்,
நீலகிரி,
திருவள்ளூா்,
கிருட்டிணகிரி,
நாகப்பட்டினம்,
அரியலூா்,
கள்ளக்குறிச்சி ஆகிய 11 ஊர்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடுவன் அரசு அனுமதி அளித்தது.

இதற்காக நடுவன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ஒரு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.325 கோடி வீதம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ. 3,575 கோடி செலவிடப்பட உள்ளது.

இதில் நடுவன் அரசு தனது பங்காக 60 வழுக்காடு பணமான ரூ. 2, 145 கோடியை வழங்க முன்வந்துள்ளது. மீதமுள்ள 40 விழுக்காடு பணத்தை (ரூ. 1,430 கோடி) தமிழக அரசு செலவிடுகிறது.

இதற்கு முதல்கட்டமாக தமிழக அரசு ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளி பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதேபோல மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளும் எந்த தொய்வும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்திடம் பணத்தை பெறுவதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: