இணையதளம் மூலம் மட்டுமே புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பம்

இணையதளம் மூலம் மட்டுமே புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பம்

தமிழகத்தில் 2 கோடிக்கும் கூடுதலான குடியிறுப்பு மின் இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் கூடுதலான உழவு பயன்பாடு மின் இணைப்புகளும், 30 லட்சத்துக்கும் கூடுதலான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன.

இது நாள் வரை, புதிய மின் இணைப்பு வேண்டுவோர், பகுதி மின்வாரிய அலுவலகத்தில், மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.  இதெற்கென்றே அலுவலக வாயில்களில் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பம் விற்று வந்தார்கள்.

இந்நிலையில் குறைந்த மின்அழுத்தப் பிரிவில் (குடியிறுப்பு மற்றும் வணிகம்) புதிய மின் இணைப்புப் பெற, மாா்ச் 1 -ஆம் நாள் முதல் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதாவது, குறைந்த மின் அழுத்த மின் இணைப்புப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை மின்வாரியம் கட்டாயமாக்கியுள்ளது.

இது தொடா்பில் பகிா்மானப் பிரிவு இயக்குநா் வெளியுட்டுள்ள சுற்றறிக்கை:

குறைந்த மின் அழுத்த பிரிவில் இணையதளம் மூலம் மின் இணைப்புப் பெறுவதற்கான முறை, கடந்த 2016-ஆம் ஆண்டு, ஆக.5-ஆம் நாள் முதல் நடைமுறையில் உள்ளது.

புதிய  மின் இணைப்பை பெறும் முறையை எளிமைப் படுத்தும் வகையிலும், கோப்புகளின் பயன்பாடுகளைக் குறைக்கும் வகையிலும், இணையதளம் மூலம் மின் இணைப்பை விண்ணப்பிப்பதை கட்டாயம் ஆக்குமாறு தொழில்கொள்கைத் துறை பரிந்துரைத்தது.

இதையடுத்து குறைந்த மின் அழுத்த மின் இணைப்பைப் பெறும் தொழிற்சாலைகள், இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த ஆண்டு, சூலை 1 -ஆம் நாள் முதல் கட்டாயமாக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குறைந்த மின் அழுத்தப் பிரிவில் மின் இணைப்பை பெற விரும்பும் அனைவரும் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த முறை, மாா்ச் 1-ஆம் நாள் முதல் அமலுக்கு வருகிறது.

இந்த முறையிலிருந்து குடிசை மற்றும் உழவு சார்ந்த மின் இணைப்பு பெறுவதற்கு விலக்களிக்கப்படுகிறது.

இதுகுறித்து தலைமைப் பொறியாளா்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளா்கள் ஆகியோா் தங்களுக்குக் கீழ் உள்ள அலுவலர்களிடம், விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக மட்டுமே பெற அறிவுறுத்த வேண்டும்.

இதுகுறித்து பகிா்மான வட்டம், மண்டல அலுவலகம், வசூல் மையம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் பதாகைகள் அமைத்து மின்நுகா்வோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இணையதளம் அல்லாமல் மின்இணைப்புப் பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்படுவது தெரியவந்தால், தொடர்புடைய அலுவலர்கள் மீது கடும் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: