தங்கம் வாங்க இது ஏதுவான நேரமா?

தங்கம் வாங்க இது ஏதுவான நேரமா?

இந்திய நடுவன் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தின் இன்றைய சூழ்நிலையில், பங்குச்சந்தைகளுக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்யலாமா என முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நிலம் வாங்குவதில் சட்டச் சிக்கல்களும் வரி தொடர்பான சட்டங்களும் பல அமல் படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் முதலீட்டிற்கான பயன் தரும் முதலீடாக கருதப்படுவது தங்கத்தின் மீதான முதலீடு.

தங்கமானது 2019 ஆம் ஆண்டின் விலைப்பட்டியலை ஒப்பிட்டால் சுமார் 20 விழுக்காடு அளவிற்கு தற்பொழுது விலை உயர்ந்து நிற்கிறது.

நாடுகள் ஒவ்வொன்றுக்கு ஒன்று ஏட்டிக்குப் போட்டியாக பொருளாதார தடைகளை விதித்து வரும் இந்த நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பானது என பலரும் எண்ணுகின்றனர்.

உலகளாவிய அளவில் கொரோனோ நச்சுயிரி தாக்குதல் என்ற பெயரில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  இது ஒரு செயற்கையான விலையேற்றம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதுவரை சீனாவில் கொரோனோ நச்சுயிரி தாக்குதலுக்கு 2,700 பேர் உயிரை மாய்த்து உள்ளனர்.

இதுபோன்ற நச்சுயிரி தாக்குதல்கள் தொடர்ந்து, பல வகையில் தன் தன்மைகளை மாற்றி மனித இனத்தை தாக்கும் என உலக மக்கள் நல்வாழ்வு துறையினர் கருதுகின்றனர்.

அடுத்த 6 திங்களுக்கு தங்கத்தின் விலை சற்று உயர்ந்து இருக்கும் என்பது உலக பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

அப்படியானால் அடுத்த 6 திங்களுக்கு தங்கத்தின் மீது முதலீடு பெருமளவில் செலுத்தாமல் அந்த விலை ஏற்ற சூழலை கடந்த நிலையில் முதலீடு செய்வது அறிவாற்றல் மிக்க செயலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

"மாற்றம் என்பது மட்டுமே என்றும் நிரந்தரம்" என்ற கருத்திற்கு ஏற்ப, உலக பொருளாதார மந்தநிலை என்பது கண்டிப்பாக ஒரு மாற்ற சூழலில் மாறி நிற்கும்.

உலகம் முழுவதும் பெரும் நிதி நிறுவனங்களும், அரசுகளும் பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து தங்கள் அளவிற்கு முயன்று வருகின்றனர்.

அப்படியானால் இந்தியாவின் பொருளாதார மந்த நிலையும் மாற்றத்தை கண்டிப்பாக கண்டு வளர்ச்சிப்பாதைக்கு தன் திசையை மாற்றும்.

இந்தியாவை தவிர பிற வளர்ந்துவரும் நாடுகள் வேகமாக தங்களது பொருளாதார திட்டங்களை மாற்றி அமைத்து வருகின்றன.  எடுத்துக்காட்டாக வியட்னாம் மற்றும் வங்காளத்தின் பொருளாதார வளர்ச்சியானது இந்திய பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் பல மடங்காக விரைந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவுடன் பயணித்த பிரேசில், பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை முந்திச் சென்று கொண்டிருக்கிறது.

பொருளாதார மந்த நிலை என்று சொன்னாலே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்புவதும், பொருளாதார நிலை சீரடைந்து விட்டால் தங்கத்திலிருந்து தமது முதலீடுகளை மீட்டெடுப்பது வரலாற்று சான்று.

அப்படியானால் இன்றளவைல் விரைந்து உயரும் தங்கத்தின் விலை, பொருளாதார மந்த நிலை மாறுமேயானால் விலை இறக்கத்தை காணும்.  

ஆண்டிற்கு 12 விழுக்காடு அளவு மட்டுமே தங்கத்தின் விலை உயர்வு என்பது உண்மைத் தன்மை கொண்டதாக இருக்கும்.  அதை தாண்டிய விலை ஏற்றங்கள் எல்லாம் ஒரு மாயையே.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: