கற்றல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

கற்றல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

பள்ளி வயது முதலே கற்றல் குறைபாடு கொண்டு அல்லல்படுபவர்கள் பலர்.  பெரும்பாலும் கற்றல் குறைபாடு மூளை வளர்ச்சி குறைபாடு என கற்பிப்போரும் குழந்தையை பெற்றவரும் கருதுகின்றனர்.

இது முற்றிலும் தவறான ஒரு கருத்து என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கின்றனர்.

ஒரு மாணவரால் ஒரு கருத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் இயலவில்லை எனில் ஆசிரியப் பெருமக்கள் இதை கற்றல் குறைபாடு எனக் கருதுகின்றனர்.

மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பள்ளி பருவ மானவர்கள் பலர் கல்லூரிகளில் அல்லது தமது பணியிடங்களில் தாமே சிந்தித்து செயல்பட வேண்டிய சூழ்நிலைகளில் தோற்றுப் போவதையும், மனப்பாடம் செய்து ஒப்பிக்க இயலாத மாணவர்கள் இத்தகைய சூழலில் வெற்றி பெறுவதையும் காண்கிறோம்.

கற்றல் குறைபாடு (இந்தியாவைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்து ஒப்புவித்தல்) மற்றும் சிந்தித்து செயல்பட இயலாத நிலை (உண்மையான கற்றல் குறைபாடு) இவை மூளை தொடர்பானது என்றாலும் மூளை வளர்ச்சி தொடர்பானது அல்ல.

மாறாக மூளையின் பகுதிகளை இணைக்கும் இணைப்பு கட்டுமானத்தில் ஏற்படும் குறைட்டாலேயே இத்தகைய கற்றல் குறைபாடு ஏற்படுகிறது.

உலகளாவிய அளவில் 30 விழுக்காடு அளவிற்கான குழந்தைகளும் 14 விழுக்காடு அளவிற்கான இளம்பருவத்தினர் இத்தகைய குறைபாட்டால் அல்லல்படுகின்றனர்.

இவர்களுக்கு பலவகை ஊக்குவிப்பு கற்றல் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.  

சிறுவயதிலேயே சில குழந்தைகளுக்கு வாசிப்புக் குறைபாடு, கவனயீர்ப்பு குறைபாடு, இயற்கை மீறிய சுறுசுறுப்பு குறைபாடு ஆகியவை கண்டறியப்பட்டு அது மூளை தொடர்பான குறைபாடு என அதற்கான மருத்துவம் கொடுக்கப்படுகிறது.  இத்தகைய குறைபாடுகள் கற்றல் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.

எண்ணற்ற மூளையின் பகுதிகள் தனித்தனியே இயங்கினாலும், அவை ஒருங்கிணைந்து செயல்படுவதே அறிவார்ந்த கற்றலுக்கு வழிவகை செய்கிறது.

எடுத்துக்காட்டாக முன்புற புறணி, வாலி உட்கரு, பல்லேடியம், மூளை அடுக்கு, சிறுமூளை, முன்நுதல் புறணி, மண்டை உச்சிப் பக்க மடல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு கற்றலின் போது செயல்படுகின்றன.

கற்றல் என்று வந்துவிட்டால் அது ஒரு குறிப்பிட்ட மூளை பகுதியைச் சார்ந்தது என யாராலும் குறிப்பிட இயலாது.

மனித மூளைகளின் செயல் திறனை ஆய்வு மேற்கொண்டால் ஒவ்வொருவரின் மூளை பகுதிகளின் இணைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் ஒவ்வொரு வகையில் செயல்படுவதாக கண்டறியப்படுகிறது.

மூளையின் ஒரு பகுதியைச் சார்ந்தது அல்ல கற்பது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, 479 குழந்தைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் 337 குழந்தைகள் கற்றல் குறைபாடு கொண்டுள்ளதாக கருதப்படுபவர்கள்.  மீதமுள்ள 142 குழந்தைகள் ஆய்வு மாதிரிக்காக எடுத்து கொள்ளப்பட்டவர்கள்.

பொறி கற்றல் முறையை பயன்படுத்தி இந்த குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இந்த குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கை, கற்கும் திறன் மற்றும் அறிவாற்றல் தொடர்பான புள்ளிவிபரங்கள் பெருமளவு எடுக்கப்பட்டன.

மேலும் குழந்தைகளின் மூளையை "காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (MRI)" மூலம் படம் பிடிக்கப்பட்டது.

இந்த மாதிரிகளை எல்லாம் கொண்டு,  மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், மூளையின் எந்த பகுதியும் தனித்துவமாக கற்றல் குறைபாடு ஏற்படுத்துவது இல்லை என்று தெள்ளத்தெளிவாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கற்கும் திறன் மற்றும் அறிவாற்றல் மூளைகளின் பகுதி இணைப்பு எத்தகைய முறையில் அமைந்துள்ளதோ அந்தவகையில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என இந்த ஆய்வு முடிவு எடுத்துரைக்கிறது.

இதுவரை, அறிவியலாளர்கள் மூளையின் பகுதிகளே கற்றல் குறைபாட்டிற்கான அடிப்படை என கருதி வந்த நிலையில் இந்த புதிய ஆய்வு முடிவு இத்தகைய குறைபாடுகளை இளம்பருவத்திலேயே களைவதற்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த மூளை பகுதி தொடர்புகளில் குறை இருக்கிறதோ அதை மட்டும் சீர் செய்வதற்கான முயற்சிகளை குழந்தைப்பருவம் முதலிலே மேற்கொண்டு வந்தால், கற்றல் குறைபாடுகளை முற்றிலும் நீக்கிவிடலாம் என தற்போதைய ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

நன்றி:  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: