மனித இனமும் வீட்டிலிருந்தே வேலை செய்வதும்

மனித இனமும் வீட்டிலிருந்தே வேலை செய்வதும்

கொராணா நச்சுயிரி தாக்குதலின் விளைவாக வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு கட்டளைகளை ஒவ்வொன்றாக விடுத்து வருகின்றன.

சமூக ஊடகங்களில் இது ஒரு நகைச்சுவை கலந்துரையாடலாக சென்று கொண்டிருக்கிறது.

மனித இனம் வீட்டிலிருந்தே வேலைகளை செய்து பழக வில்லையா? வீட்டில் இருந்தே வேலை செய்வது என்பது மனித இனத்தின் தன்மை கிடையாதா?

1700 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு தொழிற்சாலைகள் அல்லது அது தொடர்பான தொழில் வாய்ப்புகள் அல்லது வேலை வாய்ப்புகள் என்பது இந்த பூவியில் இருந்ததில்லை.

எல்லோரும் அவரவர் தொழிலை அவரவர் வீடுகளில் இருந்தே செய்து வந்தனர்.  இன்றும் கூட, நமது பழமையான பேரூர்களின் கடை தெரு என்பது குடியிருப்பு சார்ந்த ஒரு தெருவாக தான் இருக்கும்.

மனிதர்கள், பல ஊழிகளாக தத்தமது தொழில்களை தமது வீட்டில் இருந்து அல்லது வீட்டின் அருகில் இருந்தே செய்து வந்தனர்.

தொழிற்சாலை புரட்சி என்று ஒன்று ஏற்பட்டபின், அதாவது 1750 ஆம் ஆண்டுக்குப் பின், தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வோர் தத்தமது தொழிற்சாலைகளுக்கு சென்று வேலை செய்து, தமது வருவாயை ஈட்டி வந்தனர்.

அமெரிக்க நாட்டை பொறுத்தவரை 1900 ஆம் ஆண்டு துவக்கம் வரை, அலுவலகம் சென்று பணியாற்றுவது என்கிற ஒரு பண்பாடு பெரும்பாலும் நிலவவில்லை.  இந்தியாவிலும் அதே நிலைதான்.  குறிப்பிட்ட நேர அளவு ஒரு அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்கிற கட்டாய சூழலும் யாருக்கும் இருந்ததில்லை.

மனிதன் தான் செய்கின்ற வருவாய் ஈட்டும் தொழிலை தன் குடும்பத்தையும் இணைத்தே செயல்பட்டான் என்பதுதான் வரலாறு.

1968 ஆம் ஆண்டிற்குப் பின் தான் அலுவலர்களுக்கு அல்லது உயர் பொறுப்பு உள்ளவர்களுக்கு தனி அறை என்கிற ஒரு பண்பு வந்தது. நம் அரசவைகளும் எந்த அரசருக்கும் தனி அலுவல் அரை என்று ஒதுக்கி கொடுத்ததில்லை.

நாள் போக்கில் அலுவலகத்திற்கு அல்லது தொழிற்சாலைக்குச் சென்று பணி புரிவதே உயர்ந்த பணி என, மனித இனம் கருதியதால் அத்தகைய போக்கு மனித வாழ்க்கையின் ஒரு பகுதி என்றாகி இன்று இருக்கிறது.

ஒருபக்கம் இந்தவகையில் மனித சிந்தனை சென்று கொண்டிருந்தாலும், தொழில்நுட்பம் சார்ந்த தொழிலுக்கு வேலைக்கு சரியான நுட்ப அறிவு கொண்ட நபர் கிடைக்காது என்று ஒரு நிறுவனம் உணர்ந்தால் அத்தகைய பணியாளர்களை தத்தமது வீட்டிலிருந்தே வேலை செய்து கொள்ள பல நிறுவனங்கள் அனுமதிக்க துவங்கின.

எடுத்துக்காட்டாக 1973 ஆம் ஆண்டு வீட்டில் இருந்தே வேலை செய்வது என்கிற ஒரு பண்பாடு அமெரிக்க மக்களிடையே துவங்கியது.

1975 ஆம் ஆண்டு கணினி வடிவமைக்கப்பட்ட உடன், இந்த பண்பாடு மேலும் விரிவடைந்தது.

1979 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் தமது ஊழியர்கள் பலரை வீட்டிலிருந்தே வேலை செய்து, முடித்த பொருளை மட்டும் எடுத்து வர வாய்ப்பு ஏற்படுத்தியது.

1983 ஆம் ஆண்டு அதே ஐபிஎம் நிறுவனம் சுமார் இரண்டாயிரம் பணியாளர்கள் தமது வீட்டிலிருந்தே தமது பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதி கொடுத்தது.

வீட்டிலிருந்தே தொழில்நுட்பம் சார்ந்த வேலை, குறிப்பாக மென்பொருள் தொடர்பான வேலை என்ற கொள்கை பலவகையில் நிறுவனங்களுக்கு பணத்தை சேமித்து செய்து கொடுத்தன.

இணைய இணைப்புகள் என்று ஒன்று வந்து விட்டபின், நாடுகளில் சென்று பணியாற்ற வேண்டும் என்கிற கட்டாய சூழலில் இருந்து விடுபட்டு, அவரவர் தமது நாட்டில் இருந்தே அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்கிற ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த வாய்ப்பானது நிறுவனங்களுக்கு செலவினத்தை குறைத்து விடுகிறது.  எடுத்துக்காட்டாக ஒரு பணியாளர் ஒரு அலுவலகம் வந்து அவர் பணியாற்றி செல்ல வேண்டுமாயின், அதற்கான கட்டிட வாடகை, மின்வசதி, போக்குவரத்து செலவுகள், காவலர், உதவி ஆள், குடிநீர் மற்றும் பிற நீர் தேவைகள் என அனைத்தையும் ஒரு நிறுவனம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

அதனால் அது செலவினங்கள் பலவகைகளை ஏற்படுத்தும்.  அதேவேளையில் பணியாட்கள் தத்தமது வீடுகளில் இருந்து பணி செய்தார் என்றால், மேற்சொன்ன செலவினங்கள் அனைத்தையும் பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.

குறிப்பாக வாடிக்கையாளர் தொண்டு அல்லது தொண்டு தொடர்பான எந்தப் பணியாக இருந்தாலும் அவரவர், அவரவர் வீடுகளில் இருந்தே மேற்கொள்ள இயலும் என்கிற சூழல் இன்றளவு ஏற்கனவே நிலவி வருகிறது.

கொராணா நச்சுயிரியால் வீட்டிலிருந்தே பணி என்று பகிரப்படும் பல  ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் செய்திகள்,  ஏற்கனவே அத்தகைய பணி நடைமுறை  தான் பல நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன என்பதை புரிந்திடாததன் விளைவே.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: