செய்திகள்
அயோத்தியில் ராமர் கோவில் நிலம் வாங்க நடந்த முறைகேடு தொடர்பில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைமைக்கும் - அனைத்திந்திய பாஜக தலைமைக்கும் மோதல்போக்கான சலசலப்பு ஏற்பட்டுள்ளது... பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும். வேலூர் சிஎம்சியில் மருத்துவப் பணியாளர்கள் 200 பேருக்கு கரோனா தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய உழவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை ஒமைக்ரானுக்கு தனி தடுப்பூசி


நிர்பயா பாலியல் வன்முறை குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

நிர்பயா பாலியல் வன்முறை குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

இன்று 20.03.2020, வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் நிர்பயா பாலியல் வன்முறை குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

இன்று விடிகாலை 2 30 மணி அளவில் உச்சநீதிமன்றம் வழக்கை முழுமையாக வினவி தூக்கு தண்டனையை உறுதி செய்ததன் விளைவாக காலை 5.30 மணி அளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பவன் குப்தா, வினய் சர்மா, அக்சை குமார் மற்றும் முகேஷ் குமார் ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் மருத்துவர் ஒருவர் நால்வரின் உடலையும் ஆய்வு செய்து அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை உறுதி செய்தார். இதுகுறித்த தகவலை திகார் சிறைச்சாலை பொது இயக்குனர் சந்தீப் கோயல் அவர்கள் தெரிவித்தார்.

இன்று காலை 8 மணி அளவில், தடவியல் பிரிவு மருத்துவர் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

சிறைத்துறை அலுவலர்கள் மேலும் தெரிவிக்கையில் குற்றவாளிகள் நால்வரும் எந்த கடைசி ஆசைகளையும் தெரிவிக்கவில்லை என்றும், அவர்கள் சிறையில் இருக்கும்போது ஈட்டிய வருவாயை அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இன்று விடிகாலை 2 30 மணி அளவில் கடைசி கடைசியாக குற்றவாளிகள் நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்து தங்களது தூக்குத்தண்டனையை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும் அவை தோல்வியில் முடிவுற்றது.

நேற்று வியாழன் இரவு நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை தடை செய்வதற்கான மனுக்களை தாக்கல் செய்து அவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.

வழக்கின் பின்னணி:

2012ம் ஆண்டு டிசம்பர் திங்களில் நிர்பயா என்று அடையாளப்படுத்தப்பட்ட மருத்துவம் பயிலும் 23 வயது மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவரது ஆண் நண்பரும் இதில் தாக்கப்பட்டார்.

அந்த ஆண் நண்பர் தன் உயிருக்கு பயந்து ஓடி ஒழிந்த நிலையில் மாணவி படுகாயமடைந்த நிலையில் டெல்லி சாலை ஓரத்தில் பொதுமக்களால் கண்டறியப்பட்டு காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டார்.

இந்த குற்ற நிகழ்வு இந்திய அளவில் மட்டுமல்லாது உலகலாவிய அளவில் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துரை கலந்துரையாடலை ஏற்படுத்தியது.

அந்த மாணவி முதலில் டெல்லி மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிறப்பு மருத்துவ வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டும் குற்றம் நிகழ்ந்த 13 ஆம் நாள் மரணமடைந்தார்.

குற்றவாளிகள் ஆறு நபர்களும், குற்றம் நிகழ்ந்த அடுத்த சில நாட்களிலேயே அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

விரைவு நீதிமன்றம் சனவரி 17 2013 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு விரைவான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே குற்றம் நிகழ்ந்த பேருந்து ஓட்டுநர் ராம்சிங் மார்ச் 11ஆம் நாள் திகார் சிறைச்சாலையில் தூக்கில் தொங்கியவாறு இறந்துகிடந்தார்.

ஆறு குற்றவாளிகளில் ஒருவர் இறந்து விட்ட நிலையில் மற்றுமொருவர் இளம் வயது குற்றவாளி என கண்டறியப்பட்டு சிறார் நீதிமன்றம் மூலமாக மூன்று ஆண்டுகள் மட்டும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட ஒன்பதாவது திங்களில், அதாவது செப்டம்பர் 2013, மீதமுள்ள நால்வருக்கும் மரண தண்டனை என தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது மே திங்கள் 2017ஆம் ஆண்டு மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

சட்ட வடிவில் மாற்றம்:

இதற்கிடையே நடுவன் அரசானது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக குற்றவியல் சட்ட நடைமுறைகளை மாற்றி அமைத்தது. பாலியல் வன்முறை என்பதற்கு பலவகையில் பல மாற்றங்களைச் செய்து கடுமையான தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டம் அமைக்கப்பட்டது.

பெண்களை கேலி கிண்டல் அல்லது வெறித்துப் பார்த்தல் ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றியமைக்கப்பட்டது.

சிறைத் தண்டனையாக இருப்பின் தண்டனைகள் எல்லாம் இருமடங்காக மாற்றப்பட்டது. எடுத்துக்காட்டாக 10 ஆண்டுகள் சிறை என்றால், புதிய மாற்றம் 20 ஆண்டுகள் என மாற்றப்பட்டது.

மரண தண்டனை

குற்றவாளிகள் நால்வரும் குடியரசுத்தலைவ,ர் நீதியரசர்கள் என மாற்றி மாற்றி பல வகையில் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டாலும் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று காலையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வினை சர்மா என்கிற குற்றவாளி, தேர்தல் ஆணையத்தை கூட உதவிக்காக நாடி பார்த்தார்.  இதற்காக அவர் டெல்லி தேர்தல் நடைமுறையில் இருக்கும் பொழுது டெல்லி அரசானது எந்த வகையில் தங்களது தூக்கு தண்டனையை பரிந்துரை செய்தது என்று கேள்வி எழுப்பினார்.  இதுவும் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.

அக்சை குமார் என்கிற குற்றவாளி தான் தனது மனைவியிடமிருந்து திருமண முறிவு வேண்டி பீகார் நீதி மன்றத்தில் முறையீடு செய்திருப்பதாகவும் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் அது முடியும் வரை தன்னை தூக்கிலிடக் கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டு பார்த்தார். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.  நீதிமன்றம் அவருக்கு அறிவுரையாக "நீதியை வேண்டுவோர் முதலில் நீதியை கடைபிடிக்க வேண்டும்" என அறிவுரை வழங்கியது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: