இந்தியாவில் மின்னணு பொருள் உற்பத்தி செய்வதற்கு ரூபாய் 41 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகைகள்

இந்தியாவில் மின்னணு பொருள் உற்பத்தி செய்வதற்கு ரூபாய் 41 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகைகள்

இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் திறம்பட செயல்பட வேண்டும் என்பதற்காக பல முன்னெடுப்பு திட்டங்களை நடுவண் அமைச்சரவை கடந்த நாள் அறிவித்தது.

அதன்படி இந்தியாவிலேயே மின்னணு பொருள் உற்பத்தி தொழிற்சாலை அமைத்து பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு 41,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவிக்கையில், இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் உற்பத்தித் துறையை மேலும் வலுப்பெற செய்யும் என அறிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த ஊக்குவிப்பு தொகையானது தொழிற்சாலைகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஊக்குவிப்பு முயற்சியின் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி 2025ம் ஆண்டிற்குள் எட்டப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஊக்குவிப்பு தொகையில் 25 விழுக்காடானது உற்பத்தி நிறுவனங்களுக்கு தங்கள் முதலீட்டுக்காக வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

அதேவேளையில், மருத்துவ கருவிகள் மற்றும் மருந்து பொருட்கள் உற்பத்தித் துறைக்கு சுமார் 13 ஆயிரத்து 760 கோடி ரூபாய் அளவிற்கு ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் 9940 கோடி ரூபாய்க்கு மருந்து பொருள் உற்பத்திக்காகவும் 3820 கோடி ரூபாய் மருத்துவக் கருவிகள் உற்பத்தி ஊக்கிவிப்பிற்காக பயன்படும் என வேதியல் மற்றும் உர துறை அமைச்சர் மன்சுக் மன்டாவியா, ஊடகத்தாரிடம் தெரிவித்தார்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 ரூபாய் அளவிற்கு மருந்து பொருள் உற்பத்திக்கான தொழில் பூங்காக்கள் மானிலங்களில் அமைப்பதற்காக செலவிடப்படும் எனவும் தெரிவித்தார்.

ரூபாய் 1940 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி சார்ந்த உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதன்மூலம் 46 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு மருந்து பொருள் விற்பனை பெருகும் எனவும் இதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் பெருகும் எனவும் தெரிவித்தார்.

மருந்து உற்பத்திக்காக மூன்று பெரும் உற்பத்தி பூங்காக்கள் இந்தியாவில் அமையப்பெறும் எனவும், இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த பூங்காக்களில் 53 வகை அடிப்படை தேவையான மருந்துகள் உற்பத்தி மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்படும் எனவும், 20 விழுக்காடு அளவிற்கு அந்த ஊக்குவிப்புத் தொகை இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் "இந்தியாவிலேயே பொருள் உற்பத்தி" என்ற மோடி அவர்களின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என நம்பப்படுகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: