அரசு, மக்களுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை?

அரசு, மக்களுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை?

எளிது எளிது மக்களுக்கு அறிவுரை கூறுதல்.  அதனை விட எளிது அச்சம் கொண்ட மக்களை காவல்துறையை வைத்து மிரட்டி ஓரிடத்தில் நிறுத்தி வைப்பது.

14 மணி நேர தனாக முன்வந்து கட்டுப்பாட்டு அடைப்பு என முதன்மை அமைச்சர் அறிவித்த போதே பல சான்றோர், இதுவொரு துவக்கமே, மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்த இருக்கின்றன என எச்சரிக்கை செய்தனர்.
எச்சரிக்கை இன்று உண்மை என வந்துவிட்டது.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் நோய் பரவலை தடுக்கும் மற்றும் உயிரை காக்கும் என்றாலும், மக்களிடையே ஏற்பட இருக்கும் பொருளாதார சீரழிவு என்பது அரசுகளால் மாற்றி அமைக்க இயலுமா என்பது ஒரு கேள்விக் குறியே.

சீனாவின் வூகான் மாநிலத்தின் மக்கள் தொகை 11 மில்லியன்.  இந்தியாவில் தமிழகத்தின் தொழில் நகரங்களில் மட்டும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கையோ 33 மில்லியன்.

தமிழகம் தவிர, மகாரச்டிரம், குசராத் என நாம் பிற தொழில் மாநிலங்களை கணக்கில் கொண்டால், பாதிப்படையும் மக்கள் தொகை சுமார் 100 மில்லியன் அளவிற்கும் கூடுதலாக இருக்கும்.

இதுவரை நடுவன் அரசு அல்லது மாநில அரசுகள், பொருளாதாரப் பேரிழப்பை தடுப்பதற்கான முன்னெடுப்புகள் எதையும் எடுத்ததாக அறியப்படவில்லை.

ஏற்கனவே நலிந்து கிடைக்கும் இந்திய பொருளாதாரம், இந்த மூடல்கள் மற்றும் கட்டுப்பாட்டால் மேலும் சிதைவுறும்.

அரசு, ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் கொடுக்கவேண்டும் என தனியார் நிறுவனங்களை வற்புறுத்தும் நிலையில், தொழிற்சாலைகளுக்கு இதுவரை எவ்வித ஊக்குவிப்பு வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரவில்லை.

கட்டிடங்களை அல்லது நிலங்களை வாடகைக்கு விட்டிருப்போர் யாரும் பாதிக்கப்படப் போவதில்லை.  அவர்களுக்கான வாடகை நிறுவனம் மூடப்பட்டு இருந்தாலும் தானாக வந்து சேர்ந்தே ஆகவேண்டும்.

கடன் வாங்கியோர் வங்கிகள் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் வட்டியை செலுத்த வேண்டும்.  வட்டிக்கு பணம் விடுவோர் யாரும் இதில் பாதிக்கப்படப் போவதில்லை.

மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் யாரும் பாதிக்கப்படப் போவதில்லை.  அவர்களுக்கான ஊதியம் அவர்களுக்கு வந்தடைந்து விடும்.

இங்கே பாதிக்கப்படப் போவது எல்லாம் அரசின் பேச்சைக் கேட்டு தன் கட்டுப்பாடு என தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்ட தொழில் முனைவோரும் தொழிற்சாலை நடத்துவோரும் தான்.

அவர்கள் தமது தொழிற் கூடங்களுக்கான வாடகையை தவறாது செலுத்த வேண்டும்.  வட்டிக்கு வாங்கிய பணத்திற்கான வட்டியை தொழில் நடக்கா விட்டாலும் செலுத்தியே ஆக வேண்டும்.  வேலைக்கு வராத ஊழியர்களுக்கு, உற்பத்தியே செய்யா விட்டாலும் ஊதியத்தை அரசின் ஆணிக்கு இணங்க கொடுத்தே ஆக வேண்டும்.

அடுத்ததாக பாதிக்கப்படப்போவது நிரந்தர தொழில் இல்லாதோர்.  நாளது கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம்.

நச்சுயிரி தாக்குதல் என்ற செய்தி கேட்டதும் முதலில் தொழிற்கூடங்கள், தாங்கள் வழக்கமாக ஈட்டும் வருவாயை காட்டிலும் பன்மடங்கு குறைவான வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தனர்.

தற்பொழுதைய முழு அடைப்பு என்பது வருவாயை முழுமையாக நிறுத்திவிடும்.  ஆனால் செலவினங்கள் அனைத்தும் அப்படியே உள்ளது உள்ளபடி இருக்கும்.

நிரந்தரப் பணியாளர்கள் கொண்டிராத நிறுவனங்களின் நிலை, பெறும் திண்டாட்டமாக இருக்கும்.  ஏனெனில், இந்த அடைப்பு முடிந்தவுடன் பல தொழிலாளர்கள் தமது ஊர்களில் ஏதாவது ஒரு வேலையைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு சென்று விட வாய்ப்பு உள்ளது. அவர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்து விடலாம்.  அத்தகைய நிலையில் வேலைக்கு சரியான ஆள் கிடைக்காத ஒரு நிலை ஏற்படும்.  அதனால் மேலும் தொழில் நொடிக்க வாய்ப்பு உள்ளது.

சிறு தொழில் நடத்துவோர் பலரும் கடன் கட்ட இயலாத ஒரு நிலையை ஏற்படுத்தினால் அது வட்டிக்கு விடும் வங்கித்தொழில் மேலும் நசிந்து போகும்.

விற்பனை இல்லாததால், அரசிற்கான வரி வருவாய் இல்லாது போகும்.  அதனால் வளர்ச்சி திட்டங்கள் பல தடை படலாம்.

நடுவண் அரசும் மாநில அரசுகளும், இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி, ஏற்கனவே பொருளாதார இடர்பாடுகள் சிக்கித் தவித்து வரும் தொழில் நிறுவனங்களை, இந்த இக்கட்டான நிலையில் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஓர் போர் கால அடிப்படையில் மேற்கொண்டால் மட்டுமே இந்திய பொருளாதாரம் தப்பிக்கும்.


அ சூசை பிரகாஷ்
தொ பே: 763 999 2424

Share this Post:

தொடர்பான பதிவுகள்: