மீண்டும் மீண்டும் ஏழை பாழைகளை வறுத்தெடுக்கும் மோடி அரசு

மீண்டும் மீண்டும் ஏழை பாழைகளை வறுத்தெடுக்கும் மோடி அரசு

அடக்கி ஆள்வதால் ஏற்படும் எதிர்வினைக்கு, மோடியின் செயல்பாட்டிற்கு கிடைக்கும் எதிர்வினைகள் நல்ல எடுத்துக்காட்டு.

மோடியின் செயல்பாடுகள் என்றுமே மூடிய நிலையில் இருந்திடும் வேளையில், யாரது அறிவுரையும் ஏற்காத மனநிலையைக் கொண்ட ஆட்சியாக இவரது இருந்து வருவதால், ஆட்சியாளர்கள் செயல்படுத்தும் பல திட்டங்கள், ஏழை எளியவர்களை மேலும் மேலும் வஞ்சிப்பதாக அமைந்து வருகிறது.

முதல் எடுத்துக்காட்டு, பணம் செல்லாது என்று அறிவித்த செயல்.  அது நிறைவுற்று 5 ஆண்டுகள் கடக்கின்ற இந்தவேளையில், கோவிட் 19 நச்சுயிரி தாக்குதல் என்பதன் பொருட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் தொடர் 21 நாள் நாட்டையே முடக்கி வைத்திருப்பது என்பது ஏழை எளியவர்கள் மீது தொடுக்கப்படும் பெரும் பொருளாதார போராக கருதப்படுகிறது.

எதிர் கட்சியினர் அல்லது தமது கட்சியின் கீழ்மட்ட பொருப்பாளர்கள் அல்லது அரசு சாரா அமைப்புகள் ஆகியோரிடம் கருத்து கேட்டு இத்தகைய முடக்கம் மேற்கொள்ளபட்டிருந்தால், பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்து ஏழை எளிய வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்வு இந்த அளவிற்கு சிதைவுற்று இருக்காது.

ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் கருத்தை கேட்காமல், பிழைக்க வருபவர்களின் மாநில அரசுகளையும் கேட்காமல், தன்னார்வ அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் அறிவுரைகளையும் கேட்காமல், எதிர்க்கட்சியினரையும் கலந்துரையாடாமல், தான்தோன்றித்தனமாக எடுக்கும் முடிவுகள், மக்களை, அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாக்குகிறது என்பது இப்பொழுது அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முழு 21 நாள் முடக்கம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு.   அரசு இயந்திரத்தின் முழு தோல்வி என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த முடக்கம் எனலாம்.   

தம் ஊர்களுக்கு சுமார் 500 அல்லது 600 கிலோமீட்டர் தொலைவு வரை கால் நடையாக உணவோ, உறக்கமோ, தண்ணீரோ இன்றி 600,000 ற்கும் மேற்பட்ட நாள் கூலிக்கு நகர் புறங்களில் வேலை செய்துவந்த மக்கள் தம் பயணத்தை மோடி அரசின் திட்டமிடா 21 நாள் முடக்கத்தின் விளைவாக மேற்கொண்டனர்.

இந்த ஏழை எளிய மக்கள் தம் பெண்களுடன், தம் சிறு கைகுழந்தைகளையும் தூக்கிக்கொண்டு, தலை சுமையாக தத்தம் பொருட்களையும் சுமந்துகொண்டு நடந்து செல்கையில், அவர்களைக் ஆங்காங்கே காவல்துறை மூலம் தடுத்து நிறுத்தி, கம்பு கொண்டு தாக்கி, பெரும் உடல் காயங்கள் ஏற்படுத்தி, மேலும் ஆங்காங்கே தவளைகள் போல் குதிக்க வைத்து அவமானப்படுத்தி நடத்தப்பட்ட கொடூரங்கள் வார்த்தைகளால் சொல்வதில் அடங்காது.

சில இடங்களில் அவர்கள் மீது பிளீச்சிங் தண்ணீரையும், பிளீச்சிங் பொடியையும் தூவி அவர்களை செத்த பிணத்திற்கு ஒப்பாக நடத்திய கொடூர நிகழ்வுகள் நம் மனதைவிட்டு நம் வாழ்நாள் முடியும் வரை மறைவதற்கான வாய்ப்பு இல்லை.

யார் அறிவுரையையும் கேட்பதற்கு இல்லை.  நான் நானாக என் விருப்பத்திற்கு செயல்படுவேன் என்கிற மனநிலை, ஏழை எளிய மக்களை உயிரற்ற பிணம் போல் நடத்துவதற்கும் துணிவை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

ஆட்சியாளர்கள், ஆர்எஸ்எஸ் கருத்துக்களை மட்டுமே கேட்டு செயல்படுவதால், ஏழைகளின் வாழ்வு என்னவென்று தெரியாத நிலையில் இவர்கள் இருப்பதற்கான ஒரு அடிப்படையாக அமைகிறது. இது கிட்டத்தட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும் பணக்காரர்களும் ஆட்சியை நடத்துவதற்கு ஒப்பானதாக அமைந்துவிடுகிறது.

எல்லாவகை கொடூரங்களையும் ஏழைகள் மீது தாக்குதலாக தொடுத்துவிட்டு, அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு வாடகை, வாங்கிய கடனுக்கான தவணை வசூல், சாலையை பயன்படுத்துவதற்கான சுங்கவரி போன்றவற்றில் சலுகை என அறிவிக்கப்பட்டது.

கூர்ந்து கவனித்தால், அவை அனைத்தும் மாயையே.  உண்மையில், இவர்கள் சலுகை என்னவென்றால், இந்த திங்களுக்கான வாடகையை அடுத்து இரு திங்கள் சேர்த்து மொத்தமாக செலுத்த வேண்டும்.  வாங்கிய கடனுக்கான வட்டியுடன் மேற்கொண்டு வட்டி சேர்த்து பணத்தை நிதி நிறுவங்களுக்கு செலுத்த வேண்டும்.  வண்டியை எடுத்துக்கொண்டு யாரும் சாலையில் செல்ல முடியாத இந்த நிலையில் சாலைகளுக்கு சுங்க வரி கிடையாது என்று பெருமைமிகு ஒரு அறிவிப்பு.

ஆட்சியாளர்கள் தாம் செய்வது என்னவென்று தெரியாமல் தொடர்ந்து ஏழை எளியவர்களை இத்தகைய வழிகளில் நசுக்கி பிழிவது என்பது ஒரு வாடிக்கையான நிகழ்வாக மாறிவருகிறது.  இந்த தாக்குதல்களில் பெரும்பாலும் பாதிப்பிற்கு உள்ளாவது ஏழ்மையான மாநிலங்களாக கருதப்படும் பீகார், உத்திரப்பிரதேசம்,  ஒரிசா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் ராசஸ்தான் மாநிலத்தவர்கள்.   இந்த மாநிலங்களில் பல குறுக்கு வழிகளில் பாஜக தமது ஆட்சியை அமைத்து வருகிறது அல்லது அமைக்க முயல்கிறது.

இந்த ஆட்சியாளர்கள் செயல்படுத்தும் அதிரடி மூடர்தனத்தில் எப்பொழுதுமே பாதிப்படைவது நாட்டின் ஏழைகள் மட்டுமே.  ஆனால் கைதட்டி இத்தகைய செயல்பாடுகளில் ஆட்சியாளர்களை ஊக்குவிப்பது என்னவோ ஒவ்வொறு முறையும் பெரும் பணக்காரர்களாக திகழும் பக்தாள்கள் மட்டுமே.

என்று திருந்துவார்கள் இந்த ஆட்சியாளர்கள்?  ஏழை எளியவரின் வலிகளை என்று உணர்வார்கள் இந்த ஆட்சியாளர்களுக்காக பால்கனிகளில் நின்று கைதட்டி ஊக்குவிக்கும் பக்தாளகள்?

அ சூசை பிரகாசம்
தொ பே: 763 999 24 24

Share this Post:

தொடர்பான பதிவுகள்: