ஊரடங்கு ஏன் அடங்க வேண்டும்?

ஊரடங்கு ஏன் அடங்க வேண்டும்?

ஊரடங்கு நீடித்தால் நோய்த்தொற்றை காட்டிலும் பல ஏழை உயிர்கள் பட்டினியால் சாவதற்கு வழிவகை செய்யும்!

நாட்டின் முதன்மை அமைச்சர் அறிவித்த 21 நாள் முழு அடைப்பு என்பது வருகின்ற ஏப்ரல் 14 ஆம் நாள் நள்ளிரவு 12 மணியுடன் முடிவுறுகிறது.

இந்த முடக்கத்தின் தொடர்பில் எத்தகைய முடிவை எடுப்பதாக இருப்பினும் அதை இன்னும் ஓரிரு நாளில் அரசு அறிவிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் பல மாநிலங்கள் முழு முடக்க நீட்டிப்பை விரும்புவதாக சொல்லப்படுகிறது.  ஒரு சில மாநிலங்கள் முடக்க நீட்டிப்பு என்பது முழு அளவில் தேவை அல்ல என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டும் முழுமையான முடக்கத்தில் இருக்க மற்றவற்றில் மெல்ல மெல்ல செயல்பாடுகளை அனுமதிப்பது என கருதுகின்றனர்.  எந்த மாநில அரசும் முழுமையாக முடக்கத்தை விலக்கிக் கொள்ள விரும்பவில்லை.

வறுமை கோட்டிற்கும் கீழ் என்றால் என்ன?

பேரூர் பகுதிகளை நாள் ஒன்றிற்கு 47 ரூபாய் வருவாய்க்கும் குறைவு அல்லது சீற்றூர் பகுதிகளில் நாள் ஒன்றிற்கு வருவாய் 32 க்கும் குறைவு என்றால் அந்த நபர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்.

நாள் ஒன்றிற்கு 47 ரூபாய் ஒருவர் ஈட்டவில்லை என்றால் அவரால் மூன்று வேளை உணவு உட்கொள்ள போதிய வருவாய் இல்லை.  ஆகவே அவர் மூன்று வேளை உணவு உண்ண வழி இல்லை.

பிற நாடுகளுடன் ஒரு ஒப்பீடு

வளர்ந்த நாடாக இருந்தாலும், ஏழை நாடாக இருந்தாலும் சமூக விலகல் ஒன்றே இந்த கோவிட் 19 நச்சுயிரி தாக்குதலில் இருந்து மக்களை காக்க இயலும் என நன்கு உணர்ந்து செயல்பட்டு வருகின்றன.  எல்லா நாடுகளுமே முழு முடக்கத்தையே நடைமுறையில் கொண்டு இந்த நோய் தாக்குதல் பரவலை தடுத்து வருகின்றன.

இங்கே, நம் இந்திய நாட்டிற்கும் பிற நாடுகளுக்குமான வேறுபாட்டை, முழு முடக்கத்தை மேலும் தொடர்வதற்கு முன் உணர வேண்டும்.

நம் நாடு ஏழைகளின் நாடு.  சீனாவை ஒப்பிடுகையில் நம் மக்களின் சராசரி வருவாய் அவர்களின் வருவாயை காட்டிலும் ஐந்தில் ஒரு பங்கு.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் நம்மை விட 20 மடங்கு கூடுதல் வருவாயை அங்குள்ள மக்கள் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் 20 விழுக்காடு அளவிற்கு மக்கள் வறுமைக் கோட்டை விட கீழ் வாழ்கின்றனர். அதாவது நாள் ஒன்றிற்கு ரூபாய் 32 -ஐ விட வருவாய் குறைவு.  மேலும் சுமார் 40 விழுக்காடு மக்கள் இந்த வறுமைக் கோடு என்று அரசு முடிவு செய்த வருவாயை காட்டிலும் சற்று கூடுதலாக வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.  அப்படியானால் கிட்டத்தட்ட இந்தியாவில் 50 விழுக்காடு அளவிற்கு மக்கள் ஏழைகளை காட்டிலும் ஏழைகளாக உள்ளனர். அதாவது நாள் ஒன்றில் மூன்ற் வேளை உணவு உண்பதற்கு வாய்ப்பு இன்றி!

இந்தியாவில் 80 விழுக்காடு தொழிலாளர்கள் முறைசார்பற்ற தொழில் வருவாயை நம்பி வாழ்கின்றனர். அப்படியானால் இவர்களின் வருவாயும் இந்த முடக்கத்தால் முற்றிலுமாக நின்றுபோய் இருக்கும். இத்தகைய தொழிலாளர்கள் எந்த அமைப்பிலும் அடங்காதவர்கள் என்பதால் இவர்களை இனங்கண்டு இவர்களுக்கு அரசு உதவுவது என்பது இயலாத நிலை. அப்படியானால் இவர்களில் பெரும்பாலானோர் வருவாய் இன்றி வறுமை நிலைக்கும் கீழ் நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வளர்ந்துவிட்ட நாடுகள் வருவாய் இழப்பு காப்பீட்டு திட்டங்களை நடைமுறையில் கொண்டுள்ளன.  இந்தியாவை பொறுத்தவரை யாருக்கும் வருவாய் இழப்பு காப்பீடு என்ற ஒன்று இல்லை.

வளர்ந்துவிட்ட நாடுகள் சமூக இடைவெளியை ஏற்படுத்துவதற்காக முழு அடைப்பை மேற்கொண்டாலும் அவர்களின் உள்நோக்கம், மக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் மொத்தமாக குவியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே! 

நம் இந்தியாவை பொருத்தவரை நமது நோக்கம் அதுவல்ல.  மொத்தமாக வந்தாலும், குறைவான எண்ணிக்கையில் வந்தாலும்  மக்களுக்கான மருத்துவ வசதி என்பது இல்லை.

எடுத்துக்காட்டாக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையை எடுத்துக்கொண்டால் அங்கே 700 மருத்துவர் படுக்கை வசதிகள் இருக்கின்றன.  ஆனால் வென்டிலேட்டர்களின் மொத்த எண்ணிக்கையோ வெறும் 4 மட்டுமே.

முடக்கம் தொடர்வது சரிதானா?

நோய்த் தொற்று ஏற்பட்டாலும் அதை உடனடியாக கண்டறியவும் அல்லது குணப்படுத்தவும் இயலாத ஒரு நிலையில் பொருளாதாரத்தையும் சேர்த்து முடக்கிவைப்பதால் மருத்துவ வசதிகளை வரும் நாட்கள் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேலும் குறைவதற்கான வழியை ஏற்படுத்துகிறது.

அப்படியானால் இந்த முடக்கம் என்பது ஏற்கனவே நலிந்துள்ள மருத்துவ வசதிகள் மேலும் நலிந்து போக வழிவகை செய்கிறது.  இந்த முடக்கத்தால் நீண்ட பயன் ஏற்படுவதற்கு பதிலாக நீண்ட பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயம்.

இந்த முடக்கம் இன்றளவு நோய் பரவலை பெரும்பாலும் கட்டுப்படுத்தி உள்ளது.  அதனால் மக்கள் மருத்துவமனைகளில் கூடுவதை கட்டுப்படுத்துகிறது.  மக்களிடையே தூய்மையான வாழ்வு என்பதற்கான பொருள் என்னவென்று புரிய வைத்திருக்கிறது.

அதே வேளையில், இந்த முடக்கம் நீங்கியபின், சமூக இடைவெளி விட்டு செயல்படுதல் என்பது மக்களிடையே தொடருமா என்பது கேள்விக்குறியே! 

இந்தியாவைப் போன்ற மக்கள் நெருக்கமாக வாழும் நாட்டில் மத வழிபாடு நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, பொது போக்குவரத்தில் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி, நகர்புற குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களாக இருந்தாலும் சரி, மக்கள் மீண்டும் நெருக்கமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால் இந்த அளவு கட்டுக்குள் இருக்கும் நோய் பரவல், மக்கள் மீண்டும் நெருக்கமான வாழ்வு முறையை கடைபிடிக்க துவங்கினால் நோய்த்தொற்று மீண்டும் வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதன்படி பார்த்தால் தற்போதைய முழுஅடைப்பு தற்போதைக்கு மக்களை காக்கும் என்றாலும் நீண்ட நாள் பயன் தருமா என்பது கேள்விக்குறியே!

இந்த முடக்கத்தால் பசி பட்டினியால் ஏழைகள் மடிவது பெருமளவில் இருக்கும்.  ஏனெனில் பொது வழங்கலில் சிறப்புற செயல்படும் தமிழக அரசே இதுவரை விலையில்லாத உணவு பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.  வருவாய் இன்றி வாடும் மக்களுக்கு 15 நாட்களுக்கு மேல் கடந்தும் கொடுப்பதாகச் சொன்ன அந்த ஆயிரம் ரூபாயும் இன்னும் பல ஏழை எளிய மக்களுக்கு வந்து சேரவில்லை.

தமிழகமே இத்தகைய நிலையில் இருப்பதாக இருந்தால் பின்தங்கிய மாநிலங்களில் மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணுவதற்கே அச்சமாக இருக்கிறது.

இந்த முடக்கத்தால் மட்டும் இந்தியர்களில் மேலும் 40 கோடி தொழிலாளர்கள் வறுமை கோட்டிற்கும் கீழ் செல்வார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கிறது.  அப்படியானால் அவர்களில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையும் சேர்த்து கணக்கிட்டால், பாதிப்பின் தாக்கம் எண்ணில் அடங்காது.

எமது வேண்டுகோள் எல்லாம், முழு முடக்கம் என்பது தற்போதைக்கான பயனை மட்டுமே தரும் என்பதால் முழு முடக்கத்தை மேலும் மேலும் நீடிப்பது தேவையற்றது.  அது மக்களை உணவின்றி கொல்வதற்கு நிகரானதாக அமைந்துவிடக்கூடாது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: