ஊரடங்கு அமல்படுத்திய நடுவன் அரசு சலுகைகள் அறிவிக்குமா?

ஊரடங்கு அமல்படுத்திய நடுவன் அரசு சலுகைகள் அறிவிக்குமா?

நச்சுயிரி தாக்குதலுக்காக முழுமையாக முடக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டும் மீண்டு எழ, தொழில் முனைவோர் பல கோரிக்கைகளை நடுவன் அரசின் முன் முடக்கம் துவங்கிய நாள் முதல் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.  இருப்பினும், அரசு இதுவரை எவ்வகையிலும் உதவிக்கரம் நீட்டவில்லை.

தொழில் முனைவோரின் தலையான கோரிக்கை பணப்புழக்கத்தை மீட்டெடுப்பது, இறக்குமதி வரி சலுகை, விற்பனை வரி சலுகை, அரசிடம் இருந்து திரும்பப் பெற வேண்டிய பணத்தை தொழில் முனைவோருக்கு விரைந்து அரசு கொடுக்க வேண்டும் மற்றும் வரி ஏய்ப்பு என்ற பெயரிலான மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பனவாகும்.

இதற்காக விரைவில் நடுவன் அரசின் அனைத்து துறை அலுவலர்களும் தொழில்முனைவோரை தொடர்புகொண்டு, எவ்வாறு இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்பது குறித்து வினவ இருக்கின்றனர்.

தொழில்முனைவோரிடமிருந்து, "பொருளாதார நெருக்கடியை விலக்கி, எவ்வாறு பொருளாதாரத்தை மீட்டெடுப்பது" என்பது குறித்த கருத்துக்கள் பெறப்படுகின்றன.

பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்குவதற்கு முன், நடுவன் அரசு தொழில் வல்லுனர்களிடம் கேட்காமல் முடக்கத்தை மேற்கொண்டு விட்டாலும், இப்பொழுது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து வல்லுநர்களுடன் கேட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறி வருகிறது.

இந்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.9 விழுக்காடு அளவு மட்டுமே இருக்கும் என பன்னாட்டு நாணயமுறை பண நிறுவனம் இந்திய பொருளாதாரத்தை மதிப்பீடு செய்துள்ளது.

அதே வேளையில், பன்னாட்டு பண அமைப்புகள் சில இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை "சுழியம்" என்ற அளவில் மதிப்பீடு செய்துள்ளனர்.

ஒருபுறம் தொழில் முனைவோர் அரசின் உதவியை வேண்டி நிற்க, பொதுத்துறை வங்கிகள் இந்த இடர்பாடான சூழ்நிலையிலும் கடன் வசூல் வேட்டையில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன.

கடந்த நாள், பொதுத்துறை வங்கிகள் மால் உரிமையாளர்களை வாடகைதாரரிடமிருந்து வாடகையை கட்டாயமாக பெற்று கடன் செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடாக செலுத்த வேண்டும் என கட்டளை சுற்றறிக்கை விடுத்துள்ளன.

ஒரு பொதுத்துறை வங்கியானது, தனது கடன் வசூல் சுற்றறிக்கையில், மால்களில் கடை நடத்துவோரின் வாடகை என்பது கடன் கட்டவேண்டிய குத்தகை ஒப்பந்த தொகை. ஆகவே வாடகை நிறுத்தி வைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிற வகையில் குறிப்பிட்டுள்ளது.

தொழில் முனைவோர் நடுவண் அரசின் உதவியை ஏங்கி காத்து நிற்கையில், பல நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கான ஊதியத்தில் கட்டாய பிடித்தங்களையும், சிலரை கட்டாய விடுப்பிலும் அனுப்பி வருகின்றன.  ஒரு சில நிறுவனங்கள் இதுவரை தமது ஊழியர்களுக்காஅன மார்ச் திங்கள் ஊதியத்தை கொடுக்கவில்லை.  இந்தியாவில் 26 விழுக்காடு வேலைக்கு அமர்த்த தகுதியுடையோர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

வரும் நாட்களில், நடுவன் அரசு தொடர்ந்து தொழில் முனைவோருக்கு உதவ முன் வரவில்லை என்றால், நாட்டின் பொருளாதாரம் மேலும் சீரழிவதோடு, பெருமளவு வேலை இழப்புகள் ஏற்பட்டு, குற்றச்செயல்கள் பெருகுவதற்கு வாய்ப்பாக அமையும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: