வெட்கித் தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறேன்!

வெட்கித் தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறேன்!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... கொடியது கொடியது அந்த மானிடன் ஏழையாய் பிறப்பது கொடியது!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு என வந்த நாள் முதல், வயிற்றுப் பிழைப்பிற்காக சிற்றூர்களிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் ஏழை மக்களின் நிலை கொடுமையிலும் கொடுமை.  அரசின் கணக்கின் படி, சுமார் 6 லட்சம் ஏழைகள் நடையாக நடந்து சுமார் 400 - 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தத்தம் ஊர்களுக்கு தமது சுமைகளையும் தம் குழந்தை குட்டிகளையும் தூக்கிச் சென்றார்கள் என்கிற செய்தி நெஞ்சை பிழ்ப்பதாக அமைந்தது.

நடந்து செல்கையில், ஆங்காங்கே, காவல் துறையினரால் தாக்கப்பட்டார்கள் என்கிற செய்தியையும் நாம் ஊடகங்களின் வாயிலாக தெறிந்துகொண்டு இயலா நிலையில் வெட்கி தலை குணிந்தோம்.

ஊருக்கு நடந்தே செல்கையில் மடிந்த சிலரின் செய்திகள் வந்த வண்ணம் இருக்க, நடந்து செல்ல இயலாதரும் துணிவில்லாதவரும் அவரவர் வாழுகின்ற பேரூர்களில் வேலை வாய்பின்றி, தங்க வீடும் இன்றி, வயிற்றுப் பசியுடன் ஆங்காங்கே தங்கிவிட்டனர்.

ஊரடங்கு ஏப்ரல் 14-ல் முடிவுறும் என்ற ஆவலில், தம் ஊர்களுக்குச் சென்றால் அங்கே உணவாவது கிடைக்கும் என்ற ஏக்கத்தில், பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் தொடர்வண்டி நிலையங்களில் காத்துக்கிடந்தனர்.

தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படம் மும்பை தொடர்வண்டி நிலையத்தில் கூடிய புலம்பெயர்ந்த மக்கள் பசியுடன் போராட்டத்தில்.இந்த படம் சூரத்தில் நடந்த போராட்டம் குறித்த விளக்கம் தருகிறது


ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட செய்திகேட்டு வயிற்றுப் பசியுடன் இருந்த மக்கள் போராட்டமே வழி என்கிற வழியைத் தேடினர்.   மும்பை நகர மட்டுமல்லாது குஜராத்தின் சூரத் நகரில் இதே நிகழ்வு நடந்தது.  அவர்களை காவல்துறை கம்பை சுழற்றி விரட்டியடித்தது.

இந்த படம் தலைநகர் டெல்லியில் வாழும் ஏழைகளை காட்டுகிறது

இதற்கிடையே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பலநூறு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி, யமுனை ஆற்றின் கரையோரங்களிலும், பாலங்களுக்கு அடியிலும், பசி பட்டினியுடன், அடிப்படை தூய்மை என்ற ஒரு நிலை அற்றும்,  வாழும் அவல நிலையை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கண்டறிந்தனர்.

யமுனை ஆற்றின் நீர் கழிவுநீரை காட்டிலும் கழிவுகளை கொண்டது. கரையோரங்கள் மக்கள் வாழ தகுதியற்றவை.

இந்த ஏழை மக்களிடம் வினவியபோது, தாங்கள் மூன்று நாட்களுக்கு மேல் உணவின்றி வாழ்வதாக கூறக் கேட்டதும், ஒரு பாறையாக இருந்தாலும் அது கண்ணீர் வடிக்கும்.

கோடிக்கணக்கான புலம்பெயர்ந்து வயிற்றுப் பிழைப்பு தேடும் மக்களை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது என்பது இயலாத ஒன்று.

இவையெல்லாம், இந்த முடக்கத்தால் , கோடிக்கணக்கான ஏழை இந்தியர்கள் வாழ்வாதாரம் இன்றி, உண்ண உணவின்றி, தம் நிலையை எடுத்துச் சொல்வதற்கு கூட வழியின்றி மெல்ல மடிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

இந்தியாவில் சுமார் நான்கு கோடி மக்கள் பிழைப்பிற்காக சிற்றுர் புறங்களில் இருந்து பேரூர் பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வாதாரத்தை தேடி வாழ்ந்து வருகிறார்கள்.

பொதுவாக இந்த ஏழைகள், பேரூர் பகுதிகளில் வீட்டு வேலை செய்பவர்களாகவும், ஓட்டுநர்களாகவும், தோட்ட வேலை செய்பவர்களாகவும், கட்டிட பணிக்கு நாள் கூலிக்கு வேலை செய்பவர்களாகவும், பெரிய மால்களில் பணிபுரிபவர்களாகவும் அல்லது தெருவோரங்களில் சிறு கடைகள் அமைத்து தம் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டும் வாழ்கிறார்கள்.

இதில் மேலும் கொடுமை என்னவென்றால், இந்த ஏழைகளின் ஊர்ப்புறங்களில், அவர்கள் விளைவித்த கோதுமை விழைந்து நிற்க, அதை அறுவடை செய்வதற்கு கூட இவர்களால் ஊர்களுக்குச் செல்ல இயலாத ஒரு நிலை.

ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், தத்தம் ஊர்களுக்கு இந்த ஏழைகள் உடனடியாக தப்பிச் செல்வார்கள்.  இதனால், காவல்காரர் முதலான அடிப்படை பணிகளுக்கு பேரூர் பகுதிகளில் வேலைக்கு ஆட்கள் இனி கிடைக்காமல் போகலாம்.

சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன், இந்த ஊரடங்கும் உத்திரவு குறித்து கருத்துக் கூறுகையில் " கோவிட் 19 நச்சுயிரி தாக்குதல் இல்லாதவர்களை இவ்வாறு அடைத்து வைப்பது மற்றும் அவர்களை தத்தம் ஊர்களுக்குச் செல்ல இயலாத வகையில் பிடித்து வைத்திருப்பது என்பது மனித உரிமை மீறலாகும்" என கருத்துரைத்தார்.

அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில், இந்த ஏழை  மக்களை தத்தம் ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடுவன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இக்கட்டான நேரத்தில், இந்த ஏழை மக்களை நாம் தேர்ந்தெடுத்த அரசு கையாண்ட விதம் கண்டிப்பாக இந்தியாவிற்கு தலைகுனிவை தரும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: