உள்ளடக்க உருவாக்குநர்களை ஏமாற்றும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்!

உள்ளடக்க உருவாக்குநர்களை ஏமாற்றும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்!

உள்ளடக்கம் உருவாக்குவது என்பது கருத்தை முழுமையாக உள்வாங்கி சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுரை எழுதுவது ஆகும்.  இதற்கு அறிவும் அறிவாற்றலும் தேவை.

அதேவேளையில், வெளியிடப்பட்ட கட்டுரையிலிருந்து சில தகவல்களை மட்டும் எடுத்து தம் நிகழ்நிலை தளங்களில் வெளியிட்டு அதன் மூலம் பணம் பார்ப்பதற்கு சில வரிகளில் மென்பொருள் எழுதத் தெரிந்திருந்தால் போதும்.

ஊடகவியலாளர்கள், கருத்துக்களை பல மணி நேரம் செலவு செய்து, பல பொருட் செலவுகளும் செய்து, கட்டுரையாக வடித்து வெளியிட்டால், அதை சில வரிகளில் எழுதப்பட்ட மென்பொருள் கொண்டு தம் தளங்களில், ஏதோ அவர்களின் கட்டுரை போன்று வெளியிட்டு, அதன் மூலம் பணம் ஈட்டுகின்றனர் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள்.

இத்தகைய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது என கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களை பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அரசுகள் கண்டித்து அதற்கு ஈடான பணத்தை ஊடகவியலாளர்களுக்கு செலுத்த வேண்டும் என சட்ட வரைவு இயற்றியுள்ளனர்.

கூகுள் இதற்கு பதிலடி தரும் வகையில், ஸ்பெயின் செய்திகள் யாவற்றையும் தம் செய்தி பிரிவில் இருந்து நீக்கி விட்டது.  கூகுளை பொருத்தவரை, தாம் ஏதோ பொதுத்தொண்டாற்றி வந்தது போலவும், விளம்பர வருவாயில் பங்கீடு கேட்பது என்பது குற்ற செயல் போலவும் நடந்துகொண்டது.

மேலும், கூகுள் நிறுவனமானது ஒரு படி மேல் சென்று, கூகுள் பதில்கள் என்ற ஒரு அமைப்பை உள்ளடக்க உருவாக்குனர்களுக்கு தருகிறது. இது உருவாக்குனர்கள் ஏதோ ப்ணம் ஈட்ட ஒரு வாய்ப்பு என கருதப்பட்டாலும், கூகுள் தனது தேடல் முடிவுகளில், உருவாக்குனர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களை, தம் தேடல் முடிவு பக்கத்தில் பதிலாக கொடுத்து, உண்மையில் கருத்தை படைத்த உருவாக்குனர் எந்த பயனும் இல்லாமல் செய்துவிடுகிறது.   அதே வேளையில், தேடல் முடிவு பக்கங்களில் விளம்பரங்கள் பல வெளியிட்டு தனக்கு போதுமான வருவாயை அடுத்தவர் படைப்பை பயண்படுத்தி ஈட்டிக்கொள்கிறது.

மேலும், ஊடகங்களில் இருந்து பெறப்படும் எல்லாவகை படைப்புகளுக்கும் இந்த இரு நிறுவனங்களும் எவ்வகை கட்டணம் செலுத்தா விடினும், இடையிடையே விளம்பரங்கள் வெளியிட்டு இந்நிறுவனங்கள் பணம் ஈட்டிக் கொள்கின்றன.

ஊடக நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டால் மட்டுமே விளம்பர வருவாயில் சிறிதளவு பங்கை ஊடக நிறுவனங்களுக்கு இந்த இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன.

கோவிட் 19 நச்சுயிரி தொற்று பரவத் துவங்கிய நாள்முதல், அச்சு ஊடகங்கள் கிட்டத்தட்ட அச்சு வெளியீடுகள் இல்லாமல், வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊடகங்கள் முழுக்க முழுக்க நிகழ்நிலை தளங்களில் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான பயனர்கள், அச்சு ஊடகங்கள் தமக்குக் கிடைக்கப் பெறாத நிலையில், நிகழ்நிலை தளங்கள் வாயிலாக மட்டுமே அன்றன்றைய செய்திகளை அறிந்து வருகின்றனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய அவுஸ்திரேலிய அரசு, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துப் பேழைகளுக்கும், கூகுள் மற்றும் ஃபேஸ்புக், திரட்டும் அளவுக்கு ஏற்ப, அதற்கு ஈடான தொகையை ஊடகங்களுக்கு செலுத்த வேண்டும் என்பதற்கான சட்ட வரைவை வெளியிட்டுள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட், எந்த பொருளையும் தாமாக விற்பதில்லை.  சந்தையில் விற்கப்படும் பொருட்களை, விற்பனையாளர்களிடம் இருந்து தம் தளங்களில் ஒன்றிணைப்பதன் மூலம், இடைத்தரகர் நிலையிலிருந்து பணம் ஈட்டுகிறது.  அங்கே பொருள் விற்பவர் தமக்கான வருவாயை முழுமையாகப் பெற்றுக் கொள்கிறார்.

செய்தி வெளியீடு என்பதும் ஒரு பொருள் என எடுத்துக்கொண்டால், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள், அத்தகைய பொருட்(செய்தி)களை வெளியிடும் பொழுது அதன் உரிமையாளருக்கு அதற்கான தொகையை செலுத்திவிட்டு வெளியிடுவதே முறையானதாக இருக்கும்.

மேலும் ஊடகத்தார், தாம் வெளியிடும் செய்தி கட்டுரைக்கு ஏற்ப, அதற்கான புகைப்படங்கள் பணம் செலுத்தி பெறுகின்றனர்.  ஆனால் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் தமது செய்திப் பிரிவில் இத்தகைய படங்களை எவ்வகை கட்டணங்களும் இன்றி எடுத்து பயன்படுத்துகின்றன.

இந்திய ஊடகங்களை பொருத்தவரை, அவுஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அரசுகள் முன்னெடுக்கும், சட்டவரைவுகளை இந்திய அரசு பின்பற்றி,கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடமிருந்து, வருவாய் பங்கீடு பெற்று இந்திய ஊடகங்களுக்கும் தர வேண்டும் என்பதாகும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: