நாடே திண்டாடுது, இதுல ரூ.68,600 கோடி கடன் தள்ளுபடி? - கொந்தளித்த சீமான்!

நாடே திண்டாடுது, இதுல ரூ.68,600 கோடி கடன் தள்ளுபடி? - கொந்தளித்த சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"கொரோனோ நச்சுயிரி தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆணையால் நாட்டு மக்கள் யாவரும் செய்வதறியாது வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழலில் 45 கோடி அடித்தட்டு உழைக்கும் மக்கள் பசியோடும், பட்டினியோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்க நடுவன் அரசு முன்வரவில்லை. ஆனால் தனிப்பெரு முதலாளிகள் பெற்ற கடன்தொகை 68,000 கோடி ரூபாயினைத் தள்ளுபடி செய்திருக்கும் செய்தி நாட்டு மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதமும், இந்திய ரூபாயின் மதிப்பும் பன்மடங்கு சரிந்து இந்தியாவின் பொருளாதாரம் அதளபாதாள வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கட்டுப்படுத்தப்படாத விலைவாசி உயர்வினால் பணவீக்கம் நாள்தோறும் உயர்ந்து வருகையில் அதனைச் சரிசெய்வதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காத நடுவன் அரசு தனிப்பெரு முதலாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

பண மதிப்பிழப்பு எனும் மிகத் தவறான முடிவும், சரக்கு மற்றும் சேவை வரி எனும் பிழையான வரிவிதிப்புக் கொள்கையும் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பிளந்து சிறு, குறு தொழில்கள் அனைத்தையும் நலிவடையச் செய்திருக்கும் சூழலில் அவர்களைக் கைதூக்கிவிட்டு மேலெழச் செய்ய முயற்சி எடுக்காத நடுவன்ய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்ப் பாடுபடத் துடிப்பது வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த இந்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இயலாது நடுவன் ரிசர்வ் வங்கியிலுள்ள ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியிருப்பைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் நிலையில் நடுவன் அரசு உள்ளது. இந்த சூழலில் தனிப்பெரு முதலாளிகளின் வாராக்கடனை வசூலிக்க முன்வராது அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டிய தேவையென்ன? வங்கிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து திவாலாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடனை சத்தமின்றித் தள்ளுபடி செய்ய வேண்டிய நிர்பந்தமென்ன வந்தது? கொரோனோ நோய்த்தொற்று மீட்புப்பணிகளுக்காக நாட்டு மக்களிடம் பண உதவி கோரும் முதன்மை அமைச்சர் மோடி, 68 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலிக்காது விடுவிக்க வேண்டிய மர்மமென்ன? அப்பாவி ஏழை, எளிய மக்களின் சேமிப்பு மற்றும் கடன் தொகையில் கறாராக நடந்து கொள்ளும் அரச மேலான்மை, பெருமுதலாளிகள் தொடர்பில் மட்டும் பெட்டிப் பாம்பாய் பதுங்குவதும், சாமரம் வீசி சேவகம் புரிவதும் ஏன்? எதற்காக?

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் போது தனிப்பெரு முதலாளிகளின் நலனையே முதன்மைப்படுத்துகிறார்கள் என்றால் இந்த ஆட்சியதிகாரம் யாருக்கானது? வாக்குச்செலுத்திய மக்களுக்கானதா? தேர்தல் நிதியளித்த தனிப்பெரு முதலாளிகளுக்கானதா? யார் பதில் சொல்வது? பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்துக் கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

அப்போது எவ்விதப் பதிலுமளிக்காமல் நழுவிய நடுவன் அரசின் நயவஞ்சகம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. சாகேத் வாகலே என்பவர் தாக்கல் செய்த மனுவிற்குப் பதில் தந்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்தாண்டு செப்டம்பர் 30 வரை நிலுவையிலிருந்த பெருமுதலாளிகள் 50 பேரின் 68 ,000 கோடி ரூபாய் வரையிலான வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்து, விசய்ய் மல்லையா தொடங்கி யார் யாருக்கு எத்தனை கோடி ரூபாய் என்கிற தகவலையும் அளித்துள்ளது.

அதன்படி, சராசரியாக ஒரு நபருக்கு 1,300 கோடிக்கும் மேல் கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இத்தொகையானது பல மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா பேரிடர் மீட்பு பணத்தை விட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிகாரக் குவிப்பிலும், தாந்தோன்றிப் போக்கிலும், முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டிலும் ஈடுபட்டு, பிழையான முடிவுகளாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டு மக்களை வாட்டி வதைத்துச் சுரண்டலில் ஈடுபடும் இந்த கொடுங்கோன்மை நடுவன் அரசு வீழ்ந்தொழியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

என ஆர் எஸ் எஸ் வழிநடத்தும் நடுவன் அரசிற்கு தெரிவித்துக் கொள்வதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: